நிஜம்



எப்போதும்  இரண்டு ஷிஃப்ட்  வேலை!  ஸ்வாதி பட்டாச்சார்யாதாமதமாக வீடு திரும்பும் ஆண்களுக்கு எல்லாவிதமான தனிச் சலுகைகளும் கிடைக்கும். அது மரியாதைக்கான குறியீடு, பெருமிதம் கொள்ளும் தருணம்...

நான் இன்று வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிற நேரம் மாலை 5:30. இதுதான் என் பணி வாழ்க்கையின் கேவலமான ரகசியம்... இந்த 22 வருட கால விளம்பரத்துறை பணியில் ஜே.டபிள்யூ.டி. நிறுவனத்தில் ஒருபோதும் இரவில் நான் வேலை பார்த்ததில்லை. இது நம்ப முடியாத கட்டுக்கதையாகத் தோன்றலாம். இதுதான் உண்மை... நம்பினால் நம்புங்கள்! கிட்டத்தட்ட போதைப் பழக்கத்துக்கு ஆட்படுவது போன்ற கெட்ட பெயர் தரக்கூடிய ஒரு பழக்கம் அது. எவ்வளவு நேரமானாலும் இருந்து வேலையை முடித்துவிட்டுப் போகிறவர்களை நான் விரும்பிய காலம் ஒன்று இருந்தது. அவர்களெல்லாம் மென்மையானவர்களாக, கவர்ச்சியானவர்களாக, என்னைவிட புத்திசாலித்தனம் நிரம்பியவர்களாக அப்போதெல்லாம் எனக்குத் தோன்றினார்கள். அது கிடக்கட்டும்... இப்போதும் நான் அதிகபட்சமாக 7 மணிக்குள்ளாக என் பேக்கையும் டிபன் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறேன். அது என்னவோ என்னால் இரவுப் பொழுதை அலுவலகத்தில் கழிக்க முடிவதில்லை.

என்னோடு வேலை பார்க்கும் ஆண் சகாக்களில் பல பேர் என்னை ‘வேலை பார்க்க சோம்பல்படுபவள்’ என்று தீர்மானித்திருப்பதையும் நான் அறிவேன். 5:30 மணி வாக்கில் கடிகாரத்தைப் பார்த்து விட்டு அவர்கள் என்னிடம் சொல்வார்கள்... ‘கௌம்பற நேரம் வந்துடுச்சு போல?’ ‘அலுவலகத்திலேயே தங்கிவிடுவது இதமான சூழலைத் தரும் விஷயம்’ என்று ஆண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இந்த உலகத்துக்கே தலைவர் என்பது மாதிரியான தொனியில் அவர்கள் மனைவிகளையோ அல்லது கேர்ள்ஃப்ரண்டையோ தொலைபேசியில் அழைப்பார்கள்... ‘‘நான் வர்றதுக்கு லேட்டாகும்’’ என்று சட்டென சொல்வார்கள். ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் ஒரு டாக்டர் அல்லது தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீரரின் குரலைப் போல அவர்களின் குரல் அவசரமாக ஒலிக்கும். அவர்களின் தொலைபேசி உரையாடல் சுருக்கமானதாக, இறுக்கமானதாக, குறுகியதாக இருக்கும். தொலைபேசியில் பேசி முடித்த பிறகு அவர்களை நான் பார்த்திருக்கிறேன்... பொழுதைப் போக்குவதற்காக சாவகாசமாக புகைப்பிடித்துக் கொண்டிருப்பார்கள்... ஆபீஸ் பாயை எதையாவது வாங்கி வரச் சொல்லி  அனுப்புவார்கள்... சச்சின் ஓய்வு பெற்றது போன்ற ஏதோ ஒரு விஷயத்தை விவாதப் பொருளாக்கி, விடாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள்... போலந்து ஆர்ட் ஃபிலிமில் நாம் பார்த்திருப்பதை விட மெதுவாக, மிக மெதுவாக டீயை ருசித்துக் கொண்டிருப்பார்கள்... அதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு வேலை மேலுள்ள குழப்பம் அல்லது பணிச்சுமையாகக் கூட இருக்கலாம்.

அடுத்து சாட்டிங், கேம்ஸ் என அனைத்துக்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவார்கள்... எல்லாவற்றிலும் அர்த்தம் பொதிந்த ஒரு காரணம்(!) அவர்களுக்கு இருக்கும். வேலை என்பது பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஒரு கார்பரேட் கிளப்... ஆனால், நிச்சயமாக கிளப். சாப்பிடலாம்... விளையாடலாம்... விளக்கைக்கூட மங்கலாக்கிக்
கொள்ளலாம். என்ன... நீச்சல் குளம் மட்டும் இருக்காது!

ஆண்களைப் போல பெண்களால் ஏன் வேலை நேரத்துக்குப் பிறகான பொழுதை அனுபவிக்க முடிவதில்லை? காரணம் இருக்கிறது. தாமதமாக வீடு திரும்பும்போது நாங்கள் குற்றவுணர்ச்சி அடைகிறோம். குழந்தைகளோ, அம்மாவோ, வீட்டிலுள்ளவர்களோ எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து கொண்டு வேதனைப்படுகிறோம். பணி வாழ்க்கை என்று வரும்போது நம்முடைய தோழிகள்கூட மிகவும் கனிவானவர்களாக இருப்பதில்லை என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அங்கேயே இருக்க வேண்டும், இருந்து வேலையை முடிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய குழந்தைகளையும் வீட்டு நாய்களையும் போல... நம்முடைய பணியாளைப் போல...

ஆண்களுக்கோ இது வேறுவிதமான கதை. ஒவ்வொரு இந்தியத் தாயும் இப்படித்தான் நினைத்துக் கொள்கிறாள்... ‘என் பையன் எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தலைன்னு சொல்றான். ஆபீஸ்ல வேலை பளு ஜாஸ்தியா இருக்குங்கறான். கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்படுறான்...’ அதனால்தான் ஆண்கள் வேலை வேலை என்று அலுவலகத்திலேயே பழியாகக் கிடக்கிறார்கள். ஆண்கள் கடுமையாக உழைப்பவர்கள் என்கிற கட்டுக்கதையை நிலைத்திருக்கச் செய்ய அவர்களுக்கு இது உதவுகிறது. வேலையே இல்லையென்றாலும் கூட ஓர் ஆண் கூடுதலாக 2 மணி நேரம் அலுவலகத்தில் இருந்துவிட்டு வந்தால் போதும்... ஒரு கதாநாயகனுக்கு உண்டான வரவேற்பு வீட்டில் கிடைக்கும். மனைவி சுடச்சுட டீ போட்டுத் தருவாள். வரவேற்பறையில் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தால் அம்மா கடுமையான குரலில் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்வார். ஆண்கள் இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினால் குழந்தைகள் ஏற்கனவே உறங்கியிருப்பார்கள். அவர்களே விருப்பப்பட்டால் கூட குழந்தைகளுக்கு வீட்டுப்பாடத்தில் உதவ முடியாது. இரவு 10 மணிக்கு வருவது இன்னும் சிறந்தது. கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமோ, வேறு வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டிய தேவையோ, ஏன்... வீட்டு நாயை வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டியது கூட இல்லை.

தாமதமாக வீடு திரும்பும் ஆண்களுக்கு எல்லாவிதமான தனிச் சலுகைகளும் கிடைக்கும். அது மரியாதைக்கான குறியீடு, பெருமிதம் கொள்ளும் தருணம். அதனால்தான் அவர்கள் தாமதமாக வீடு திரும்புவதில் பெருமைப்படுகிறார்கள். அலுவலகத்திலேயே சதா சர்வ காலமும் இருப்பதில் பெருமைப்படுகிறார்கள். தாங்கள் வீட்டில் இல்லாத நேரங்கள் குறித்துப் பெருமைப்படுகிறார்கள். இது பெண்களுக்கு சரி வருமா?எங்களைப் பார்க்காமல் குழந்தைகள் தூங்கச் செல்வது என்பது எங்களை நாங்களே கொன்று கொள்வதற்குச் சமம். நாங்கள் இல்லாமல் குழந்தைகள் தாங்களே செய்த மோசமான வீட்டுப்பாடத்தைப் பார்த்து வகுப்பாசிரியர் எங்களை என்ன நினைத்துக் கொள்வாரோ என்று நாங்கள் பயப்படுகிறோம். நாங்கள் இல்லாதபோது, யாரோ ஒரு குழந்தையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு எங்கள் பிள்ளைகள் பரிசுப் பொருள் எதுவும் இல்லாமல் சென்று எங்களை அவமானப்படுத்தி விடுவார்களோ என்று பயப்படுகிறோம். அதனால்தான் நாங்கள் சரியான நேரத்துக்கு வீடு திரும்புகிறோம். வீட்டில் நாங்கள் செய்ய வேண்டிய வேலை எக்கச்சக்கமாக இருக்கிறது. இரவெல்லாம் அந்த வேலைகளை நாங்கள் செய்கிறோம். தன்னந்தனியாக அவற்றைச் செய்கிறோம். யாரிடமும் வெளிக்காட்டாமல், யாரிடமும் சொல்லாமல் மௌனமாகச் செய்கிறோம். இந்தப் பாதையில்தான் நாங்கள் செல்கிறோம். தோழிகளே... அடுத்த முறை வேலை நேரம் முடிந்தவுடன் குறுகிப் போய் நிற்காதீர்கள். எல்லோரையும் நிமிர்ந்து நேருக்கு நேராகப் பார்த்தபடி, தைரியமாகக் கிளம்புங்கள். பெண்களான நமக்கு இரண்டு ஷிஃப்டு வேலை... ஆண்களுக்கு அப்படி இல்லை!

(சர்வதேச விளம்பர நிறுவனமான ‘ஜே.டபிள்யூ.டி.’ இந்தியாவில், ஸ்வாதி பட்டாச்சார்யா நேஷனல் கிரியேட்டிவ் டைரக்டராக பணிபுரிகிறார்)