ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம்



சமீபத்தில் ‘கூகுள் டூடுல்’ தனது முகப்பு பக்கத்தில் ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராமின் 166-வது பிறந்தநாளைக் கோலாகலமாக கொண்டாடியது. இதைப் பார்த்த நிறையபேர் அவர் யாரென்று அறிந்துகொள்ள இணையத்தை அலசினார்கள். நாமும் அலசினோம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ...செப்டம்பர் 13, 1853-ம் வருடம் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் பிறந்தார் ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம்.

1883-இல் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, பாக்டீரியாலஜி மற்றும் பார்மாகாலஜி படிக்க ஐரோப்பா முழு வதும் சுற்றுகிறார். ஜெர்மனியில் உள்ள லேப்பில் மைக்ரோபயோலஜிஸ்ட் வேலை அவருக்குக் கிடைக்கிறது. நுண்ணுயிர் களைப் பற்றி ஆராய்வதில் தீவிர கவனம் செலுத்தினார். பின்னாளில் அதுவே அவரது அடையாளமாக மாறிவிட்டது.

அவர் வேலை செய்த லேப்பில்தான் பாக்டீரியாக்களுக்கு வண்ணம் பூசும் முறையைக் கண்டறிந்தார் கிராம். அதாவது ஒரு கண்ணாடித் தட்டில் பாக்டீரியாக்களை எடுத்துக்கொண்டார். அதன் மீது ஊதா மையை ஊற்றினார். மை நன்றாக ஒட்டியதும் அதை நீரால் கழுவினார். பிறகு அயோடின் திரவத்தை ஊற்றி கொஞ்ச நேரம் பாக்டீரியாக்களைக் காய வைத்தார்.

பிறகு அதையும் நீரால் சுத்தம் செய்தார். பாக்டீரியா உலர்ந்ததும் அதை  மைக்ராஸ்கோப் மூலம் ஆராய்ந்தார். சில பாக்டீரியாக்களில் ஊதா நிறம் அப்படியே இருந்தது. அதை  பாசிட்டிவ் பாக்டீரியாக்கள் என்று வகைப்படுத்தினார். சில பாக்டீரியாக்கள் ஊதா நிறத்தை ஏற்கவில்லை. அவற்றை நெகட்டிவ்  பாக்டீரியாக்கள் என பிரித்தார்.  இந்த முறை ‘கிராம் ஸ்டெய்னிங்’ என்று அழைக்கப்படுகிறது.

 பாக்டீரியா போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி களின் மீது வண்ணத்தை ஏற்றி ஆய்வு செய்த கிராமின் சாதனையை உலகமே வியந்தது. அவரின் கிராம் ஸ்டெய்னிங் மூலம் பாக்டீரியாக்களைப் பிரித்து, அவற்றின் குணநலன்களைத் தெரிந்து கொள்ளலாம். இன்றும் நோய்களுக்குக் காரணமான பாக் டீரியாக்களை அடையாளம் காண வும் வகைப்படுத் தவும் கிராம் கண்டுபிடித்த ஸ்டெய்னிங் முறைதான் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.