90 ஆயிரம் விலங்குகளைக் காப்பாற்றிய குடும்பம்!



உலகப் புகழ்பெற்ற வன உயிர்களின்  காதலர் ஸ்டீவ் இர்வின். காட்டுயிர்களைப் பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இயற்கை ஆர்வலர்.  இவரின் ‘The Crocodile Hunter’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.
இர்வினுக்கு முன்பு  யாரும் இப்படியொரு நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டியதில்லை. நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தை எல்லாம் வன உயிர்களின் பாதுகாப்பிற்காகவே செலவிட்டவர்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த ஸ்டீவின் பெற்றோர்களும் வன உயிர்களின் காதலர்கள்தான். 6 வயதிலேயே மலைப்பாம்புகளுடன் விளையாடத் தொடங்கி விட்டார் ஸ்டீவ்.
தந்தையின் உதவியுடன் 9 வயதில் முதலைகளைக் கையாள ஆரம்பித்த ஸ்டீவை ‘முதலைகளின் காதலன்’ என்றே அவரின் ரசிகர்கள் அழைக்கின்றனர். ஆழ்கடலைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை எடுக்கும்போது திருக்கை மீன் தாக்கி தனது 44-வது வயதில் இறந்துவிட்டார் ஸ்டீவ் இர்வின். அவரது உடல் மறைந்திருக்கலாம்.

ஆனால், அவர் விட்டுச் சென்ற பணியை அவரது குடும்பம் இன்றும் அதே உற்சாகத்துடன் தொடர்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் கோடிக்கணக்கான வன உயிர்கள் மடிந்தன.

தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய 90 ஆயிரம் வன உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது ஸ்டீவ் இர்வினின் குடும்பம். இர்வின் குடும்பத்துக்குச் சொந்தமான வன உயிர்கள் மருத்துவமனையிலிருந்து அவரது மகள் பிண்டி இர்வின் இத்தகவலை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அத்துடன் ஒரு பிளாட்டிபஸைக் கையில் பிடித்துக்கொண்டு, ‘‘ இவர் எங்கள் மருத்துவமனையில் 90,000-வது நோயாளி...’’ என்று சொல்லியிருக்கிறார் இர்வினின் மகன் ராபர்ட்.

‘‘ இந்த பூமி நமக்குச் சொந்த மில்லை. இந்த பூமியில் நாம் வசிக்கிறோம். அவ்வளவு தான். நம்மைப் போலவே இந்த பூமியில் வன உயிரினங்
களும் வசிக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதாகும். ஆனால், உண்மையில் வன உயிர்களைப் பாதுகாக்காமல் அவற்றை அழித்து வருகிறோம்.

மரணம் பற்றி ஒருபோதும் நான் பயப்படவில்லை. வன உயிர்களைப் பாதுகாப்பதற்காக நான் பூமியில் பிறந்துள்ளதாக அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். என் வாழ்க்கையில் ஒரு முதலையையோ அல்லது ஒரு கோலா கரடியையோ பாதுகாத்தாலே எனக்குப் போதும். பிறகு நிம்மதியாக இறப்பேன்...’’ என்ற ஸ்டீவ் இர்வினின் வார்த்தையை மெய்ப்பிக்கிறது அவரது குடும்பம்.

த.சக்திவேல்