சொத்தை நகத்துக்கு குட்பை சொல்லுங்கள்!



நகம் என்றாலே பாலீஷ் போட ஒரு அழகான பாகம் என்ற அளவில்தான் பெரும்பாலோர் புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியில்லை! நகம் என்பது அழகுக்காக மட்டுமல்ல, அது ஒரு அத்தியாவசிய உறுப்பு. நகச்சுத்தி வரும்போது நகத்தில் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டுப் பூட்டைத் திறந்து பாருங்கள்.

அப்போது புரியும், நகத்தின் அருமை! ஓடும்போதும், வழுவழுப்பான தரையில் நடக்கும்போதும், நம் கால் விரல்கள் நன்றாக அழுந்தி, நம் உடல் எடை வலியின்றி தரையில் செலுத்தப்பட வேண்டுமானால், அதற்கு நகத்தின் ஒத்துழைப்பு அவசியம்.

இங்கே நாம் நகம் என்று சொல்வது நகவெட்டியால் வெட்டி எறிகிறோமே அந்தப் பகுதியை மட்டுமல்ல. ‘நகமும் சதையும் போல’ என்று மேற்கோள் காட்டுவோமே அப்படியான நகத்தையும் அதை ஒட்டியுள்ள சதைப்பகுதியையும்தான்! விரலுக்கு ஒரு கவசம் போல் அமைந்துள்ள நகமானது ‘கெரட்டீன்’ எனும் புரதப் பொருளால் ஆனது. கண்ணில் பளிச்சென்று தெரிகிற, வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம்.

இதற்குள் நரம்புகளோ, ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது. இதற்கு நகத் தளம் (ழிணீவீறீ தீமீபீ) என்று பெயர். நகத்துக்கு உணவும் உணர்வும் உயிரும் தருகின்ற ஒரு உயிர்ப் படுக்கை இது. இந்த நகத் தளத்தைக் கடந்து வளரும் நகப்பகுதி செத்துப்போய்விடும். இதனால்தான் நுனி நகத்தை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.

தேர்தலில் நீங்கள் ஓட்டுப்போட்டதற்கான அடையாளமாக விரலில் மையிடுகிறார்கள் அல்லவா? அந்தப் பகுதிக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர் (Nail bud). இதுதான் நகத்தை முளைக்க வைக்கிறது. இந்த இடத்தில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் நிறைய உள்ளன. இதனால், இந்தப் பகுதியை அழுத்தினாலே வலிக்கும். அடுத்தது, நகத்தைச் சுற்றியுள்ள‘ஹி’   வடிவத் தோல் அமைப்பு (Nail fold). இந்த அமைப்புகள் அனைத்தும் கைவிரலுக்கும் கால் விரலுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

நகம் ஒரு நோய் காட்டும் கண்ணாடி. ரத்தசோகை, மஞ்சள் காமாலை, இதயக் கோளாறுகள், காளான் நோய் என்று 50க்கும் மேற்பட்ட நோய்களை இது நமக்குக் காட்டிக்கொடுத்துவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த நகத்தைக் கண்போல பாதுகாக்க வேண்டியது அவசியம். நகத்தின் மீது ஏதாவது விழுந்துவிட்டாலோ, அடிபட்டாலோ ரத்தம் கட்டி விண்ணென்று வலிக்கும். அப்போது நகத்தின் அடியில் கட்டிக்கொண்டிருக்கும் ரத்தத்தை நீக்கினால்தான் வலி குறையும்; ரத்தக்கட்டு குணமாகும்.

சில  பேர் நகத்தை வெட்டுகிறேன் என்று நகத்தை ஒட்ட வெட்டிவிடுவார்கள். இன்னும் சிலர் நகத்தை கரும்பைக் கடிப்பதைப்போல் கடித்துத் துப்பிக் கொண்டிருப்பார்கள். இந்தமாதிரி செய்வதால், நகத்தில் கிருமிகள் நுழைந்து புண்ணாகிவிடும். இதுதான் நகச்சுத்தி. இப்படி நகத்துக்குத் தானாக வரும் நோய்களும் உள்ளன; நாமாக வரவழைத்துக்கொள்ளும் நோய்களும் உள்ளன.

அழகு உறுப்பாக நாம் கருதும் நகத்தின்அழகைக் கெடுப்பதற்கென்றே ஒரு நோய் உள்ளது. அதுதான் நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail). ‘டிரைக்கோபைட்டன் ரூப்ரம்’ (Trichophyton rubrum) எனும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படுகின்ற இந்த நோய் கை விரல்களைவிட கால் கட்டை விரல்களையே அதிகமாகப் பாதிக்கும்.

இது வந்துள்ளவர்களுக்கு நகம் பால் போல் வெளுத்துக் காணப்படும். சிலருக்கு நகம்    மஞ்சள் நிறத்தில் கோடு கோடாகத் தெரியும். போகப்போக நகம் பிளவுபட்டுவிடும். இறுதியில் அது தானாகவே  விழுந்துவிடும். நகச்சொத்தை ஏற்பட்டுள்ளவர்களுக்கு காலில் ஷூ அணிந்தால் கட்டை விரல் வலிக்கும். ஓட முடியாது. வேகமாக நடக்க முடியாது.

இதற்கு சிகிச்சை அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பூஞ்சைக் கிருமிகளைக் கொல்வதற்கென்றே மாத்திரை, மருந்துகளும் வெளிப்பூச்சுக் களிம்புகளும் நிறைய உள்ளன. ஆனால், இவற்றுக்கெல்லாம் அசைந்து கொடுப்பதில்லை இது. பணச்செலவு குறித்து கவலைப்படாமல், மிகவும் பொறுமையாக, பல மாதங்களுக்குத் தொடர்ந்து சிகிச்சைகளை எடுத்தால் மட்டுமே ஓரளவு குணமாகும். 

இந்தச் சூழலில் நகச்சொத்தைக்கு ஒரு முழுமையான தீர்வு தரும் வகையில் புதிய லேசர் சிகிச்சை அறிமுகமாகியுள்ளது அமெரிக்காவில். ‘பின் பாயின்ட் பாத லேசர் சிகிச்சை’ (Pinpoint Foot Laser Treatment) என்று இதற்குப் பெயர். இந்தச் சிகிச்சையில் நல்ல அனுபவமும் புகழும் பெற்றுள்ள ஆஸ்டின் நகர டாக்டர் கேரி பிரான்ட், இது குறித்து சில தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்.

‘‘நகச் சொத்தை சிகிச்சைக்குத் தருகிற மருந்துகள் முழுமையான குணம் தருவதில்லை. பல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, பலபேர் சிகிச்சையை நடுவிலேயே நிறுத்தி விடுகின்றனர். இப்போது நாங்கள் மேற்கொள்ளும் லேசர் சிகிச்சையில் இந்த மாதிரி தொல்லைகள் எதுவும் இல்லை. நோய் முற்றிலும் குணமாகிறது. இதில், பின் பாயின்ட் லேசர் கருவி, அகச்சிவப்புக் கதிர்களை (Infrared rays) உருவாக்கித் தருகிறது.

பாதிக்கப்பட்ட விரல்களுக்கு சுமார் 30 நிமிடங்களுக்கு லேசர் கதிர்களைச் செலுத்துவோம். அப்போது லேசர் கதிர்கள் ஏற்படுத்துகின்ற வெப்பத்தில் பூஞ்சைக் கிருமிகள் அடியோடு செத்துப் போகின்றன. மீண்டும் அங்கு இந்தக் கிருமித்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த சிகிச்சைக்கு மயக்க மருந்து எதுவும் தேவையில்லை. மாத்திரை எதுவும் தரப்படுவதில்லை. இது ஒரு தடவை மட்டுமே தரப்படும் சிகிச்சை என்பதால் செலவும் குறைவு.  நூறு சதவீதம் நோய் குணமாகி விடுகிறது’’ என்கிறார் பிரான்ட்.

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்