அஞ்சலியூடியூப் சேனல் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான பெயர் நாராயண ரெட்டி. தெலங்கானாவைச் சேர்ந்த இவர் ‘யூடியூப் தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது ‘கிராண்ட்பா கிச்சன்’ என்ற சேனலுக்கு 60 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்த சேனல்.

விதவிதமாக சமைத்து அசத்தும் இவரது வீடியோ பதிவுகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள் அதிகம். இந்த வீடியோக்கள் மூலம் ஈட்டும் வருமானத்தில் ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு உணவளித்து வந்தார் நாராயண ரெட்டி. 73 வயதான அவர் கடந்த வாரம் இறந்துவிட்டார். உலகெங்கும் இருக்கும் அவரது பார்வையாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.