இந்த பர்கருக்கு வயது 10இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு சம்பவம்  இது. மெக்டொனால்டு உணவுப்பொருட்களின் மீது எழுந்த விமர்சனங்களும், அத னால் பல இடங்களில் அந்த உணவகம் மூடப்பட்டதையும் நாம் அறிவோம். 2009-ம் வருடம் ஐஸ்லாந்தும் தனது நாட்டில் உள்ள  அனைத்து மெக்டொனால்டு உணவகங் களையும் மூடியது.

மெக்டொனால்டின் உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாது என்று எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஸ்மராசான். அதனால், தான் கேள்விப்பட்டதை சோதனை செய்துபார்க்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. 

மெக்டொனால்டு உணவகங்கள் மூடப்படப்போவது தெரிந்தது, உஷாரான அவர் ஒரு பர்கரையும் ஃப்ரென்ச் ஃப்ரையையும் வாங்கி தனது வீட்டில் பத்திரமாக வைத்துக்கொண் டார். வீட்டிலுள்ள யாராவது அதை எடுத்து சாப்பிட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்.

அந்த பர்கரும்  ஃப்ரென்ச் ஃப்ரையும் இன்னும் கெட்டுப்போகாமல் இருக்கிறது. கடந்த வாரத்துடன் அவற்றுக்கு பத்து வயதாகிவிட்டது. ஆனால், நேற்று தயாராக்கப்பட்டதைப் போல காட்சியளிக்கின்றன. இப்போது அந்த பர்கரை தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஸ்நொத்ரா எனும் விடுதியில் கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருக்கின்றனர். ‘‘பர்கர் இப்பவும் நல்லாவே இருக்கு...’’ என்கிறார் விடுதியின் உரிமையாளர்.

தினமும் பர்கரை பார்வையிட ஆயிரக்கணக்கானோர் வந்துபோகின்றனர். இதுபோக இணைய தளம் வழியாக தினமும் 4 லட்சம் பேர் பத்து வயதான பர்கரைப் பார்த்து பரவசமடைகின்றனர். மட்டுமல்ல, பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரையும் நிறைய இடங்களில் இருந்துள்ளன. ஆரம்ப நாட்களில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் வைத்திருந்தனர். எவ்வளவு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதை ஆராயவே அது அங்கு வைக்கப் பட்டது.

மூன்று வருடம் கழித்து அதில் சிறிய மாற்றங் கள் ஏற்பட்டதைக் கண்டு, அதை அவர்கள் ஐஸ்லாந்து தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றியுள்ளனர். உணவைப் பாது காக்க போதுமான உபகரணங்கள் இங்கில்லை என்று அருங்காட்சியகம் உணவைத் திருப்பித் தந்துவிட்டது. பிறகுதான் அது விடுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ‘‘அதை பதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை...’’ என்று வேடிக்கையாக சொல்கிறார் ஸ்மராசான்.