தினம் 10 மணி நேரம் பயிற்சி!



சாய்னா நெஹ்வால்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றதால் உற்சாகமாக இருந்தார் சாய்னா. ‘‘தென்கொரியாவுக்கு எதிரான அரை இறுதியில், முதல் ஒற்றையர் ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றதும் ஃபைனலுக்கு நிச்சயமாக முன்னேறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக சிந்து, துளசி இருவரும் போராடித் தோற்றதால் வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது. ஆனாலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த பதக்கம் என்பதில், எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சிதான்’’ என்று புன்னகைத்தவர் கிட் பேக் எடுத்துக் கொண்டு பயிற்சிக்காகப் பறந்தார்.

‘‘தேசிய கீதம் பாடும்போது புத்துணர்வும் உத்வேகமும் பிறப்பதாக சாய்னா சொன்னப்போ எனக்கு பூரிப்பா இருந்தது!’’

சங்கர் பார்த்தசாரதி

‘‘எவ்வளவு பெரிய போட்டியில் விளையாடி விட்டு வந்தாலும், ஒரு நாள் கூட ஓய்வெடுக்கமாட்டாள். பிராக்டீஸ் செய்யாம அவளுக்கு தூக்கமே வராது’’ என்று தொடர்ந்தார் அப்பா ஹர்வீர். ‘‘பாரத் பெட்ரோலியத்துல ஸ்காலர்ஷிப் சாங்ஷன் ஆனாலும், சாய்னாவுக்கான செலவு எகிறிகிட்டே இருந்தது. 1999ல் இருந்து 2004 வரை ரொம்பவே சிரமப்பட்டேன். பேங்க் அக்கவுன்ட்ல கொஞ்சம் கூட பணம் இருக்காது. சுத்தமா வழிச்சு எடுத்துடுவேன். மனைவிக்கு உடம்பு சரியில்லேன்னு, பல தடவை பி.எஃப். கணக்கை குளோஸ் செஞ்சிருக்கேன். ஐம்பதாயிரம், லட்சம்னு எடுத்தாலும் உடனடியா செலவாகிடும். ‘சாய்னாவுக்காகத்தான் எடுக்கறேன்’னு ஆபீஸ்ல எல்லோருக்கும் நல்லா தெரியும்.

‘பார்த்து செய்யுப்பா... பின்னாடி கஷ்டப்பட போற’ என்று நண்பர்கள் கவலையோடு அட்வைஸ் செய்வாங்க. சாய்னாவுக்கு அந்த வயசுல இது பத்தியெல்லாம் எதுவுமே தெரியாது. புரியற வயசும் இல்ல. நாங்களும் அவ முன்னாடி பண விஷயத்தை பேச மாட்டோம். சாய்னாவோட சேர்ந்து உஷாவும் போறதால, வெளிநாட்டுல நடக்கற ஒரு சாம்பியன்ஷிப்புக்கு போய்ட்டு வந்தாலே 30 ஆயிரத்துல இருந்து 50 ஆயிரம் வரை செலவாகும்.

வருஷத்துல இந்த மாதிரி பத்து போட்டின்னா எப்படி சமாளிக்க முடியும்? தட்டுத் தடுமாறிதான் பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். 2005ல, ‘மிட்டல் ஃபவுண்டேஷன்’ சாய்னாவுக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தாங்க. வருஷத்துக்கு 25 லட்சம் ரூபாய். ஆனா, செலவாகுற தொகைக்கு பில், வவுச்சர் எல்லாம் காட்டித்தான் பணம் வாங்க முடியும்.

எப்படியோ, இந்த உதவியால கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. 2009ல் பெரிய பிரேக் கிடைச்சது. ‘டெக்கான் கிரானிக்கிள்’ சேர்மன் ரவி ரெட்டி சார், ஒரு நாள் அவரோட பஞ்சாரா ஹில்ஸ் வீட்டுக்கு கூப்பிட்டார். அவரோட பொண்ணு அஞ்சனாவோட சாய்னா பல முறை விளையாடி இருக்கா. அருமையான விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தார். ‘சாய்னாவுக்கு யார் ஸ்பான்சர் செய்யறாங்க? எவ்வளவு கொடுக்கிறாங்க?’ என்று கேட்டார். ‘மிட்டல் ஃபவுண்டேஷன்’ பத்தி சொன்னேன். ‘சாய்னா என்னோட பொண்ணு... அவளுக்கு நான் ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்’னு பிராமிஸ் செய்தார்.

‘மிட்டல் ஃபவுண்டேஷன்’ நிர்வாகிகளோட பேசி பர்மிஷன் வாங்கினேன். 2001ல் புல்லேலா கோபிசந்த் ஆல் இங்கி லாந்து பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரகாஷ் படுகோன் 1980ல சாதிச்சதுக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது அமைஞ்சது. கோபிசந்த்துக்கு அப்போ 27 வயசு. ஒரு விபத்துல படுகாயம் அடைஞ்சு முழங்கால் மூட்டு ஆபரேஷன் செஞ்சுகிட்ட பிறகும், மன உறுதியோடு விளையாடி ஜெயிச்சு காட்டினார். டென்மார்க்கின் நம்பர் 1 பிளேயர் பீட்டர் கடே, சீனாவின் சென் ஹாங் போன்ற மிகப்பெரிய வீரர்களையெல்லாம் வீழ்த்தி பிரமிப்பூட்டினார்.

அவர் நாடு திரும்பியபோது ஆந்திரா முழுவதும் ஒரே கொண்டாட்டம். ஆந்திரா பேட்மின்டன் சங்கம் சார்பில் பிரகாசம், கிருஷ்ணா, நெல்லூர், குண்டூர் மாவட்டங்களில் 100 கார்கள் அணிவகுக்க நாலு நாள் ஊர்வலமா அழைச்சிட்டுப் போய் அமர்க்களப்படுத்தினாங்க. இந்த ஊர்வலத்துல பொதுமக்கள் கொடுத்த
நன்கொடையே 14 லட்சம் ரூபாய் சேர்ந்துச்சு. ஆந்திர அரசும் தாராளமா ரொக்கப் பரிசு அறிவிச்சு கவுரவித்தது. பயிற்சி மையம் அமைக்கறதுக்காக நிலம் கூட ஒதுக்கினாங்க.

இதையெல்லாம் பார்த்த இளம் பேட்மின்டன் வீரர், வீராங்கனைகளுக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது. சாய்னா எப்போ பார்த்தாலும் இது பத்தியே பேசிக்கிட்டு இருப்பா. கோபியோட அந்த ஒரு வெற்றி ஆந்திரா முழுக்க பேட்மின்டன் புரட்சியே ஏற்படக் காரணமா இருந்தது. இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட  இண்டோர் ஸ்டேடியங்கள், 18 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் என்று மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கு.2003ல் தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற கோபிசந்த், பயிற்சியாளராக முடிவு செய்தார். ஐதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்துல முதல் பயிற்சி முகாம் நடத்தினார். 25 பசங்க அதுல கலந்துக்கிட்டாங்க.  

2004 ஏப்ரல், தெலுங்கு புத்தாண்டு தினத்துல கச்சிபோலி ஸ்டேடியத்தில் தன்னோட பயிற்சி மையத்தை முறைப்படி தொடங்கினார். அதுலே சேர்ந்த முதல் 20 பேர்ல சாய்னாவும் இருந்தா. அப்போ அவளுக்கு 14 வயசு. கோவர்தன் சார்தான் பேரன்ட்ஸ்கிட்டே பேசி தங்கள் குழந்தைகளை கோபிசந்த்திடம் பயிற்சிக்கு அனுப்ப சம்மதிக்க வச்சார்.

ரொம்ப நாள் அங்கயே தொடர முடியாதுங்கறதால, ஸ்டேடியத்துக்கு பக்கத்துலேயே தன்னோட சொந்த பயிற்சி மையத்தை கட்டத் தொடங்கினார் கோபிசந்த். மொத்தம் 13 கோடி ரூபாய் செலவு! வீட்டைக் கூட 3 கோடிக்கு அடமானம் வச்சார்னு கேள்விப்பட்டேன். தொழிலதிபர் நிம்மகடா பிரசாத் 5 கோடி நன்கொடை கொடுத்தார். ‘புல்லேலா - கோபிசந்த் நிம்மகடா ஃபவுண்டேஷன் பேட்மின்டன் அகாடமி’ன்னு பேர் வச்சாங்க.

செகந்திராபாத்லேர்ந்து கச்சிபோலி 23 கிலோ மீட்டர். அதிகாலைல சாய்னாவ கூட்டிக்கிட்டு 25 நிமிஷத்துல போய் சேர்ந்தேன். நாங்க அகாடமிக்குள்ள அடியெடுத்து வச்சப்போ, தேசிய கீதம் ஒலிச்சிகிட்டிருந்தது. ‘ஒவ்வொரு நாளும் பயிற்சி தொடங்குறதுக்கு முன்னாடி, எல்லா பிளேயர்சும் சேர்ந்து நேஷனல் ஆந்தம் கட்டாயம் பாடணும்’கிறது கோபியோட ஆர்டர். சாய்னா ரொம்ப சின்சியரா பாடுவா. அப்படி பாடும்போது தனக்குள்ள ஒரு புத்துணர்வும் உத்வேகமும் பிறப்பதாக அவ சொன்னப்போ எனக்கு பூரிப்பா இருந்தது.

விளையாட்டுல இருந்து ஓய்வு பெற்றாலும், கோபிசந்த் தன்னோட ஃபிட்னஸை மெயின்டெயின் பண்றதுக்காக கடுமையா உழைப்பார். ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் வருவதற்கு ரொம்ப முன்னாடியே, அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோர்ட்ல இருப்பார். வெளியில பிளேயர்ஸோட ஃபிரண்ட்லியா பழகினாலும் பயிற்சி கொடுக்கறதுல கண்டிப்பா இருப்பார். அவர யாரும் ஏமாத்த முடியாது.

அட்மிஷனுக்காக வர்ற எல்லோரையும் சேர்த்துக்க மாட்டார். முதலில் பேரன்ட்ஸோட பேசி அவங்களோட மனநிலைய புரிஞ்சுகிட்டு அப்புறம் பசங்களோட உடல்தகுதி, ஆர்வம் எல்லாத்தையும் கவனமா அலசி அவருக்கு திருப்தியா இருந்தா மட்டுமே சேர்ப்பார். இன்னிக்கு 150 ஸ்டூடன்ட்ஸ் இருக்காங்க. மிகவும் தரம்வாய்ந்த பயிற்சி அகாடமின்னு சர்வதேச பேட்மின்டன் கூட்டமைப்போட அங்கீகாரம் கெடச்சிருக்கு.  

சாய்னா சராசரியா தினம் பத்து மணி நேரத்துக்கும் அதிகமா கோபிசந்த் அகாடமியில செலவழிக்க ஆரம்பிச்சா. அப்படி கடுமையா பயிற்சி செஞ்சதுக்கு பலன்தான், அவ இன்றைக்கு சாம்பியனா உருவாகி இருக்காங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல!’’

‘‘கோபிசந்த்துக்கு அப்போ 27 வயசு. ஒரு விபத்துல படுகாயம் அடைஞ்சு முழங்கால் மூட்டு ஆபரேஷன் செஞ்சுகிட்ட பிறகும், மன உறுதியோடு விளையாடி ஜெயிச்சு காட்டினார்...’’


(காத்திருப்போம்!)