யார்டா அந்தப் பொண்ணு ...நான்தான் அந்தப் பொண்ணு !



ஜப்பானை கலக்கும் தமிழ்ப் பொண்ணு!

‘‘இந்தியன் அதிலும் தமிழன் என்கிற அடையாளத்தை தொலைக்காமல், அதே நேரம் நாம் தொழில் செய்யும் நாட்டவரின் உணர்வுகளையும் மதிக்கணும்’’ என்கிற விஜயலட்சுமி கருப்பசாமி, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், மணக்காடு பகுதியை சேர்ந்தவர். 
தற்போது ஜப்பானில் ஃபாக்ஸ் அகாடமி  பிரைவேட் லிமிட்டெட் (FOX Academy) என்கிற பெயரில் தொழில் அதிபராக வலம் வருகிறார்.தனியொரு பெண்ணாய் ஜப்பான் நாட்டில் தொழில் செய்வது... அதற்கான வாய்ப்பு... ஜப்பானியர்கள் குறித்தெல்லாம் விளக்கமாகப் பேசியதில்...

உங்களைப் பற்றி சுருக்கமாக..?

அப்பா அந்தக்கால ஏட்டுக் கல்வி. அம்மா அங்கன்வாடி பள்ளி ஆசிரியர். என்னுடன் பிறந்த ஒரு அக்கா, ஒரு அண்ணன் மற்றும் நான், மூவருமே +2 வரை தமிழ் வழியில் படித்தவர்கள். கல்வியை ஆயுதமாக இறுகப் பற்றி, சிறந்த பொறியியல் கல்லூரிகளில் மூவரும் இடம்பிடித்ததோடு, படிப்பை எங்கள் அடையாளமாக  மாற்றிய முதல் தலைமுறை பட்டதாரிகள் நாங்கள்.
நான் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் முடித்து, 21  வயதில்  பெங்களூர் சென்று,  எனது முதல் தொழிலை அங்கு  ஆரம்பித்தேன். கூடவே நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்திய யூனிவர்சிட்டியில் இணைந்து, மாஸ்டர் ஆஃப் பிசினஸ் லா 5 ஆண்டுகள் மேல் படிப்பாக படித்தேன்.

தொடர்ந்து இந்தியாவில் நான் தொடங்கிய இரண்டாவது தொழில் ஃபாக்ஸ் அகாடமி (FOX Academy). இதன் வழியாக ஐ.டி. மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதுடன், 14 வருடமாக தொழில்   அதிபராக இருக்கிறேன். என் இன்னொரு பலம் பிஸிக்கல் பிட்னெஸ். விளையாட்டில் விருதுகள் பல வென்ற புரொபஷனல் பாக்ஸர். கூடவே மாரத்தான் ரன்னர். சிலம்பமும் தெரியும். ஜப்பானின் கெண்டோ ஸ்டைல் சிலம்பமும் பழகி வருகிறேன்.

ஜப்பான் நாட்டின் தொடர்பு எப்படிக் கிடைத்தது?

லிங்டின் பக்கத்தில் பதிவேற்றியிருந்த என் புரொஃபஷனல் புரொஃபைலை  ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகம் மாணவர்களை பயிற்சிக்காக ஃபாக்ஸ் அகாடமிக்கு அனுப்ப என்னைத் தொடர்பு கொண்டனர். 

அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்த, இந்த வொர்க் ஷாப்பில் பங்கேற்க ஜப்பானில் இருந்து மாணவர்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தனர். கிட்டதட்ட 253 ஜப்பானிய மாணவர்களுக்கு நான் பயிற்சி வழங்கியிருந்தேன். இப்படித்தான் ஜப்பானுக்கும் எனக்குமான தொடர்பு தொடங்கியது.

ஜப்பானின் ஐடி துறையில் தேவையிருப்பதை அறிந்து, 2 வார விசிட் விசாவில் மார்க்கெட் நிலவரம் அறிய முதலில் கிளம்பினேன். ஜப்பானியர்களின் மார்க்கெட் நம்பிக்கை அடிப்படையிலான மார்க்கெட். நம்மீதும், நமது தயாரிப்பு மீதும் நம்பிக்கை வந்தால் மட்டுமே நமது பொருட்களை பயன்படுத்துவார்கள் என்ற புரிதல் கிடைத்தது. இந்தப் பயணம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்க, திருபும் போதே, ஜப்பான் நாட்டில் எனது தொழிலை தொடங்க முடிவு செய்திருந்தேன்.

ஜப்பானில் தொழில் செய்வது சுலபமா?

அந்த நாட்டில் தொழில் செய்வதற்கு இரண்டு விதமான விசா நடைமுறைகள் இருக்கிறது. ஒன்று பிசினஸ் மேனேஜர் விசா. இன்னொன்று, ஸ்டார்ட்அப் விசா. ஜப்பான் அரசாங்கம் மூலமாகவே ஸ்பெஷல் இன்விடேஷனாக உள்ளே நுழைகிற நடைமுறை இது. முதல் விசா பெறுவதைவிட ஸ்டார்ட்அப் விசா நடைமுறை சுலபமாக இருந்தது. 

ஆனால், ஒரு  வருடம் மட்டுமே இதற்கு அனுமதி. இதில் அரசு மானியமும் உண்டு. பிசினஸ் செட் செய்கிறவரை இதை பயன்படுத்தலாம். ஆனால் இந்த விசா பெறுவது சுலபமில்லை. நிறைய டாக்குமென்டேஷன் வேலைகள் இருந்தது.

 விசிட் விசாவில் சென்றே ஸ்டார்ட்அப் விசாவுக்கான வேலைகளைத் தொடங்கினேன் என்றவர், ஜப்பான் நாட்டின் ஸ்டார்ட் அப் விசா பெற்ற முதல் சவுத் இந்தியன், இரண்டாவது இந்தியன் என்கிற பெருமையும் எனக்கு இருக்கிறது. எனது தொழிலில் நானே நிறுவனர், இயக்குநர் மற்றும் செயல்பாட்டாளர் என்பதால், அடுத்து பிசினஸ் மேனேஜர் விசாவுக்கு சுலபமாக மாறினேன். ஜப்பானில் தற்போது நானிருப்பது ஹொக்கைடோ தீவு. இது ஜப்பானின் வடபகுதியில் உள்ளது.

ஜப்பானிய மொழியில் மட்டுமே பேசுகிற ஜப்பானியர்கள், சரளமாக ஆங்கிலம் பேசினால் நம் அருகில் வரவேமாட்டார்கள். எளிமையான ஆங்கிலத்தில் அவர்களிடம் உரையாட வேண்டும். அவர்களின் மொழிப் பிரச்னையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. காரணம், நான் தமிழ் வழியில் படித்த மாணவி. 

படிப்பு, விளையாட்டு, நடிப்பு என நம்பர் ஒன் மாணவியாக இருந்தவள், கல்லூரிக்குள் நுழைந்து காணாமல் போனேன். என்னைச் சுற்றியிருந்த உலகம் ஆங்கிலத்தை மட்டுமே பேசியதால், நினைத்ததைப் பேச முடியாமல் தவித்தேன். இதையே சவாலாக எடுத்து, ஆங்கிலத்தை சரளமாகப் பேசப் பழகினேன்.

தமிழ் வழியில் படித்த நான் இன்று ஜப்பானில் இருக்கிறேன். என் அக்கா ஸ்வீடன் நாட்டில் பணியில் இருக்கிறார். என் அண்ணன் சொந்தமாக தொழில் செய்கிறார். ஆங்கிலம் படித்தால்தான் வாழ்க்கை மாறும் என்பதெல்லாம் வெற்று மாயை. தமிழ் நம் வரம். தமிழ் நம் பலம் என்பதை அழுத்தமாகவே சொல்வேன்.

ஜப்பானில் ஃபாக்ஸ் அகாடமியின் செயல்பாடு குறித்து..?

ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் கற்பிக்கும் ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம் இது. ஜப்பானியர்களையும் தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாக மாற்றவே ஃபாக்ஸ் அகாடமியை இங்கு ஆரம்பித்தேன். ஜப்பானியர்கள் நம்மைவிட தொழில்நுட்பத்தில் பின்தங்கியவர்கள். பெரும்பாலும் இதில் இந்தியர்களை சார்ந்தே இருக்கிறார்கள். 

இங்கிருக்கும் 60 சதவிகிதம் இஞ்சினியர்களும் வெளிநாட்டவர்களே. குறிப்பாக இந்தியர்களும், வியட்நாமியர்களுமே இங்கு அதிகம். ஜப்பானில் ஐடி மற்றும் ஏஐ தொழில்நுட்பத்திற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. சர்வதேச அளவிலான பயிற்றுவிப்பாளர்கள் என் நிறுவனத்தில் பணி செய்கிறார்கள். ஜப்பான் மார்க்கெட்டோடு இந்திய மார்க்கெட்டையும் சேர்த்தே நாங்கள்  கொண்டு செல்கிறோம்.

ஜப்பானியர்களின் கலாச்சாரம், மொழி, கல்வி குறித்து..?

ஐடியாலஜியில் ஜப்பானியர்கள் ரொம்பவே ஸ்ட்ராங். ஆனால் ஜப்பான் மொழியில் மட்டுமே பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள். ஜப்பானியர்கள் அமைதியானவர்கள் என்பதால் வெளியில் செல்லும்போது சத்தமாக நாம் பேசக் கூடாது. கண்களை நேராகப் பார்த்து பேசக் கூடாது. கை கொடுக்கக் கூடாது. தலையை முன் பக்கம் வளைத்து குனிவதே மரியாதை செலுத்துகிற முறை. பிசினஸ் கார்டை இரண்டு கைகளாலும் கொடுக்க வேண்டும்.

ஒரு நிமிடம் கவனித்து பார்த்த பிறகே கார்டை வாலட்டிற்குள் திணிக்க வேண்டும் என அவர்களின் வணிகக் கலாச்சாரம் வித்தியாசமானது.  சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு என எல்லாமும் அங்கு முறையாகவே இருக்கும். 

வாங்கும் பொருட்களின் தரமும் சிறப்பானதாய் இருக்கும். ஜப்பானியர்களின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளை கண்டிப்பாக நாமும் பின்பற்ற வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பேப்பர் வொர்க்தான். போஸ்ட் பாக்ஸை திறந்தால் கட்டுக்கட்டாக கடிதங்கள் இருக்கும். ஜப்பானில் நான் கற்ற முக்கியமான விஷயம் பொறுமை.

வங்கிக் கணக்கை தொடங்கவும் இங்கு அதிக காலம் எடுக்கும்.  சமூகத்திற்குள் அடியெடுத்து வைத்து நுழையும் குழந்தை பிறரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எப்படி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும், தனது உடைகளை எப்படி பராமரிக்க வேண்டும், சாலைகளை எப்படிக் கடக்க வேண்டுமென, வாழ்க்கை கல்வியை 6 வயதுவரை பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள். ஆட்டிசம் குழந்தைகளும் சாலையை தனியாக கடந்து பள்ளிக்கு செல்கிற அளவுக்கு பயிற்சியும், கல்வியும் தரமானதாக இருக்கிறது.

ஜப்பானியர்களின் உணவுப் பழக்கவழக்கம்..?

பெரும்பாலும் நான்வெஜ்தான் என்றாலும் ஹெல்த்தியான உணவுகளையே எப்போதும்  எடுக்கிறார்கள். வெஜிடபிள் உணவையும் அதிகம் சாப்பிடுகிறார்கள். சூப் வகை உணவுகளை கூடுதலாக எடுப்பார்கள். பழங்களின் விலை இங்கு ரொம்பவே அதிகம். ஒரு மாம்பழம் 5 ஆயிரம், தர்பூசணி 10 ஆயிரம் என விற்பனையாகும்.

ஜப்பானிய பெண்கள் குறித்து..?

திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்வதை பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள் என்றாலும், இங்குள்ள பெண்கள் மென்மையான வேலைகளையே எதிர்பார்த்துச் செய்கிறார்கள். தலைமைப் பொறுப்பிலும், அரசியலிலும் பெண் தலைவர்கள் இங்கு குறைவுதான். 

ஐடி தொழிலில் பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதை வியப்பாக பார்ப்பார்கள்.குறிப்பாக பெண்கள் தனியாக பாதுகாப்பாக இங்கு பயணிக்க முடிகிறது. காதலில் விழுந்தாலும் வீட்டில் சம்மதத்துடனே திருமணம் செய்கிறார்கள். பெண்கள் நெற்றி மறைக்கிற மாதிரி முடியினை மங்கி கிராப் செய்திருப்பார்கள்.

ஜப்பானில் தொழில் செய்பவராய் உங்கள் அனுபவம்..?

எனது 14 ஆண்டு தொழில் அனுபவத்தில், இரண்டு ஆண்டுகள்தான் ஜப்பானில் தொழில் செய்கிறேன். தொழிலதிபராக எனது வெயிட்டேஜ் தற்போது கூடியுள்ளது. மக்கள் என்னைப் பார்க்கும்விதமும் மாறியிருக்கிறது. வாய்ப்புகளும் அதிகமாகத் தேடி வருகிறது. இந்த அழகிய நாடு கொடுக்கும் அனுபவம், வாழ்க்கை முழுவதும் நாம் எடுத்துச் செல்லும் ஒன்றாக கண்டிப்பாக மாறும். Japan is brand. அந்த பிராண்டை எடுக்கும் போது இன்னொரு நபராக நிச்சயம் நம்மை மாற்றும்.   

அதேபோல், ஐடி வேலை வாய்ப்பு ஜப்பான் நாட்டில் கொட்டிக் கிடக்கிறது. ஊதியமும் அதிகம். ஆனால் ஜப்பானிய மொழி தெரிவதும் மிகப்பெரிய நன்மை. இந்திய மாணவர்கள் கல்வி பயில, இங்குள்ள பல்கலைக்கழகங்கள் உதவித் தொகைகளை ஏராளமாக வழங்குகிறார்கள். எனவே, இந்திய மாணவர்கள் ஜப்பானுக்கு படிக்க வருவதையும், வேலைக்கு வருவதையும் நான் பரிந்துரைக்கிறேன்.

3 மாதங்களுக்கு முன்பு ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று மார்க்கெட் நிலவரத்தை அறிந்து வந்தேன். விரைவில் எங்களின் ஃபாக்ஸ் அகாடமி, ஐரோப்பிய நாட்டிலும் கிளை பரப்ப உள்ளது. உங்கள் கனவு மற்றும் ஃபாஷன் இதுதான் என நீங்கள் நினைத்துவிட்டால் அதை யாராலும், எந்தக் காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தவே முடியாது. முயற்சி மட்டுமே முக்கியம்.

மகேஸ்வரி நாகராஜன்