5 நூற்றாண்டு தூக்கம்!



இதுவரை நிகழ்ந்தவற்றில் மிகப்பெரிய எரிமலைச் சீற்றம் எது?
 ஆர்.அகில், 8ம் வகுப்பு, சி.எம்.சி. பள்ளி, தென்காசி.

1991 ஜூன் 15 அன்று பிலிப்பைன்சின் லூசான் தீவிலுள்ள பினாடுபோ எரிமலை சீற்றம் கொண்டு எழுந்தது. இதுதான் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய எரிமலைச் சீற்றம். இதற்கு முன் ‘லாவா’ என்ற எரிமலைக்குழம்பை இந்த பினாடுபோ கக்கி 500 ஆண்டுகள் ஆகின்றன. 5 நூற்றாண்டுகள் அமைதியாக இருந்ததால் பினாடுபோவை செத்த பாம்பாகக் கருதி, கண்டுகொள்ளாமல் இருந்தனர் விஞ்ஞானிகள்.

1990 ஜூலை மாதம்... இந்த எரிமலைக்கு 100 கிலோமீட்டர் தூரத்தில் 7.8 ரிக்டர் பூகம்பம் ஏற்பட்டது. இது போதாதா, கும்பகர்ணனாக இருந்த பினாடுபோ விழிப்பதற்கு! நீள்துயிலில் இருந்ததால் மெல்ல மெல்ல அதன் தூக்கம் கலைய 10 மாதங்கள் ஆனது. 1991 ஏப்ரல் 2... எரிமலை வாயிலிருந்து மெல்லிய தூசுப்படலம் வெளியேறியது. அடுத்த மாதம் தூசின் அளவு மேலும் அதிகரித்தது. ஜூன் மாதம் வெப்ப வாயு வெளியே வந்தது.

ஜூன் 15 அன்று கிளைமாக்ஸ். 9 மணி நேரத்துக்கு ஓய்வே இல்லாமல் பொங்கியது எரிமலை. பாறைகள் வெடித்து கொதிமணலாகச் சிதறின. வெடிக்கும் சத்தம் 90 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தலைநகர் மணிலாவையும் தாண்டிக் கேட்டது.

எரிமலைக் குழம்பும், வெப்ப வாயுக்களும் வெளியேறிய வேகத்தில் எரிமலையின் டாப் கழன்று கொண்டது. இதனால் 1745 மீட்டர் உயரம் கொண்ட பினாடுபோ மலை 1485 மீட்டராகக் குறைந்து குள்ளமானது. 260 மீட்டர் உயர பாறைகள் உடைந்து துகள்களாகி விட்டன.

எரிமலைச் சாம்பலும், பாறைத் துகள்களும் வானத்தில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொங்கி எழுந்தன. எரிமலையைச் சுற்றி 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூசு தவிர வேறொன்றும் இல்லை. அனலைத் தாண்டி அடாத மழையும் ஆரம்பித்தது. வீட்டுக்கூரைகளில் சேற்றுப்படலம் படிந்து, எடை தாங்காமல், வீடுகள் இடிந்து 847 பேர் காலி.

மனிதன் எப்போது சுவையான உணவுகளைச் சமைக்கக் கற்றுக் கொண்டான்?
கோ.கணேஷ், ஜெயகோபால் கரோடியா பள்ளி, சென்னை.

தீ கண்டுபிடிக்கப்பட்ட பிறகே உணவு ஆராய்ச்சியின் முதல் படியில் ஏறினான் மனிதன். உணவை சமைத்தால் சுவையாக இருக்கும் என்பதெல்லாம் ஆதிமனிதனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேட்டைக்காரன் குளிர் காய உருவாக்கியிருந்த நெருப்பில் தவறுதலாக, வேட்டையாடப்பட்ட விலங்கு வெந்ததுதான் முதல் ஆச்சரியம்.