சிறுதானியங்களில் மால்ட் உணவுகள்!



நாம் வாழும் பரபரப்பான வாழ்க்கையில் அன்றாடம் வகை வகையான சிற்றுண்டி போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடுவது என்பது குறைந்து வருகிறது. குழந்தை மற்றும் முதியவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகள் மிகவும் அவசியம். ஆனால் நேரமின்மை காரணத்தால் பலர் ஓட்டலில் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இல்லை என்றால் இரண்டே நிமிடத்தில் தயாராகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

இவை எல்லாம் ஆரோக்கியமானதா? நம் உடலுக்கு தேவையான போதிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறதா என்று நாம் பார்ப்பதில்லை. இதனால் நாம் பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகிறோம். மேலும் உடல் சோர்வு, வேலையில் கவனமின்மை, எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்னைகளையும் சந்திக்கிறோம். 

நல்ல ஆரோக்கியமான உணவுகளை இன்றைய சூழ்நிலைக்கு கண்டிப்பாக எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் முக்கியம். ஆனால் அதனை நாம் உணவாக கொடுத்தால் அவர்கள் சாப்பிட மறுப்பதால், அதனை ரெடி டூ மிக்ஸ் முறையில் எளிதாக சாப்பிடும் வகையில் ‘தனா ஃபுட்ஸ்’ என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் தனலட்சுமி.

‘‘நான் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. படிப்பை முடிச்சிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். திருமணத்திற்குப் பிறகு என்னால் வேலையை தொடர முடியவில்லை. குழந்தைகளும் பிறந்தது. நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போது எனக்கு அம்மா ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து வளர்த்தார். என் அம்மா இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார். அதற்கு காரணம், ‘நான் அன்று சாப்பிட்ட ஆரோக்கியமான உணவுதான்’ என்பார்.

அவரைப் போல் நானும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என அம்மாவும் எனக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுத்தார். அம்மா என்னை வளர்த்தது போலவே நானும் என் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க விரும்பினேன். அவர்களுக்கும் நான் சாப்பிட்டது போல சத்துள்ள உணவுகளை கொடுத்து வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். 

அதை நான் கர்ப்பம் தரித்த முதல் கடைபிடிக்க ஆரம்பித்தேன். குழந்தை கருவில் வளரும் போதே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பாரம்பரிய அரிசி வகைகளை சாப்பிடத் தொடங்கினேன். மேலும் என்னுடைய உணவுகள் அனைத்தும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளாக இருந்தது.

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்ததும் அவர்களுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் இயற்கையாக விளைவித்த காய்கறிகளையும் கொடுத்து வளர்த்தேன். பொதுவாக குழந்தைகள் ஒரே உணவை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு உணவு சாப்பிட சுவையாகவும் இருக்க வேண்டும். 

அதற்காக நான் புதுப் புது உணவுகளையே தேடி தேடி செய்ய தொடங்கினேன். அந்த உணவுகள் எல்லாமே எனக்கு தெரிந்தவர்களுக்கும் சொன்னேன். ஒரு சிலர் என்னையே செய்து தரச்சொல்லி கேட்டார்கள். தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என செய்து கொடுக்க தொடங்கியதுதான் இன்று ‘தனா ஃபுட்ஸாக’ மாறியுள்ளது’’ என்றவர் அவர் தயாரிக்கும் பொருட்கள் குறித்து பேசினார். ‘‘நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளிலேயே நமக்கான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

முக்கியமாக மாத்திரைகளில் கிடைக்கிற சக்திகள் நமக்கு நம் உணவுகளிலேயே உள்ளது. என் கணவருக்கு நீரிழிவு பிரச்னையுள்ளது. அவருக்கும் நான் பாரம்பரிய அரிசிகளை கொடுக்க துவங்கினேன். சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வரத் தொடங்கியது. இந்த அரிசிகளில் விலை மதிக்கமுடியாத மருத்துவ குணங்கள் இருக்கிறது. 

நான் 50 வகையான அரிசி வகைகள் விற்பனை செய்கிறேன். எல்லா அரிசிகளும் இயற்கை முறையில் விளைவித்த விவசாயிகளிடம் நேரடியாக வாங்குகிறோம். பாரம்பரிய அரிசிகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சாப்பிடக்கூடியவை என தனித்தனியாக உள்ளது.

பிறந்த குழந்தைக்கு பால் குடவாழை அரிசியை முதல் திட உணவாகக் கொடுத்தல் நல்ல ஆரோக்கியமாக வளர்வார்கள். நல்லா வளர்ந்தவர்களுக்கு குடவாழை அரிசி. பெரியவர்களுக்கு பனங்காட்டு குடவாழை அரிசி கொடுக்கலாம். ஆரோக்கியமான உணவுகள் அவசியம்தான். ஆனால் அதே சமயம் எந்த உணவினை எப்படி, எந்த அளவில் சாப்பிட வேண்டும் என தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

பிறந்த குழந்தைகளுக்கு எலும்பு சக்தி அதிகரிக்க புரோட்டின் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கிறேன். சர்க்கரை உள்ளவர்களுக்கு சத்து மாவு அதனுடன் நாட்டு மருந்துகள் சேர்த்து டீ ஒன்றையும் செய்கிறேன். இந்த டீ சர்க்கரை அளவை குறைக்கும். மால்ட் வகைகள் தற்போது பிரபலமாகி வருவதால், சிவப்பு கொய்யா, சர்க்கரை பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் சிறுதானிய உணவுகளிலும் மால்ட் செய்து கொடுக்கிறேன்.

 நாட்டு வல்லாரை, கல்யாண முருங்கை, பசலைக்கீரை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்னி என ஏழு வகை கீரைகளிலும் மால்ட் தயாரிக்கிறேன். இதனுடன் பல வகையான நட்ஸ் மற்றும் விதைகளும் உள்ளது’’ என்றவர், ஒவ்வொரு பொருட்களை யும் அதன் தரம் பார்த்து வாங்குவதாக தெரிவித்தார்.

‘‘எல்லா கடைகளிலும் எல்லா பொருட்களும் கிடைக்கிறது. ஆனால் அவை இயற்கை முறையில் விளைந்தவையா என்று தெரியாது. அதனால் நான் நேரடியாக எனக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆரம்பித்தேன். அத்திப் பழங்கள் இங்குள்ள காடுகளில் பழங்குடி மக்களிடமிருந்து வாங்குகிறேன். இவை இயற்கையான முறையில் வளர்வதால், அதில் ஆரோக்கியம் அதிகம். நம் உடலில் ரத்தம் அதிகரிக்கும். புற்றுநோயும் அண்டாது.

மேலும் எந்தெந்த  உணவுப் பொருட்களை சேர்த்தால் சந்துக்கள் நிறைந்திருக்கும் என்று ஒரு பெரிய ஆய்வுக்கு பிறகுதான் நான் தயாரிக்கவே துவங்கினேன். என்னுடைய அனைத்து உணவுப் பொருட்களிலும் குங்குமப்பூ இருக்கும். 

ஆவாரம்பூ டீயில் நாட்டு மருந்துகள் கலந்து டீ யாக தயாரிக்கிறோம். மேலும் வில்வம், செம்பருத்தி, தாமரை போன்றவற்றில் டிப் டீயும் உண்டு. சிறுதானிய லட்டுகள், முருங்கைக் கீரை லட்டு, பயோட்டின் லட்டு’’ என்றவர், வரும் காலத்தில் அனைவரும் ஆரோக்கியம் மேல் கவனம் செலுத்துவது அவசியம் என்று உணர்த்துகிறார்.

‘‘வீட்டிற்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருக்கிறார். குழந்தைகளுக்கும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப உடல் சரியில்லாமல் போகிறது. அவர்களை மையப்படுத்திதான் இந்த உணவுப் பொருட்களை செய்கிறோம். குழந்தைகளுக்கு நல்ல வண்ணமாகவும் சுவையாகவும் கொடுத்தால்தான் சாப்பிடுவார்கள். கீரையினை தொடவே மாட்டார்கள். அதற்காகவே கீரை வகைகளில் லட்டு மற்றும் மால்ட் வகைகளை அறிமுகம் செய்தோம். இப்படி ஒவ்வொரு பொருட்களையும் அதன் நலன்களைப் பார்த்து பார்த்து தயாரிக்கிறோம்.

ஆரம்பத்தில் எனக்குத் தெரிந்தவர்களுக்குதான் கொடுத்து வந்தேன். அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்ல... அப்படித்தான் என் வாடிக்கையாளர் வட்டம் அதிகரித்தது. நானும் கடைகளுக்கு நேரடியாக கொடுத்தேன். முதலில் பலர் வாங்க மறுத்தார்கள். சில சமயம் அவமானங்கள், வெறுப்புகளையும் சந்தித்து இருக்கிறேன். அதை எல்லாம் தாண்டி பொருள் தரமாக இருந்தால் வரவேற்பு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

இப்போது என் பொருட்கள் அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்பனையாகிறது. நாங்க தற்போது 70க்கும் மேற்பட்ட பொருட்களை  தயாரிக்கிறோம். என் கணவர்தான் எனக்கு முழு சப்போர்ட். பேக்கிங், பேக்கெட் டிசைன், பார்சல் அனுப்புவது எல்லாம் அவர் பார்த்துக் கொள்கிறார். 

என் குழந்தைகளுக்கு நல்ல உணவை கொடுக்க வேண்டும் என்று தொடங்கிய இந்தப் பயணம் தற்போது தமிழகம் முழுவதும் என் பொருட்கள் விற்பனையாகும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை’’ என்கிறார் தனலட்சுமி.