மங்களம் தரும் மலர்கள்!
வாசகர் பகுதி
பெண்கள் தலை வாரி, பின்னலிட்டு பூச்சூடிக் கொண்டால் அதன் அழகே தனிதான். அளவாகவோ, அதிகமாகவோ பூச்சூடிக் கொண்டால் மங்களகரமான தோற்றத்தில் காட்சி தருவார்கள். இப்படி பூச்சூடிக் கொள்ளும் போது சில வழிமுறைகளை கையாண்டால் சாதாரண அழகு பேரழகாக மாறும்.
 * பின்னலிட்டு சடையை தொங்க விட்டுக் கொண்டால் குள்ளமான உடற் கட்டை கொண்ட பெண்கள், நல்ல அடர்த்தியான மலர் சரத்தை சூடிக் கொண்டால் மிக அழகாக இருக்கும்.
* மல்லிகை, முல்லை மலர்களை சரமாக கோர்த்து சூடிக் கொண்டால் பந்தமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.
* உயரமான தோற்றமுடைய பெண்கள் எந்த வித மலரானாலும் குறைவான அளவில் சூடிக் கொண்டாலே போதும். அழகாக இருக்கும்.
* இரட்டை இலைகளுடன் கூடிய ஒற்றை ரோஜா மலரை அணிந்தால் உயரமாக உள்ள பெண்களுக்கு கவர்ச்சியாக இருக்கும்.
* பன் கொண்டை போட்டுக் கொள்ளும் பெண்கள் கொண்டையை சுற்றி மல்லிகைப் பூச்சரத்தை சுற்றிக் கொண்டால் எழிலான தோற்றத்தை அளிக்கும்.
* ‘ரிங்’ எனப்படும் வளையம் வைத்து அமைத்துக் கொள்ளும் கொண்டைக்கு அரைச் சந்திர வடிவில் மேல்புறமாக மலர் சரத்தை சூடிக் கொண்டால் அழகாக இருக்கும்.
* உயரமான கொண்டை போட்டுக் கொண்டால் எடுப்பான வண்ணங்களில் பெரிய பெரிய பூக்களை பட்டையாக தொடுத்து சரமாக்கிக் கொண்டையை சுற்றி அணிந்து கொண்டால் எடுப்பான தோற்றமளிக்கும்.
* பிளாஸ்டிக் மணிகளால் தயார் செய்யப்பட்ட சரத்தை கொண்டையின் நடுவில் தொங்கவிட்டுக் கொண்டாலும் அழகாகவும், அம்சமாகவும் இருக்கும். உடுத்தும் உடைக்கேற்ற வண்ணத்தில் மணியை தேர்ந்தெடுத்து அணிந்தால் மேலும் அழகுக்கு அழகூட்டும்.
* வட்ட வடிவமான கொண்டை போட்டுக் கொள்பவர்கள் வட்டமான மலர்ச்சரம் அணிவதோடு, கொண்டையின் நடுவில் ஏதாவது ஒரு அழகுப் பொருளையோ, மலரையோ, ஆபரணத்தையோ அணிந்தால் சிறப்பாக இருக்கும்.
* மலர்களை தலையில் சூடிக் கொள்வது போல், பட்டு துணிகளிலும் வண்ணம் இல்லாத துணிகளிலும் தயார் செய்து விற்கப்படுகிறது. வண்ணப் பூக்களையும் அணிந்து கொண்டாலும் பேரழகாகத் தெரியும். அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்ப செயற்கைப் பூக்களை அணிந்து கொண்டாலும் எழிலாக காட்சி தரும்.
* இயற்கை மலர்களைப் போன்றே மல்லிகை, முல்லை போன்ற பிளாஸ்டிக்கினால் செயற்கை மலர்களை வாங்கி சூடிக் கொண்டாலும் புத்தம் புது மலர்களைப் போன்றே தோற்றம் அளிக்கும். நாகரீக உலகில் பண்பாட்டிற்கு ஏற்ப கூந்தலில் மலர் சூடிக் கொண்டாலே தனி அழகுதான்.
- ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.
|