40 வயதா? வொர்க் அவுட் ப்ளீஸ்- ஸ்ரீதேவி மோகன்

20 அல்லது 30 வயதுகளில் இருக்கும் பெண்கள் கலந்து கொள்ளும் ‘மிஸஸ் சென்னை’ போட்டியில் தன்னுடைய 46 வயதில் கலந்து கொண்டு 5 சுற்று வரை வெற்றி பெற்று போட்டியின் இறுதிக்கட்டம் வரை சென்றிருக்கிறார் ஃபிட்னஸ் பயிற்சியாளர் சுசீலா. 40 வயதானாலும் பெண்கள் ஃபிட்னஸோடு இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

“பெண்கள் பொதுவாகவே தன் உடல் ஆரோக்கியத்தில் பெரிதாக கவனம் செலுத்துவதே இல்லை. அதிலும் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் தன் உடம்பை குறித்து அக்கறை கொள்வதில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், கர்ப்பப் பையில் நீர்க்கட்டி போன்ற வியாதிகள் வந்த பிறகு மருத்துவர்கள் வலியுறுத்திய பின்னர் தான் வாக்கிங் செல்கின்றனர்.

ஆனால் அப்போதும் கூட வெறும் வாக்கிங் மட்டும் செல்கின்றனர் என்பதால் உடம்பில் ஆரோக்கியப் பிரச்னைகள் பெரிய அளவில் குறைவதில்லை. சரியான சத்துள்ள உணவுகளையும் பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை. அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட பெண்கள் தங்கள் உடல் நலனில் காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெண்களுக்கு தங்கள் உடல்நலனில் விழிப்புணர்வு கட்டாயம் தேவை.

முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகள் அதிகம் செய்தனர். உடல் உழைப்பு அதிகமாக இருந்த காரணத்தினாலும் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் உட்கொண்ட காரணத்தினாலும் உடல் வலுவோடு  இருந்தனர். இந்த காலத்திலும் படிக்காத பெண்கள் வீட்டு வேலைகள் அல்லது கடினமான வேலைகள் செய்கின்றனர். அதனால் ஓரளவு ஆரோக்கியமாக இருக்கின்றனர். ஆனால் அவர்களும் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்வதில்லை.

ஃபெடன்ரிக் லைஃப் ஸ்டைல் (fedentric life style) எனப்படும் பொதுவாக பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலை செய்யும் பெண்களுக்கு உடல் உழைப்பு குறைவாகவே இருக்கிறது. அதனால் பெண்கள் உடலை வலுவாக்கும் பயிற்சிகளை (ஸ்ட்ரெங்தெனிங் டிரைனிங்) கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஜிம்முக்குச் செல்வதை எல்லாம் விரும்புவதில்லை. சிலருக்கு விருப்பம் இருந்தாலும் தயக்கமிருக்கிறது. அது இளம் வயது பெண்களுக்கானது என்று நினைக்கின்றனர். ஆனால் நாற்பது வயதிலும் கட்டாயம் பயிற்சிகள் தேவை. இன்னும் கேட்டால் அந்த வயதில்தான் கட்டாயம் தேவை. காரணம் அந்த காலகட்டத்தில்தான் நம் உடம்பில் சக்தி குறையும்.

அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு நாற்பதுகளில்தான் மெனோபாஸ் பிரச்னையும் ஏற்படும். மெனோபாஸ் சமயத்தில் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படும். அப்போது உண்டாகும் பலவிதமான உடல் பிரச்னைகளை சமாளிக்க கட்டாயம் ஸ்ட்ரெங்தெனிங் டிரைனிங் மிக அவசியம். அதனால் 40 வயது பெண்களும் ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம்.

அப்படி ஜிம்முக்குச் சென்று பயிற்சி செய்ய வசதி இல்லாதவர்கள் வீட்டிலேயே உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக வீட்டில் எப்படி வெயிட் லிஃப்டிங் செய்வது என்றால் ஒரு வாட்டர் பாட்டிலை வைத்துக் கூட செய்யலாம். முதலில் அரை லிட்டர் பிறகு ஒரு லிட்டர் என அந்த வாட்டர்பாட்டிலின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துப் பயிற்சி செய்யலாம். அதுமட்டுமின்றி குனிந்து நிமிர்வது, காலை மடக்கி நீட்டுவது என பல பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்.
 
உடற்பயிற்சிகள் செய்யும் போது உடல் ஆரோக்கியம் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் மன அழுத்தமும் குறையும். அதனால் தான் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஜிம்முக்கு வருகின்றனர். பகல், இரவு என மாறி மாறி வேலை செய்வதால் அவர்களுக்கு சரியான தூக்கம், சரியான உணவுப்பழக்கம் இல்லாமல் போகிறது. அதனால் அவர்களிடையே மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது. அதனைப் போக்க ஜிம்முக்கு வருகின்றனர்.
 
உடல் உழைப்பின்றி கணினி முன்பே பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு விடும். அது பல உடல் உபாதைகளை உண்டாக்கிவிடும். அதனால் அவர்கள் குறைந்தபட்சம் வீட்டில் சில உடல் உழைப்பு தரும் வேலைகளையும் செய்வது நல்லது. அத்துடன் முறையான உணவுப்பழக்க வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதாவது உணவின் அளவை குறைக்க வேண்டும். அதே சமயம் சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும்.
 
காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். பழச்சாறுகள் சாப்பிடாமல் பழமாக சாப்பிடுவது நல்லது. காய்கறிகளை வேகவைத்தோ சூப்பாகவோ சாப்பிடலாம்  கீரை வகைகளை தினமும் சாப்பிடலாம். அல்லது வாரத்தில் மூன்று நாட்களாவது கீரை சாப்பிடலாம். எளிதாக கிடைக்கும் முருங்கைக் கீரையில் அவ்வளவு சத்து இருக்கிறது. உலர்ந்த பருப்பு வகைகளை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 2 பாதாம் வீதம் சாப்பிடலாம். கோதுமை உணவுகள், சிறுதானிய வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். கிழங்கு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஒரு நீச்சல் வீராங்கனையானவர் தான் மேற்கொள்ளும் நீச்சல் மட்டுமே தன் உடலுக்குத் தேவையான பயிற்சி தானே என்று நினைப்பதில்லை. கிரிக்கெட் விளையாடுபவர் ஓடிக்கொண்டே இருப்பதால் அதுவே உடல் பயிற்சிதானே என நினைப்பதில்லை.

தங்கள் கைகளையும், கால்களையும் வலுவாக்க தனியாகப் பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அப்படித்தான். அது போல தான் பெண்களும் வெறும் வாக்கிங் செய்வதோடு வேறு பல பயிற்சிகளையும் தங்கள் உடலை வலுவாக்க கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருப்பவர்களை கவனித்துக்கொண்டு தன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது சரியல்ல.

படங்கள்: ஆர்.கோபால்