செயற்கை மின்னலை உருவாக்கியவர்!



நம் வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மும்முனை மின்சார (3 Phase) முறையைக் கண்டறிந்தவர் நிக்கோலா டெஸ்லா (Nikola Tesla). இன்டக்ஷன் மோட்டார், டிரான்ஸ்ஃபார்மர் போன்றவற்றை வடிவமைத்தவரும் இவரே! இவர் ஆஸ்திரியாவில் 1856ம் ஆண்டு பிறந்தார்.

பள்ளிக் காலத்திலிருந்தே அவரது ஆர்வம் முழுவதும் மின்னியல் துறை மீது இருந்தது. அதனால் ஒரு பாலிடெக்னிக்கில் மின்னியல் படிப்பை முடித்துவிட்டு, டெலிபோன் நிறுவனத்தில் மின்னியல் பொறியாளராக வேலையில் சேர்ந்தார்.

ஒருநாள் தன் நண்பருடன் நடந்து சென்றபோது ஒரு குச்சியை எடுத்து மண்ணில் வரைபடம் வரைந்து, அதன் பாகங்களைக் குறிப்பிட்டு அது செயல்படும் முறையையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கினார்.

அதுதான் பிற்காலத்தில் அவர் உருவாக்கிய இன்டக்ஷன் மோட்டார்! தாமஸ் ஆல்வா எடிசனுக்கு உதவியாளராக நிக்கோலா டெஸ்லா சேர்ந்தார். எடிசன் ஏற்கனவே தான் உருவாக்கி இருந்த டைனமோவை, மேலும் சிறப்பான முறையில் இயக்கவும் உற்பத்திச் செலவைக் குறைக்கவும் வழிகளைக் கண்டுபிடித்து கொடுத்தால் டெஸ்லாவுக்கு 50,000 டாலர் தருவதாகச் சொன்னார்.

பல ஆய்வுகள் செய்து, எடிசன் கூறியவற்றை எல்லாம் அவர் முன்பு செய்து காண்பித்து சன்மானத் தொகையைக் கேட்டார் டெஸ்லா. எடிசன் மறுத்தார். எடிசனால் தான் வஞ்சிக்கப்பட்டதாக நினைத்த டெஸ்லா, எடிசனின் நேர் மின்சார வினியோக அமைப்புகளுக்கு முடிவு கட்டத் தீர்மானித்தார்.

மூன்று நிலை மாறுதிசை முறையைப் பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படும் ஜெனரேட்டர், மோட்டார் மற்றும் மின் அழுத்தங்களைக் கொடுக்க உதவும் டிரான்ஸ்ஃபார்மர் போன்ற மின்னியல் சாதனங்களை உருவாக்கினார். இதற்கிடையே அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றார். 1895ம் ஆண்டில் இவர் நயாகரா நீர்வீழ்ச்சியின் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான மின்நிலையத்தின் அமைப்பை வடிவமைத்தார்.

18991900 காலகட்டங்களில் டெஸ்லா வடிவமைத்த   Terrestrial Stationary Waves   எனும் கண்டுபிடிப்பு, உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. செயற்கையான முறையில் மின்னலை உருவாக்கினார். 19011905 காலகட்டத்தில் லாங் ஐலண்ட் என்னுமிடத்தில் ஒரு டவரை உருவாக்கிக்காட்டினார். அது ‘டெஸ்லா டவர்’ என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் மிகவும் அதிகமான அதிர்வெண்களை உடைய மின் சிக்னல்களையும் உருவாக்க முயன்றார்.

இவரது கண்டுபிடிப்புகளில் புகழ்பெற்றது ‘டெஸ்லா சுருள்’ (Tesla Coil). இந்த உபகரணம் 120 வோல்ட் மாறு திசை மின்சாரத்தை ஆயிரக்கணக்கான கிலோ வோல்ட் சக்தியுள்ள டிரான்ஸ்ஃபார்மருக்கும், அதனுடன் இணைக்கப்பட்ட இயங்கும் மின் இணைப்புக்கும் எடுத்துச் சென்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வோல்ட்டில் மின்சாரத்தை தீப்பொறிகளைப் போல பரவச் செய்கிறது. இன்றும் இத்தகைய அனுபவத்தை பெல்கிரேடில் உள்ள ‘நிக்கோலா டெஸ்லா’ அருங்காட்சியகத்திற்குச் சென்றால் காணலாம். சாதனை நாயகன் நிக்கோலா டெஸ்லா 1943ல் மறைந்தார்.

சி.பரத்