கிச்சன் டிப்ஸ்



* ஊத்தப்பம் ஊற்றும் போது நடுவில் துவாரம் செய்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் ருசியாக இருக்கும்.

* கிழங்கு வகைகளை வேக வைக்கும் முன்பு, உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பின்பு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.

* உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது, சிறிதளவு ரஸ்க் பவுடரை தூவிவிட்டால் மொறு மொறுப்பாக இருக்கும்.

* கொழுக்கட்டை செய்ய மாவு பிசையும் போது, சிறிதளவு பால் சேர்த்துக் கொண்டால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும்.

- எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.

* குலோப்ஜாமூன் செய்யும் போது சர்க்கரைப்பாகும் அதில் கரைந்து கிடக்கும் ஜாமூன் உதிரியும் வீணாவது சகஜம். அந்த ஜாமூன் பாகில் சிறிது சிறிதாக மைதாவை சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு போல ஆனவுடன் பிசைந்து மாவை சப்பாத்திகளாக இட்டு சதுர துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்தால்  அருமையான பிஸ்கெட் ரெடி.

* பக்கோடா செய்யும் போது கடலை மாவுடன் நான்கில் ஒரு பங்கு பொட்டுக் கடலை மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென இருக்கும்.

* வடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் சிறிது ஜவ்வரிசியை போட்டு ஐந்து நிமிடம் வைத்தால் மாவு இறுகிவிடும். 

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*மில்க் மெய்ட் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.

*அடை செய்யும் போது மாவுடன் சிறிது ஜவ்வரிசி சேர்த்தால் அடை கரகரப்பாக இருக்கும்.

*கசப்பு காய்கறிகளை நறுக்கி, அரிசி களைந்த நீரில் போட்டு வைத்தால் கசப்பு தன்மை காணாமல் போய் விடும்.

*இறைச்சியில் உப்பு அதிகமாகிவிட்டால் லெமன் ஜூஸ் பிழிந்தால் சரியாகிவிடும்.

- கார்த்திக், திண்டுக்கல். 

* வாழைக்காய்க்கு  பதில்  கேரட்டை வில்லைகளாக நறுக்கி, அதில் பஜ்ஜி செய்தால் பஜ்ஜி ருசியாக இருக்கும். 

* உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, சிறிதளவு வெல்லம் சேர்த்து பாகற்காயை நறுக்கி அதில் ஊறவைத்து சமைத்தால் கசப்பு இல்லாமல் சுவையுடன் இருக்கும்.

* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது, அதிகம் புளிப்பு இல்லாத தயிரை சிறிதளவு சேர்த்தால் ருசியாக இருக்கும்.

* சப்பாத்தி மாவின் மேல் சிறிதளவு எண்ணெயை தடவி, பின்பு ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்களானாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

- யமுனா, காஞ்சிபுரம்.

* தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால், தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாது.

* ஆம்லெட் ஊற்றிய வாணலியை உப்பால் தேய்த்துக் கழுவினால் நாற்றம் இல்லாமல் இருக்கும்.

* அரிசி உப்புமா செய்யும் போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்து செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.

* ஃப்ரீசரில் ஜூஸ் டிரேக்கு அடியில் ஒரு பிளாஸ்டிக் விரிப்பைப் போட்டு வைத்தால் டிரேயை எடுக்க எளிதாக இருக்கும்.

- புனிதவதி, கோவை.

* சாம்பார் வாசனையுடன் இருக்க, கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும்.

* காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து, மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் ரோஸ்ட், சிப்ஸ் போன்றவற்றில் போட வசதியாக இருக்கும்.

* விளாம்பழ ஓட்டை கழுவி விட்டு ரசத்தில் போட்டால் ரசம் ருசிக்கும்.

* கீர் செய்யும் போது சேமியாவிற்கு பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.

- இந்திராணி தங்கவேல், சென்னை. 

* ஒரு கப் குலோப்ஜாமூன் மிக்ஸ் மாவை அதே அளவு பாலில் சிறிதளவு கேசரி பவுடர் கலந்து, கட்டியின்றி கரைத்துக் கொள்ளவும். இத்துடன் 2 பங்கு சர்க்கரை, 3 பங்கு நெய் சேர்த்து அடுப்பில் கிளறினால் சூப்பர் அல்வா ரெடி. 

* தேங்காய் பர்பி செய்யும் போது 2 தேக்கரண்டி ராகி மால்ட் சேர்த்தால் பர்பி கமகமவென்று சூப்பர் சுவையோடு இருக்கும்.

* மைசூர்பாகிற்கு கடலைப்பருப்பை மாவாக அரைக்கும் போது சிறிதளவு முந்திரிப் பருப்பையும் கூடச் சேர்த்து அரைத்தால் மைசூர்பாகின் மணமும், சுவையும் அருமையாக இருக்கும்.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

கோஸ் பருப்பு உருண்டை குழம்பு

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா 50 கிராம், வரமிளகாய் - 5, வெங்காயம் - 2, தக்காளி - 1, கோஸ் - 50 கிராம், புளிக் குழம்புத் தூள் - 1 ஸ்பூன், பூண்டு - 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நீரில் ஊற வைத்து கொரகொரப்பாக மிளகாய் போட்டு அரைக்கவும். வெங்காயம், கோஸ், மல்லித்தழை பொடியாக நறுக்கவும். புளி, உப்பு, குழம்புத் தூள் கரைக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு வதக்கி, குழம்பு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். அரைத்து வைத்த மாவில் கோஸ் கலந்து உருண்டையாக பிடித்து, குழம்பில் போட்டு, வெந்தவுடன் தேங்காய்ப்பால் விட்டு பெருங்காயம் போட்டு, மல்லித் தழை போட்டு இறக்கவும்.

- டி.கே.வேலு, புதுச்சேரி.