புத்தம் புது தீவுகள்



கடல் மட்டம் உயர்வதால் தீவுகளும் கடலோரத்தில் உள்ள நகரங்களும் கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். அதே நேரத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றத்தால் புதிய தீவுகள் உருவாகின்றன. உலக வரைபடத்தில் சமீப காலங்களில் இணைந்த சில தீவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஹங்கா டோங்கா

தென் பசிபிக் பெருங்கடலில் வீற்றிருக்கும்  டோங்கா தீவுக்கூட்டங் களில் 2014-இல் முளைத்த ஒரு புதிய தீவுதான் ஹங்கா டோங்கா. கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்ததால் உருவானது இந்தத் தீவு. எரிமலை வெடித்த போது 30 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் புகை எழும்பி விமானப் போக்கு வரத்தை தடை செய்திருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு மட்டும்தான் இந்தத் தீவு இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லியிருந்தனர். ஆனால், 30 வருடங்கள் வரை ஹங்கா டோங்கா தாக்குப்பிடிக்கும் என்று நாசா நம்புகிறது. இப்பகுதி ஆபத்தானது என்பதால் யாரும் இங்கே விசிட் அடிப்பதில்லை. ஆனால், தூரத்தில் இருந்து தரிசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

நீஜிமி

ஜப்பானில் உள்ள குட்டித் தீவு நிஷினோஷிமா. பத்தாயிரம் வருடங்களாக எந்தவிதமான எரிமலை சீற்றத்தையும் வெடிப்பையும் காணாத தீவு இது. நவம்பர் 2013-இல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு நீஜிமி என்ற ஒரு குட்டித்தீவை உருவாக்கியது. இந்தத் தீவு நிஷினோஷிமாவுடன் இணைந்துவிட்டது.

ஷெல்லி

வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு மணல் தீவு ஷெல்லி. ஏப்ரல் 2017-இல் இது உருவானது. செயற்கைக்கோள் எடுத்த படத்தின் வழியாகத்தான் இப்படியொரு தீவு உருவாகியிருப்ப தாகவே கண்டுபிடித்தனர். இதன் அழ குக்கும் குட்டியான இதன் அளவுக்கும் புகழப்பட்டது இந்தத் தீவு.

சூறாவளி மற்றும் பலமான காற்றினால் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அடித்து வரப்பட்ட மணலால் இந்தத் தீவு உருவாகியிருக்கலாம் என்று கணித்தனர். பிப்ரவரி 2018-இல் செயற்கைக்கோ ளைக் கொண்டு இந்தத் தீவைத் தேடியபோது காணாமல் போன செய்திதான் கிடைத்தது. ஆம்; ஒரு  வருடத்துக்குள் இந்தத் தீவு மறைந்துவிட்டது.

த.சக்திவேல்