தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன். ‘‘நான் பிறந்தது, படிச்சது எல்லாம் திருப்பத்தூரில்தான். அப்பா 30 வருடமாக அரிசி மண்டி ஒன்றை நிர்வகித்து வருகிறார். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு TET தேர்வெழுதி ஆசிரியருக்கான பயிற்சியினை முடித்துள்ளேன். படிக்கும் போது விடுமுறை நாட்களில் நான் அப்பாவுடன் சேர்ந்து அரிசி மண்டியில் உள்ள வேலைகளை பார்த்துக் கொள்வேன். தரமான அரிசிகளை கொள்முதல் செய்வது முதல் விற்பனை செய்வது வரை அப்பாவிடம் தொழிலின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். நான் இந்தத் தொழிலுக்கு வர என் அப்பா மற்றும் கணவர் இருவரும்தான் முக்கிய காரணம். என் கணவர் என்னுடைய அத்தை மகன். என் அப்பாவின் உடன்பிறந்த சகோதரியின் மகன் என்பதால் அவர் எங்களின் அரிசி மண்டியில் தான் ஆரம்பத்தில் வேலை பார்த்து வந்தார். அவரும் என்னைப் போலவே அப்பாவிடம் அனைத்து தொழில் ரகசியங்களையும் கற்றுக் கொண்டார்.
 அதன் பிறகு அவரின் அறிவுரை மற்றும் ஆலோசனையுடன் திருப்பத்தூரிலேயே ‘ராஜா ராணி’ என்ற பெயரில் அரிசி மண்டி ஒன்றை ஆரம்பித்தார். பிறகு எங்க இருவருக்கும் வீட்டில் உள்ள பெரியோர்கள் திருமணம் நிச்சயித்தார்கள். அதன் பிறகு அரிசி மண்டியின் நிர்வாகப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு நடத்த ஆரம்பித்தேன்’’ என்றவர், அரிசி கொள்முதல் மற்றும் பிசினஸ் குறித்து பகிர்ந்தார்.
‘‘ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் இருந்து தரமான அரிசிகளை கொள்முதல் செய்வோம். அதன் பிறகு எங்களை அணுகும் அரிசி வியாபாரிகளுக்கு அரிசி மூட்டைகளை சப்ளை செய்வோம்.
எங்க மண்டிக்கு மூன்று கிளைகள் இருப்பதால், நானும் என் கணவரும் தினமும் இன்று எந்தக் கிளையின் பணியினை பார்ப்பது என்று எங்களுக்குள் வேலையினை பிரித்துக் கொள்வோம். அரிசி மண்டி அலுவலக பணிகளுக்கு எனக்கு உதவியாக பெண்மணி ஒருவரை நியமித்து இருக்கிறேன்’’ என்றவர், அரிசி மண்டி மட்டுமில்லாமல் மரச்செக்கு எண்ணெய் வியாபாரமும் செய்து வருகிறார். ‘‘சொந்தமாக தொழில் செய்வது என்று முடிவான பிறகு, ஒரே தொழிலில் ஈடுபடாமல், அதனை விரிவுப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில்தான் மரச்செக்கு எண்ணெய் விற்பனையும் துவங்கினோம். முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட செக்கு கொண்டுதான் கடலெண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இந்தத் தொழிலில் எனக்கு பக்கபலமாக இருப்பது என் கணவரின் இரு சகோதரிகள் தான்.
இதனைத் தொடர்ந்து 2014ல் ராஜா ராணி ரெசிடென்சி என்ற பெயரில் மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றையும் நிர்வகித்து வருகிறோம். இதனை என் சகோதரருடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறேன்.
இதில் மூன்று தளங்களில் 34 ஏசி அறைகள் உள்ளன. மேலும், ஏசி வசதி கொண்ட கான்பிரன்ஸ் ஹாலும் உள்ளது. இதில் திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா, தனியார் நிறுவன சந்திப்புகள் என அனைத்தும் நடத்துவதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், என் கணவரின் ரியல் எஸ்டேட் துறையிலும் அவருக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறேன்.
பெண் என்பவளை சக்திக்கு சமமாக பார்க்கிறோம். அதற்கு காரணம் அவளால் வீட்டை மட்டுமில்லை, தொழில் சார்ந்த விஷயங்களையும் சமமாக பார்த்துக் கொள்ள முடியும் என்பதுதான்.
ஆரம்பத்தில் அரசி மண்டியில் மட்டுமே நிர்வகித்து வந்த நான் இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கு தன்னம்பிக்கையும், குடும்பத்தாரின் உறுதுணையும் இருந்தால் எந்த ஒரு வேலையையும் நம்மால் செய்ய முடியும். உங்கள் மேல் நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக சாதனை படைக்க முடியும்’’ என்றார் மாலதி தாமோதரன்.
விஜயா கண்ணன்
|