மதம் வேறா இருந்தாலும் நாங்க எல்லோரும் ஒன்னுதான்!



மத மோதல்களும் மத வேற்றுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. குறிப்பாக முஸ்லீம்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் முருகன் கோவில் வளாகத்தில் முஸ்லீம் பெண்ணான தஸ்லீமா நஸ்ரின் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகளை எடுத்துள்ளார்.
மத நல்லிணக்கம் என்பதற்கு உதாரணமாக உள்ளது மதுரையில் உள்ள வெள்ளரிப்பட்டி கிராமம். மதங்கள் வேறாக இருந்தாலும் எல்லோரும் அக்கா, தம்பி என சொந்தமாக இருக்கும் கிராமம்தான் இது. இந்த கிராமத்தில் வசிக்கும் தஸ்லீமா நஸ்‌ரின் குழந்தைகளுக்கு தன் இல்லத்தில் கல்விப் பாடங்களை எடுத்து வருகிறார்.

‘‘வெள்ளரிப்பட்டிதான் என்னோட சொந்த ஊர். நான் படிச்சி வளர்ந்ததெல்லாமே இங்கதான். நான் ஒரு மாற்றுத்திறனாளி. எனக்கு படிப்பு மேல ஆர்வம் அதிகம். கல்லூரியில் படிக்கும் போது, பல சிரமங்களுக்கு ஆளானேன். உருவ கேலி செய்தார்கள். இது நான் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் விஷயம் தான். 

இருந்தாலும், கிண்டல் பார்வைகள் என்னை மனதளவில் பாதிக்கதான் செய்தது. நான் அதைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால், வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பதால், எதைப் பற்றியும் சிந்திக்காமல் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினேன். வரலாற்று துறையில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

நாங்க  ரொம்ப சாதாரண குடும்பம். கஷ்ட சூழ்நிலையில்தான் என் அப்பா என்னை படிக்க வச்சார். படித்து முடித்து வேலைக்கு சென்று அவர்களையும் வீட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதனால் அரசு வேலைக்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

நான் அரசு வேலைக்காக படிப்பதால், என் தம்பிதான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறான். வேலை கிடைக்கும் வரை என்னால் முடிந்த உதவியினை குடும்பத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறேன். மேலும் அரசு வேலைக்காகவும் படித்து வருகிறேன்’’ என்றவர் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘கொரோனா காலத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி மாலை நேரங்களில் வகுப்புகள் எடுக்க வேண்டும். பாடங்கள் செயல்முறை திட்டத்தின் அடிப்படையில் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக மூன்று நாட்கள் பயிற்சி அளித்தார்கள். நான் அந்தப் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து என் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.

இந்த திட்டத்தின் கீழ் பாடங்கள் எடுக்கும் இடம் பொது இடமாக இருக்க வேண்டும். வீட்டில் வைத்து எல்லாம் எடுக்கக்கூடாது. அவர்களே ஒரு பொது இடத்தினை தேர்வு செய்து அங்கு எடுக்க சொல்வார்கள். 

என் வீட்டு பக்கத்தில் உள்ள முருகன் கோவிலில்தான் வகுப்புகள் எடுக்கும் இடமாக கிடைத்தது. எனக்கு நடந்து செல்வதற்கு பக்கமாகவும், குழந்தைகள் வந்து செல்ல எளிதாகவும் இருந்தது’’ என்றவர், அவர் ஊரில் இரு மதங்களுக்கும் உள்ள ஒற்றுமையை பகிர்ந்தார்.

‘‘எங்க ஊரில் இரு மதத்தினர் இருந்தாலும் மக்கள் எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறோம். யாரையும் பிரித்து பார்ப்பதில்லை. எங்களின் தர்காவிற்கு அவர்கள் வருவதும், நாங்க அவர்களின் கோயில்களுக்கு செல்வது என்பது எங்க ஊரில் சகஜமான நிகழ்வுதான். அந்த பந்தம்தான் நான் வகுப்பு எடுக்க எளிதாக அமைந்தது.

என்னை கோவிலில் பாடங்களை எடுக்கச் சொல்லி தெரிவித்த போது, ‘ஊர் கோவில் பொது இடம்தான், படிப்பதற்கு குழந்தைகள் வருகிறார்கள், நீ சந்தோஷமாக வந்து பாடங்களை எடு’ என மகிழ்ச்சியோடு அனைவரும் வரவேற்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை நேரம் ஒரு மணி நேரம் வகுப்புகள் எடுப்பேன்.

விசேஷ நாட்களில் கோவிலில் பூஜை நடக்கும் போது நானும் குழந்தைகளுடன் சாமி தரிசனத்திற்கு செல்வேன். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து நான் செயல்பட்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் என்னை நேரில் அழைத்து விருது வழங்கினார். 

இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது முடிந்துவிட்டது. அதனால் நான் தற்போது என் வீட்டிலேயே மாலை நேரங்களில் வகுப்புகள் எடுத்து வருகிறேன். அதோடு அரசு வேலைக்கும் விண்ணப்பித்து தேர்வுகள் எழுதி வருகிறேன்’’ என்கிறார் தஸ்லீமா நஸ்‌ரின்.

மா.வினோத்குமார்