வானவில் சந்தை- அபூபக்கர் சித்திக்

தங்கமான கடன்

கடந்த மாதம், பள்ளி நண்பன் ஒருவனை நீண்ட காலம் கழித்து சந்திக்க நேர்ந்தது. பெங்களூரில் வாழ்ந்து கொண்டிருக்கிற மென்பொருளாளன். ஆச்சரியம் என்னவென்றால், ஆறு மாதங்களுக்கு முன் அவன் தனது வேலையை விட்டு விட்டான். நடிப்பு ஆர்வத்தில். ஏற்கனவே பல குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறான். பிறர் குறும்படங்களிலும் நடித்ததுண்டு. ஒருவனின் முப்பதுகளின் பிற்பகுதியில், இது ஒரு குறிப்பிடத்தக்க நிதி சார்ந்த ரிஸ்க்தான். நான்காம் வகுப்பு போகும் ஒரு பெண் குழந்தையுடன் மனைவியும் பெற்றோரும் அவனை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

பேசியதில் உற்சாகமாகவே இருந்தான். வீட்டுக் கடன் உட்பட அனைத்தையும் அடைத்தாயிற்று. கொஞ்சம் நிலமும், சேமிப்பும் உண்டு. சில வருடங்கள் வருமானம் இல்லாமல் தாக்குப் பிடிக்கலாம். அனைத்திலும் என்னை வியப்பில் ஆழ்த்தியது அவன் தனது வீட்டுக் கடனை அடைத்த விதம். வீட்டுக் கடன் முடிய இன்னும் பல ஆண்டுகள் இருக்கையில், பல லட்சம் ரூபாய்க் கடனை அவன் அடைத்த விதம் என்பது ஒரு வகையில் பாராட்டுக்குரியது. அவன் தனது மனைவியின் நகைகளை விற்று அதைச் செய்திருக்கிறான்.

அதைப் பரிந்துரைத்தது அவனது மனைவி. நடுத்தரக் குடும்பங்கள் கடன் வாங்காமல் வாழ்வை நடத்துவது என்பது இப்போது காலத்திற்கு ஒவ்வாத நடைமுறை என ஆகிவிட்டது. வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றான வீட்டை மட்டுமல்ல, தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ், மொபைல்போன் போன்ற சாதாரண மின் சாதனங்களைக் கூட கடனில் வாங்குவது இயல்பானதாகிவிட்டது. சிறிய கடன்களான இவையெல்லாம் ஒருவரின் வருமானத்தைக் காட்டி பெறப்படுகிறது.

இவ்வாறல்லாமல், ஒருவர் சட்டென்று பணத்தைப் புரட்ட வேண்டுமென்றால் அதற்குத் தோதானது தங்க நகைக் கடன் தான். பத்து நிமிடத்தில் நகையை வைத்துவிட்டு பணத்தோடு வரலாம். முன்பெல்லாம் சிறிய ஊர்களிலெல்லாம் கூட அண்டா, சட்டி பானைகளை வைத்து விட்டுப் பணம் பெற்றுச் செல்லும் ஓர் அடகுக் கடை இருக்கும். உடனடி நிதித் தேவைக்கு அதுவே வழி. இப்போது, தனியார் நகைக் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஊருக்கு நான்கு இருக்கின்றன.

பொதுவாகவே, நகையை அடகு வைப்பது, திட்டமிடப்படாத அல்லது எதிர்பாராத நிதித் தேவையின் பொருட்டே நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தனது மகளின் உயர்கல்விக்கு என எதையும் நீண்ட காலமாகச் சேமிக்கவில்லையென்று வைத்துக் கொள்வோம். உயர்கல்விக்கெனத் தேவைப்படும் பெரும் பணம் இல்லாமல் போகும்போது, நகையை அடகு வைக்கலாம். இங்கே பிரச்னை, முன் கூட்டியே திட்டமிடாததுதான். சரியான, நீண்ட கால நிதித் திட்டமிடல் மூலம் இதைப் பெருமளவு தவிர்க்க முடியும்.

எதிர்பாராத செலவுக்கு எடுத்துக்காட்டாக, மருத்துவச் செலவுகளையோ விபத்துகளையோ சொல்லலாம். இதற்குமே சரியான காப்பீட்டுப் பாதுகாப்பு இருந்தால், பெருஞ்செலவைத் தவிர்த்து விடலாம். மூன்றாவதாக ஒன்றிருக்கிறது. வேறு சொத்துக்களை வாங்க வேண்டியோ, முதலீடு செய்ய வேண்டியோ நகைக்கடன் பெறுவது. இது ஒரு சொத்தை அடமானம் வைத்து இன்னொரு சொத்தை வாங்குவது தான். உதாரணமாக, நல்ல விலைக்கு ஒரு நிலம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம், கையில் பணம் இல்லாத பட்சத்தில் இருக்கும் நகைகளை வைத்து அதை வாங்குவது. அடுத்ததாக, ஒரு தொழிலில் முதலீடு செய்வதன் பொருட்டு பெறப்படும் நகைக்கடன்.

உண்மையில் நகைக்கடன் தேவையா? இதை மேலே உள்ள வெவ்வேறு சூழல்களோடு பொருத்திப் பார்ப்போம். சரியான திட்டமிடல் இல்லாத உயர்கல்வி போன்ற தேவைகளுக்கு (கல்விக்கடன் கிடைக்காத சூழலில்) நகையை அடகு வைத்துப் பணம் திரட்டுவதை விட நகைகளை விற்று விடுவது நல்லது. ஏனென்றால் குறுகிய காலத்திற்குள் (சில மாதங்களில்) நகையை மீட்காத பட்சத்தில் வீணாக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும்.

பொதுவாகவே ஓரிரு வருடங்களுக்கு மேல் வட்டி கொடுக்க வேண்டியிருக்கும் சூழல் இருந்தால், அடகு வைப்பதை விட நகைகளை விற்றுப் பணம் திரட்டுவதே மேல். இதுவே எதிர்பாராத விபத்து / மருத்துவச் செலவுகளுக்கும் பொருந்தும். குறுகிய காலத்தில் நகைகளை திருப்ப முடியாமல் வட்டி கட்டுவதை விட, அவற்றை விற்றுவிட்டால் வட்டியாவது மிஞ்சும். பணம் எப்போது வருகிறதோ, அப்போது புதிய நகைகளை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

ஆனால், இவையெல்லாம் நகையை மீட்பதற்கான பணம் எப்போது வரும் என்ற கால அவகாசத்தைப் பொருத்ததுதான். அடுத்ததாக, வேறு ஒரு சொத்து வாங்குவதன் பொருட்டோ, தொழிலில் முதலீடு செய்வதன் பொருட்டோ தங்க நகைகளை என்ன செய்வது என்பது. முந்தைய சூழல்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. இங்கே லாபத்தை எதிர்நோக்கிப் பணம் திரட்டப்படுகிறது.

ஆகையால், நகையை அடகு வைப்பதை விட விற்று விடுவதே மிகவும் ஏற்புடையது. ஏனென்றால், சேமிக்கப்படும் நகைக்கடன் வட்டி மொத்தப் பரிவர்த்தனையின் லாபத்தை அதிகரிக்கத்தானே செய்யும்.  முதலீட்டின் நோக்கமும் அதுதானே? இந்தியக் குடும்பங்களில், தங்க நகைகள் வெறும் பண மதிப்பு சார்ந்த பொருட்கள் மட்டுமில்லை. அவை குடும்ப வளத்தின் குறியீடு.

மங்களத்தின் குறியீடு. குறிப்பாகப் பெண்கள் அதைப் பாதுகாக்கும் பொருட்டு மிகுந்த கவனத்துடன் இருப்பதைக் காணமுடியும். தங்க நகைகளின் மேல் உணர்வு ரீதியான பிடிப்பையும் அவர்கள் கொண்டிருப்பது அதனாலேயே. நவீன யுகப் பெண்களுக்கு தங்க நகைகளின் மேல் விருப்பமிருந்தாலும் (பிளாட்டினம் போன்ற புதிய வகைமைகளும் உண்டு), முந்தைய தலைமுறைப் பெண்களைப் போல உணர்வு ரீதியான பிடிப்பு ஆழமாக இல்லையென்றே தோன்றுகிறது. சிலருக்கு, அது அந்தஸ்தை வெளிப்படுத்தும் வெறும் நுகர்வுப் பண்டமென ஆகிவிட்டது போலத் தோன்றுகிறது. மாறிவரும் இந்த மனப்பாங்கு, அவர்களது நிதி சார்ந்த நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்?