கேக் எடு... கொண்டாடு...- பி.கமலா தவநிதி

மகிழ்ச்சியான தருணங்களில் குடும்பமாகவும் சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் இனிப்புகள் பரிமாறிக்கொண்டு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு வருகிறோம் நாம். இனிப்பு செய்யும் வேலையை இன்னும் எளிமையாக்க நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள் வருகின்றன. அவற்றையும் உடனுக்குடன் வாங்கி வீட்டில் அடுக்கும் பெண்களையும் பார்த்திருப்போம். இருந்தும் கடைகளில் விற்கும் விதவிதமான இனிப்பு வகைகளை வாங்கி உண்ணும் பழக்கமும் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. நம் அன்றாட வாழ்வில் அரங்கேறும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கேக் வெட்டி குதூகலிக்கிறோம்.

சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை கேக் என்றால் மிகவும் உற்சாகமாகி விடுவார்கள். சைவப் பிரியர்களுக்கு ஏற்ற வகையிலும் முட்டை சேர்க்காமலும் கேக் செய்யப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள் பேக்கிங் கிளாஸ் மற்றும் குக்கெரி கிளாஸ்களுக்கு சென்று வீட்டிலேயே பேக்கரி உணவுகளை தயார் செய்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கிளாஸ் எதற்கும் போகாமலே தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக யூ ட்யூப்களில் இருக்கும் வீடியோக்களை பார்த்தே வீட்டில் கேக்குகளை விளையாட்டாக செய்து வந்த ப்ரவீனா அதையே ஒரு பிசினஸ்ஸாக செய்யும் அளவிற்கு வளர்ந்திருப்பது வியப்பாக இருக்கிறது.  நாள் முழுக்க வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை மட்டுமே பார்த்து வரும் பெண்களாலேயே செய்ய முடியாத ஒன்றை, தன் கல்லூரி படிப்பையும் பார்த்துக்கொண்டு தினமும் வரும் கேக் ஆர்டர்களையும் தவற விடாமல் இரண்டையும் பேலன்ஸ் செய்து கொண்டிருக்கிறார் ப்ரவீனா ஹார்ட்டி ஜேன். 

சுயதொழில் செய்யும் பெண்களை கவுரவிப்பதற்காக 4000  பேரில் 150  பெண்கள் சுய சக்தி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த 150 பெண்களில் இவரும் ஒருவர். இதைப்பற்றி ப்ரவீனாவிடம் கேட்டபோது... “வீட்டில நான், அண்ணா, அம்மா, அப்பானு நாங்க நாலு பேருதான்.  எல்லாருக்கும் நான் ரொம்ப செல்லப் பொண்ணு. அப்பா பிசினஸ் பண்றார். என்னையும், அண்ணாவையும், அப்பாவையும் வீட்டையும் சேர்த்து அம்மா பார்த்துக்கறாங்க. 

இப்ப லயோலா காலேஜ்ல எம். ஏ. சோஷியாலஜி பைனல் இயர் படிக்கிறேன்.  பி.ஏ. படிக்கும் போது நெயில் ஆர்ட்ல இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. அதுனால அதுக்கு தேவையான பொருட்களை லீவ் கிடைக்கும்போது சென்னை முழுக்க அலசி வாங்கிடுவேன். தினமும் யூட்யூப்ல புதுசு புதுசா நெயில் ஆர்ட் பார்த்துட்டு காலேஜ்ல டைம் கிடைக்கும்போதெல்லாம் ஃபிரெண்ட்ஸ்க்கு போட்டு விடுவேன். நல்லா பண்றேனு நிறைய ஃபிரெண்ட்ஸ் என்கிட்ட  நெயில் ஆர்ட் போட்டுக்குவாங்க. 

அப்புறம் காலேஜ்ல ரெண்டு தடவ ஸ்டால் போட்டேன்.  அந்த ஸ்டால் போட்டப்ப காலேஜ்ல பாதிக்கும் மேல என்கிட்ட  நெயில் ஆர்ட் செஞ்சுக்கிட்டாங்க. அப்புறமா கிறிஸ்துமஸ் வந்தப்ப அதேபோல யூட்யூப்ல பார்த்து கேக் ட்ரை பண்ணலாம்னு ஐடியா இருந்துச்சு. கேக் செய்யலாம்னு இருக்கேனு வீட்ல சொன்னப்ப சரினு உடனே ரெடிமேட் கேக் மிக்ஸ் வாங்கி குடுத்தாங்க. 

அப்ப என்கிட்ட மைக்ரோவேவ் அவன் கூட இல்ல. குக்கர்ல தான் செஞ்சேன். அது தான் நான் முதல்ல செஞ்ச கேக். நல்லா வேலையா அதுல ஏதும் நான் சொதப்பல. வீட்ல எல்லாருமே சாப்டுட்டு நல்ல இருக்குனு சொன்னாங்க. ரொம்ப குஷி ஆகிட்டேன். அதுதான் ஃபர்ஸ்ட் மோட்டிவேஷன். ரெண்டாவது முறை கேக் செய்யலாம்னு தோணுனப்ப மிக்ஸ் வாங்காம வீட்லையே செஞ்சு பார்ப்போம்னு நெட்ல நிறைய சர்ச் பண்ணேன். கேக் எப்படி செய்யணும்னு நிறைய வீடியோ பார்த்தேன். ஓரளவுக்கு ஐடியா கெடச்சுது. 

அதுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கி நானே செஞ்சு பார்த்தேன். அதுவும் ரொம்ப அருமையா வந்திருந்துச்சு. அதையும் டேஸ்ட் பண்ணிட்டு நல்லா கமெண்ட்ஸ் தான் குடுத்தாங்க. அப்புறம் வாராவாரம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேற வேற டிசைன்ல செஞ்சு பார்த்தேன்.  அப்படி கத்துக்கறப்ப நிறைய வேஸ்ட் பண்ணிருக்கேன். குக்கர்ல செஞ்சதால, நாம நினைச்ச மாதிரி வராம போய்டும்.  ஆனா ஒவ்வொரு தடவ கேக் செய்யும்போதும் சின்னச் சின்ன நுட்பங்களை கத்துப்பேன். 

எங்க மாமாவுக்கு பிறந்தநாள் வந்தப்போ 50 கப் கேக் செய்யலாம்னு பிளான் பண்ணி செஞ்சேன். ரொம்ப கவனமா செஞ்சதால நல்லா வந்திருந்துச்சு.  என்னோட ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் கொண்டு போய் கொடுத்தேன். டேஸ்ட் நல்ல இருந்ததால என் ஃபிரெண்ட் தான் முதல்ல ஆர்டர் குடுத்தா. அந்த செகண்ட்ல தோணுச்சு, நாம ஏன் இத பிசினஸ்ஸா பண்ணக் கூடாதுனு.

அத பத்தி வீட்ல சொன்னப்போ, எங்க மாமா மைக்ரோவேவ் அவன் கிஃப்ட்டா குடுத்தாங்க. இத கத்துக்க கிளாஸ்னு ஏதும் போகாததால் ஒவ்வொருவாட்டியும் புதுசா ட்ரை பண்ணும்போதும் நிறைய வேஸ்ட் ஆகியிருக்கு. வீட்ல யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் கேக் செஞ்சுடுவேன். அப்புறம், தெரிஞ்சவங்க, ஃபிரெண்ட்ஸ்னு கிடைக்கற ஆர்டர் செஞ்சு குடுத்துட்டு இருந்தேன். 

பிசினஸ் நல்லா போகவும், ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம்லயும் பேஜ் ஆரம்பிச்சேன். அதுல எனக்கு நிறைய கஸ்டமர்ஸ் கிடைச்சாங்க. நான் நினைச்சுக் கூட பார்த்ததில்ல. விளையாட்டா செய்ய ஆரம்பிச்சு, இப்படி பிசினஸ் பண்ற அளவுக்கு ஆகும்னு. ஒரு வருஷமா இந்த பிசினஸ் செஞ்சுட்டு இருக்கேன். இதுவரைக்கும் முன்னூறு கேக்குகளுக்கு மேல செஞ்சுருக்கேன். தினமும் ஆர்டர் வந்துகிட்டே இருக்கும்.  சில சமயம் ஒரு நாளுக்கு பத்து ஆர்டர் கூட வரும். 

நான் பார்ட்டைம்மா பண்றதால ஒரு நாளைக்கு ஒரு கேக் செய்யறதோட சரி. நான் அதிகமா ஃபிளேவர் கேக்ஸ் பண்றதில்ல. என்ன காரணத்துக்காக கேக் வேணும்னு கேட்டு அதுக்கு தகுந்த மாதிரி கேக் செய்து தரேன்.  நிறைய வெட்டிங் கேக்ஸ் செய்துருக்கேன். நைட் ரெண்டு மணி வரைக்கும் கூட அம்மா என்கூட முழிச்சிருப்பாங்க கேக் செய்யும்போது. 

டிசைன் பொறுத்து கேக்கோட ரேட் மாறும். அதிகபட்சமா நாலு கிலோ வரைக்கும் கேக் செஞ்சு குடுத்துருக்கேன்.  கேக் செய்யறதுக்கு தேவையான பொருள் எல்லாம் அண்ணா நகர், பாரிஸ் போய் வாங்கிட்டு வருவேன். முழுக்க முழுக்க நான் மட்டுமே தான் செஞ்சுட்டு வரேன். வீட்ல யாரையும் தொந்தரவு செய்யறதில்ல. அதிகப்படியா வந்த ஆர்டர் எல்லாமே சாக்கோ டிராப்பில், ரெட் வெல்வெட் தான்.  இனிதான் நிறைய ஃபிளேவர்ஸ் கொண்டு செய்யலாம்னு இருக்கேன். காலேஜ் முடிச்சதும் முழு மூச்சா இதுல இறங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் ப்ரவீனா.