குரலற்றவர்களின் குரல் ‘Red Walls’
திருநங்கை சமூகத்தினருக்கு நடக்கும் வன்முறைகளையும் கொடுமைகளையும் சுய ஒப்புதல் வாக்குமூலங்களாக எழுதி ‘சிவப்பு சுவர்கள்’ என்ற பெயரில் அதனை ஆவணப்படுத்தி வருகிறார் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான கல்கி சுப்ரமணியம்.  ‘‘ஒரு பெண்ணுக்கோ அல்லது குழந்தைக்கோ நடக்கும் வன்கொடுமைகளை கேள்வி கேட்டு அதற்கெதிராக போராட்டங்கள் நடத்துவது போல திருநங்கைகளுக்கு நடக்கும் போது மட்டும் ஏன் கனத்த மெளனம் நிலவுகிறது. உடல் என்பது எல்லோருக்கும் பொதுவானது தானே... எங்களுக்கும் ரத்தமும் சதையுமான உடலே இருக்கிறது’’ என பொறுமையாகவும் கூர்மையான வார்த்தைகளாலும் கேள்வி எழுப்புகிறார் கல்கி சுப்ரமணியம். தேசிய திருநர் ஆணையத்தின் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார் இவர். தற்போது நடத்தி வரும் இந்த ‘ரெட் வால்ஸ்’ புராஜெக்ட் குறித்து பேசும் போது... ‘‘நான் அடிப்படையில் ஒரு கலைஞர், எழுத்தாளர். என் எழுத்துகளும் ஓவியங்களும் திருநங்கைகள் மேல் தொடுக்கப்படுகிற வன்முறைகள் குறித்து தான் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். குரலற்றவர்களின் குரல்களை வெளிப்படுத்தும் இடம்தான் கலை.
அதனை பயன்படுத்திதான் எங்களின் வலிகளை பதிவு செய்து வருகிறேன். சமூகத்தில் வன்முறை, பாலியல் வன்கொடுமைகளில் அதிகமாக பாதிக்கப்படுவது திருநங்கை சமூகம்தான். அவர்கள் மீது நடத்தப்படும் எந்தவிதமான பாதிப்புகள் குறித்தும் கேட்க யாரும் முன் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தால்தான் தொடர்ந்து திருநங்கைகள் மீது வன்முறைகள் ஏற்பட காரணம்.
தனக்கு நடந்த கொடுமைகளை அவர்களால் வெளியில் சொல்லவும் முடிவதில்லை. காவல்துறையினரிடம் புகார் அளித்தால், ‘ஒரு பாலியல் தொழிலாளிக்கு அப்படித்தான் நடக்கும். நீ அந்த வேலையை செய்யாதே’ என்ற பதில்தான் வருகிறது. அத்துமீறியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஒருவருடைய விருப்பம் இல்லாமல் அவர் மீது நடத்தப்படும் வன்முறை சட்டத்தின் படி தவறானது. ஆனால் அந்த சட்டங்கள் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளிடம் மட்டும் செயல்படுவதில்லை. எங்களுடைய வலிகளை சொல்வதற்காக தொடங்கிய ஒரு கலை வடிவம்தான் இந்த ‘ரெட் வால்ஸ்’ புராஜெக்ட்’’ என்றார்.
‘‘இந்த சமூகத்திடம் நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் எங்களை மரியாதையாகவும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்பதுதான். ஆனால் எங்களுக்கு அது கிடைப்பதில்லை. பல வலிகளையும் கொடுமைகளையும் அனுபவித்த பிறகு தான் கடந்த 2019ம் ஆண்டில் திருநங்கைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டம், மத்திய அரசால் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் படி திருநங்கைகள் அல்லது திருநம்பிகளை காயப்படுத்தினாலோ, துன்புறுத்தினாலோ, வன்கொடுமைகள் அல்லது பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கமுடியும். பெண்கள் மீது நடக்கும் கொடுமைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் திருநங்கைகளுக்கு பெண்களை விட அதிக அளவில் பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைகள் இழைக்கப்படுகிறது. அதற்கான தண்டனை இரண்டு வருடம் சிறை மட்டுமே.
வலியும் கொடுமைகளும் இறப்புகளும் இருவருக்கும் ஒன்றாக உள்ள போதும் எங்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் கூட பாரபட்சம் காட்டியிருக்கிறார்கள். இரண்டு வருட சிறை தண்டனையும் அவர்களுக்கு தரப்படுவதில்லை. புகார் கொடுக்க செல்லும் எங்களையே குற்றவாளியாக மாற்றிவிடுகிறார்கள்.
செய்திகளில் திருநங்கைகளை துன்புறுத்தியவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகளை படித்திருக்கிறோமா என்று யோசித்து பார்த்தாலே இந்த சட்டங்கள் திருநங்கைகளுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறதா என்பதை புரிந்துகொள்ளலாம். குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கொடுக்கப்படுவதே இல்லை. சட்டப்படி குற்றம் செய்பவருக்கு தண்டனை வழங்க வேண்டும். ஆனால் எங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வழக்காக பதிவு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது. அதற்கான நீதி கிடைக்க நீதிமன்றத்தில் வாதாடுவது மிகப்பெரிய போராட்டமாகத்தான் இருக்கும். அதனால்தான் பலரும் தனக்கு நடந்த கொடுமைகளை வழக்காக பதிவு செய்வதில்லை. ஆனாலும் அவர்கள் மீது நடைபெறும் வன்முறையும் இதுவரை நின்றபாடில்லை.
தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை இந்த சமூகம் கேட்காமல் நிராகரித்தே வந்துள்ளது. எங்களுடைய குரலை நாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தான் இந்த பிராஜக்டினை தொடங்கினேன். இந்தியா முழுக்க இருக்கும் திருநங்கைகளை சந்தித்து அவர்களுக்கு நடந்த கொடுமைகளையும் வேதனைகளையும் அவர்களே சொந்தமாக எழுதி, அதன் மேல் அவர்களுடைய கைரேகைகளை பதித்து சாட்சியாக மாற்றி வருகிறோம்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எங்களின் ரத்தம் தேய்ந்த கைகள் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக ஆவணப்படுத்தி வருகிறோம். 2023ல் இந்த ஆவணப்படுத்தலுக்காக பல விருதுகளை பெற்றிருக்கிறேன். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகளை சந்தித்து அவர்களிடம் ஆவணங்களை பெற்று அதை கொண்டு கண்காட்சிகளும் நடத்தி வருகிறோம்.
கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கிறோம். இந்த ஆவணங்கள் எல்லாமே சாட்சியங்கள். தனக்கு நடந்த கொடுமைக்கான ஒப்புதல் வாக்குமூலங்கள். தமிழ்நாடு அரசு திருநங்கைகள் பாதுகாப்பு வரைவு கொள்கையில் அனுபவம் வாய்ந்த திருநங்கைகளை ஈடுபடுத்தி எங்களின் பாதுகாப்புக்கான சட்டங்களையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும். மேலும் இந்த ஆவணங்களை நீதிபதிகளுக்கும், மற்ற மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் சமூகத்தில் எங்களுக்கு அடையாளம் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் கல்கி சுப்ரமணியம்.
மா.வினோத்குமார்
|