மகளே... உனக்காக!



ஒரு குழந்தை... ஒரு கடிதம்!

‘ஃபேஸ்புக்’ சிஇஓ மார்க் ஜுகர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. எல்லா பெற்றோருக்கும் இருக்கும் சந்தோஷத்தை விட கூடுதல் சந்தோஷம். காரணம், சில கருச்சிதைவுகளுக்குப் பிறகு குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்ததுதான். மகளுக்கு மாக்ஸிமா (செல்லமாக ‘மாக்ஸ்’) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

 மாக்ஸ் பிறந்ததைக் கொண்டாடும் விதத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திலுள்ள தங்களுடைய பங்கில் 99 சதவிகிதத்தை (45 பில்லியன் அமெரிக்க டாலர்) அறக்கட்டளைக்கு அளித்துள்ளனர் மார்க்கும் பிரிசில்லாவும். தங்கள் செயலுக்கான காரணத்தை மாக்ஸுக்கு நீண்ட கடிதமாக எழுதியிருக்கிறார்கள். அக்கடிதத்தின் சுருக்கமான பகுதி...

டியர் மாக்ஸ்,உன் அம்மாவுக்கும் எனக்கும் நீ எதிர்காலத்தில் கொடுக்க இருக்கும் நம்பிக்கையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எல்லா பெற்றோர்களையும் போலவே, நீ வளர்ந்து வரும்போது உலகம் இன்னும் உன்னதமாக இருக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.

பல வகைகளில் இந்த உலகம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியிருக்கிறது. சுகாதாரத்தில் இன்னும் மேம்பட வேண்டும். வறுமை குறைய வேண்டும். அறிவு வளர வேண்டும். மக்கள் அனைவரும் இணைக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத் துறையில் இன்றைய நிலையை விட, உன்னுடைய காலத்தில் நிச்சயம் இந்த உலகம் முன்னேறியிருக்கும்.

உலகத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் எங்களுடைய பங்களிப்பாக இதைச் செய்ய இருக்கிறோம். இது உன் மீது நாங்கள் வைத்திருக்கும் அன்புக்காக மட்டுமல்ல...  அடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளின் மீதும் எங்களுக்கு இருக்கும் தார்மீகப் பொறுப்பின் காரணமாகவும் இதைச் செய்கிறோம்.அனைத்து உயிர்களும் சம மதிப்புக்கொண்டவை என்று நாங்கள் நம்புகிறோம்.

 எதிர்காலத் தலைமுறையினர் இன்றைய தலைமுறையினரை விட நிச்சயம் பல விதங்களிலும் முன்னேறியிருப்பார்கள். அதற்கு இன்று இருக்கும் பல விஷயங்களைத் தவிர்த்து, புதிய விஷயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்று எங்கள் தலைமுறை நோய்களுக்காக 50 மடங்கு செலவு செய்துகொண்டிருக்கிறது. அதனால் உன் தலைமுறையில் நோய்கள் வராமல்  இருப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த  100 ஆண்டுகளில் மருத்துவமே உண்மையான விஞ்ஞானமாக மலர்ந்திருக்கிறது. சில நோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்த முடிவதைப் பார்க்க முடிகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோய் தடுக்கும் நடவடிக்கைகள், குணமாக்கும் நடவடிக்கைகள், சமாளிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை வரும் 100 ஆண்டுகளில் செய்ய வேண்டியிருகிறது.இன்று 5 முக்கிய நோய்களில் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதய நோய், புற்றுநோய், பக்கவாதம், நரம்பு நோய்கள் மற்றும் தொற்று நோய்கள்.  இந்த நோய்களையும் மேலும் சில நோய்களையும் வேகமாகக் குணப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.உன் தலைமுறையோ, உன் குழந்தைகள் தலைமுறையோ இந்த நோய்களில் இருந்து விடுபடவேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காகவே முதலீடுகளை இந்தத் துறைகளில் செலவிட இருக்கிறோம். இதில் நானும் உன் அம்மாவும் ஒரு பகுதியாகச் செயல்பட இருக்கிறோம்.

குணப்படுத்தக்கூடிய நோய்களுக்கான வழிகள் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலம் ஆகலாம். இன்றே அதற்கான விதையை நட்டால்தான், உன் தலைமுறையினருக்கோ, உன் குழந்தைகள் தலைமுறையினருக்கோ நோய்கள் இல்லாத உலகத்தை அளிக்க இயலும். 

இதுபோன்ற எத்தனையோ வகைகளில் உலகத்தை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. அது மிகப்பெரிய சவாலாகவும் இருக்கப் போகிறது. ஆனாலும், உன்னுடைய தலைமுறைக்கு இன்றைய உலகத்தை விட இன்னும் மேம்பட்ட உலகத்தை கொடுத்துவிட்டுச் செல்வோம்.வலுவான உலகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றால், அதற்கு ஆரோக்கியமான மனிதகுலம் தேவை. குழந்தைகளுக்கு ஆரோக்கியம் குறித்து சொல்லிக் கொடுப்பதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்.

அன்பான, ஊட்டச் சத்துமிக்க, பாதுகாப்பான சூழ்நிலையில்தான் ஆரோக்கியம் ஆரம்பமாகும். அங்கேதான் சிறந்த சிந்தனைகள் உதிக்கும். இன்று எங்கள் கனவாக இருக்கும் நோய்கள் இல்லா உலகத்தில் நீயும் உன் குழந்தைகளும் வசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.இன்று மனித வளத்தை ஒருங்கிணைத்து, சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டிய பெரிய பொறுப்பு காத்திருக்கிறது.

நம் சமூகத்தில் சில விஷயங்களை நீதியை நிலைநாட்டுவதற்காகவோ, அறக்கட்டளைக்காகவோ செய்ய நினைக்கவில்லை... மனிதர்களின் முன்னேற்றத்துக்காகச் செய்ய வேண்டியிருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் அறிவையும் திறமையையும் சமூகத்துக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.  

எங்கள் தலைமுறையால் வறுமையையும் பட்டினியையும் அகற்ற முடியுமா?எல்லோருக்கும் மருத்துவ சேவைகளை வழங்க முடியுமா?அனைத்து நாடுகளுக்கு இடையேயும் அமைதியையும் நல்லுறவையும் புரிதல்களையும் ஏற்படுத்த முடியுமா?பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், அகதிகளுக்கு அதிகாரங்களை வழங்கியிருக்கிறோமா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் ‘முடியும்’ என்று பதில் அளிக்கிறோம். அதற்காகத்தான்  இந்த முதலீடு. உன் வாழ்நாளுக்குள் இது நிஜமாக வேண்டும் என்று நினைக்கிறோம்.பெற்றோராக நாங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில் இணைபவர்களுக்கு எங்கள் பாராட்டுகள். எங்களுக்குப் பின்னால் வலுவான சமூகம் இணையும்போதுதான் இந்த வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். ஃபேஸ்புக் மூலம் இந்த வேலைகள் சிறப்பாகாகக் கட்டமைக்கப்படும். ஃபேஸ்புக்கில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செலுத்துவார்கள்.

எங்கள் வழிகாட்டிகள், பங்குதாரர்கள், நிபுணர்கள் எங்களின் சுமைகளைத் தங்கள் தோள்களில் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.அன்பான குடும்பம், ஆதரவளிக்கும் நண்பர்கள், அற்புதமான சக ஊழியர்களால் இந்தத் திட்டம்  செயல்படுத்தப்பட இருக்கிறது. இவர்களால் ஆழமான, உத்வேகம் அளிக்கக்கூடிய உறவுகள் உனக்குக் கிடைக்கப் போகிறது என்று நம்புகிறோம்.

மேக்ஸ்... நீ எங்களுக்குக் கொடுத்த இதே அன்பையும் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் வாழ்நாள் முழுவதும் உனக்கும் திருப்பி அளிக்க இருக்கிறோம்.நீ இந்த உலகத்துக்கு என்ன செய்யப் போகிறாய் என்பதைப் பார்க்க எங்களால் காத்திருக்க இயலாது.அன்புடன் அம்மா-அப்பா

இன்று மனித வளத்தை ஒருங்கிணைத்து, சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டிய பெரிய  பொறுப்பு காத்திருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு  மனிதனின் அறிவையும் திறமையையும் சமூகத்துக்குப் பயன்படுத்த  வேண்டியிருக்கிறது.  

விஜயா ஆனந்த்