வண்டு... வாடை... வசீகரம்..!



பூச்சிப் பூக்கள் 29

பூச்சியினங்களில் அதிகமாக சைட் அடிப்பது வண்டுகள்தான்! இவற்றின் சின்னஞ்சிறு வயிற்றுக்குப்பி நிரம்பிவிட்டால் போதும்... உடனே சல்லாப மூடிற்கு வந்துவிடும். இத்தகைய சூழல்களில் ஆண் வண்டுகளுக்கு ஆக்ரோஷம் அதிகம்! ஹம்மிங் சவுண்டை உச்சபட்ச ஸ்தாயியில் வெளியிட்டவாறு, ஏதேனும் ஒரு சேலை கட்டிய வண்டைத் தேடிப் புறப்பட்டு விடும். எளிதில் இணை கிடைக்கவில்லை என்றால், காம்போதி ராகம் பாடியாவது தன் இணையைக் கண்டுபிடித்துவிடும்.

இப்படி வண்டுகள் உணவு மறந்து உடற்பசியில் திரியும்போது இணையை ஈர்ப்பதற்கு பல்வேறு கவர்ச்சி தொழில்நுட்பங்களை வைத்திருக்கின்றன. இவற்றுள் சிலாக்கியமானதும், சீக்கிரத்தில் பலனளிக்கக் கூடியதும் மற்றும் எளிதுமானது இவற்றின் பிரத்தியேக ஃபிரமோன் வாசனை வீச்சு! இந்த வேதியியல் தொலைத் தொடர்பு சாதனத்தைப் பல்வேறு வண்டினங்கள் பயன்படுத்துகின்றன.

இதன் மூலம் ஏற்ற இணையை எளிதில் கண்டறிவது சுலபம்! அவசரகதியில் திரியும் ஆண் வண்டுகள் சிக்கலான தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தாமல் இதுபோன்ற குறுக்கு வழிகளையே அடிக்கடி மேற்கொள்கின்றன. சப்தமாய் ரீங்கரித்தோ, தாரை தப்பட்டை போன்று இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பியோ, அந்தரங்க இணையை ஈர்ப்பதில் அவகாசம் அதிகமே! எனவேதான் இந்த ரசாயனச் சங்கதி!

ஃபிரமோன் எனப்படும் இந்த ரசாயனத் தொலைத்தொடர்பு வாசனையை, வண்டுகளின் உடலில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் டெர்பனாய்டு தொகுப்புகள் போன்றவைதான் உருவாக்குகின்றன. இதிலும் பல்வேறு வண்டு இனங்கள் தமது இனத்தின் தனிப்பட்ட வாசனையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

நம்மால் நுகர முடியாவிட்டாலும், வண்டுகள் தம் சக சாதி வண்டை வாசனையை வைத்தே அடையாளம் கண்டுகொள்கின்றன. இனக்கலப்பை விரும்பாத இந்த வண்டின ஆண்களுக்கு போதிய பெண் வண்டுகள் எல்லா ஜாதியிலுமே இருந்து கொண்டிருக்கின்றன.

இணை சேரும் ஆர்வத்தில் இருக்கும் ஆண் வண்டிற்கு முதல் பணி இணைப் பெண் வண்டைக் கண்டறிவதுதான்! இதன் வேதியியல் டெக்னிக்குகள் எப்படியும் வெற்றியை சீக்கிரத்தில் கொடுத்து விடுகின்றன.

வாடை வசீகரம் அப்படி! இந்த வாடைகளில் தனித்துவம் இருப்பதோடு, மாறுபட்ட குணங்களும் சில வண்டினங்களில் இருக்கின்றன. இதில் பைன் மர வண்டுகள்தான் எக்ஸ்பர்ட்டுகள்! இவ்வினத்து ஆண் வண்டு பைன் மரத்தில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டு ஆக்ரோஷ  ஃபிரமோன் வாடையைக் காற்றில் தவழவிடும்.

இவ்வாடை ஆண், பெண் என்ற பாலின வேறுபாடின்றி அவ்வினத்து வண்டுகளை அட்ராக்ட் பண்ணும். உசுப்பேறிய வண்டுகள் அனைத்தும் ஒரே மரத்தில் குவியத் துவங்கும். சட்டென்று நேர்காணல் வைத்து தன் சகியைத் தேர்வு செய்து கொண்டு, உடனே ஆக்ரோஷமற்ற    ஃபிரமோன் வாடையை ஆண் வண்டு காற்றில் தவழவிடும். இவ்வாடை ஏற்கனவே தவழவிடப்பட்ட ஆக்ரோஷ ஃபிரமோன் வாடையைக் கரைத்து மறைத்து விடும். இதனால் மேலும் வண்டுக் கூட்டம் வந்து சேராமல் தடுக்கப்படுகிறது!

ஒரு வழியாய் இணை சேர இருபாலரும் சம்மதித்தபின், பெண் வண்டு அதிவேகத் தில் பைன் மரத்தில் பாதுகாப்பான பலே சுரங்கத்தைத் தோண்டிவிடும். இப்படி எண்ணற்ற பெண் வண்டுகள் ஏகப்பட்ட சுரங்கங்களை அமைத்திட, இணை கிடைக்காத ஆண் வண்டுகளெல்லாம் பெண்ணின் சுரங்க வீட்டிற்குள் பிரவேசித்துத் தாம் வந்து விட்டதையும், அந்த குறிப்பிட்ட சுரங்கத்துப் பெண் வண்டினை சேர்த்துக் கொண்டதையும் ஆரவாரத்தோடு அறிவிக்கும்.

 இச்சமயத்தில் தனிமை தேவையென்பதால், இருபால் வண்டினங்களும் ஆக்ரோஷமற்ற ஃபிரமோன் வாடையை அடர்த்தியாய் காற்றில் தவழவிட்டு தம் இருப்பிடத்தை ரகசியப்படுத்திக் கொள்ளும். இதன் பிறகுதான் இவற்றின் நானாவிதமான லீலைகளும் ஆரம்பமாகும்.

உறவுக்குத் தோதான சமயம் வந்தாலும் இவை உடனே இணை சேர்வதில்லை. மரபு ரீதியாக வந்த சில கலாச்சார சில்மிஷங்களை அரங்கேற்றி மகிழ்ந்த பின்தான் அடுத்த கட்டம். ஆண் வண்டு தான் அமர்ந்திருக்கும் செடியின் மென்கிளையை தன்னால் முடிந்தவரை அசைத்து சலனத்தைக் காட்டும். பிறகு தனது உடலில் உள்ள பகுதிகளை ஒன்றோடு ஒன்றைத் தேய்த்து ஒருவித உராய்வொலியை உருவாக்கி பெண் வண்டை சிலாகிக்கும்.

அதே சமயத்தில் கிளுகிளுப்பான ரீங்காரத்தோடு ஆண் வண்டு, பெண் வண்டிற்கு வெகு அருகில் வந்து வேகமாய்ப் படபடத்துவிட்டு சட்டென்று தூரம் பறக்கும். சட்டென்று திரும்பிவந்து பெண் வண்டை வட்டமடிக்கும். இதன்பிறகு இரண்டும் மாறிமாறித் துரத்திக் கொண்டு விளையாடும். இப்படி இவை துரத்துவதையும் துரத்தப்படுவதையும் காதல் உருவாக்கத்தில் ஒரு சிலபஸாகவே வைத்திருக்கின்றன.

பூஜை வேளைக் கரடியாய் ஒரு மீசை வண்டு நடுவில் குறுக்கிட்டு விட்டால், மல்யுத்தம்தான்! வெல்பவர்க்கே இளவரசி என்பதால் உக்கிரப் போர் நிகழும். ஒரு வண்டு புறமுதுகு காட்டியபின், ஜெயித்த வண்டு உடல் சிலிர்த்தவாறு, ஆதிக்க வெறியோடு நெருங்கும்.

ஆண் வண்டின் வீரப் பிரதாபங்களை நேரில் கண்டதால், பெண் வண்டு பேசாமல் அடங்கி விடுவது வாடிக்கை!
அப்புறம் என்ன? ஃபிரமோன்கள் உசுப்பேற்ற, இரண்டும் தம் ஆண்ட்டெனாக் கொம்புகளை உரசிக் கொண்டு, தழுவி மகிழும். சமயத்தில் இவை சல்லாபித்த படியே, மெய்மறந்து ட்வின்ஸ் போல ஒரு மணி நேரம் வரை கூட பறந்து கொண்டிருப்பது ஆச்சரியம்!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்