64 வகை ஜுரங்கள்!



சித்தம் சிறப்பு

மழை அடித்து ஓய்ந்திருக்கும் பருவநிலை சூழலில் தொற்றுநோய்கள் வரிசைகட்டித் தாக்கும். டைபாய்டு, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் மக்களை தாக்கக்கூடும். உணவிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் கூட கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

இந்த நெருக்கடி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள சித்த மருத்துவம் சிறந்தது. எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நோய்கள் வராமல் காக்கலாம் என விளக்குகிறார் சித்த மருத்துவர் எஸ்.ராமசாமி பிள்ளை...

 ``சித்த மருத்துவத்தில் மொத்தம் 64 வகை ஜுரங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இதையே வாத ஜுரம், பித்த ஜுரம், கப ஜுரம் என மூன்று வகையாக பிரித்துள்ளார்கள். இதில் வைரஸ் காய்ச்சலை விஷ ஜுரம் எனக் குறிப்பிட்டு அதற்கான மருந்துகளையும் எழுதி வைத்துள்ளார்கள். அவதி ஜுர நூல், ஜுர நிதானம், மரண கண்டி சாஸ்திரம் போன்ற நூல்களை ஓலைச்சுவடியில் எழுதிச் சென்றுள்ளார்கள் நமது முன்னோர்.

இவற்றில் ஒவ்வொரு ஜுரத்திற்கும் தேவையான மருத்துவ குறிப்புகளும் உள்ளன. வாத ஜுரத்தில் கை, கால் வலி அதிகமாக இருக்கும். பித்த ஜுரத்தில் வயிறு சம்பந்தமான உபாதைகள் இருக்கும். கப ஜுரத்தில் இருமல், சளி தொல்லை இருக்கும். இதில் விஷ ஜுரம் என்னும் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை பயன்படுத்த சொல்லி இருக்கிறார்கள்.

நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு உள்பட 9 மூலிகைகளின் கலவை. இதை `மூலிகை பென்சிலின்’ என்று சொல்லலாம். நல்ல எதிர்ப்பு சக்தியை தந்து உடலில் காய்ச்சலை பரவவிடாமல் தடுக்கும். நிலவேம்பு பொடியை 8 பங்கு நீரில் கலந்து, அதை ஒரு பங்காக சுண்ட வைத்து குடிக்க வேண்டும். நில வேம்பு சூரணமும் கிடைக்கிறது. இதையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்க... அரசும் தொண்டு நிறுவனங்களும் உணவு, குடிநீர், உடை வழங்குவது போலவே, நிலவேம்புப் பொடி அல்லது சூரணத்தை மக்
களுக்கு இலவசமாக வழங்குவது அவசியம். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்களுக்கு ஆடாதொடா இலை, வில்வ இலை, துளசி ஆகியவற்றை இடித்து வெது
வெதுப்பான நீரில் கலந்து குடித்து வரலாம். மோர் அளவாக அருந்தலாம்.

கட்டித் தயிரை பயன்படுத்துவதை அடுத்த ஒரு மாதத்துக்குத் தவிர்த்துவிடுங்கள். அதனால் பாக்டீரியாக்களின் பாதிப்பு உருவாகலாம். தொண்டை கரகரப்பு அல்லது தொண்டையில் நோய்த்தொற்று உள்ளவர்கள்  சூடான பாலில் பனங்கற்கண்டு, மிளகு, தேன் - இந்த மூன்றும் கலந்து நாளுக்கு இரு வேளை அருந்தி வரலாம். காய்ச்சிய வெதுவெதுப்பான நீரை மட்டும் குடித்து வாருங்கள்.

 வீட்டில் குப்பை, கூளம் சேராமல் அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது. பழைய துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை கொசு உற்பத்தியை அதிகப்படுத்தும். நொச்சி இலை புகை போட்டு வந்தால் கொசுக்கள் வரத்து குறையும். சித்த மருத்துவக் கடைகளில் மகா சுதர்சன மாத்திரைகள் கிடைக்கும். இதை தினமும் இரண்டு வேளை எடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

 வெட்டு மாறன் மாத்திரைகள் நாட்டு மருந்து, சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். காய்ச்சலை விரட்டக்கூடிய தன்மை உள்ளது. இதை ஒரு வாரம் தினமும் இருவேளை வீதம் எடுத்து வரலாம். டைபாய்டு போன்ற குடல் ஜுரம் வரும் காலம் இது. எனவே, எளிதில் செரிக்கக் கூடிய இட்லி, இடியாப்பம் ஆகிய உணவுகளை எடுக்கலாம். அசைவ உணவுகள் குடலுக்கு தொந்தரவைக் கொடுக்கும். அடுத்த ஒரு மாதம் அசைவ உணவுகளுக்கு `நோ’
சொல்லிவிடுங்கள்.

மைதா மாவில் செய்யும் புரோட்டா, கேக் உள்ளிட்ட பலகாரங்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு தின்பண்டங்களை முழுமையாகத் தவிர்த்து விடுங்கள். சர்க்கரையின் பயன்பாட்டையும் உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். குடலின் தாங்கு திறனை இனிப்புப் பண்டங்கள் குறைத்துவிடும்.தண்ணீர் நிறைய குடியுங்கள். உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும்.தொடர்ந்து காய்ச்சல் இருந்தாலோ, வீட்டு நிவாரணிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை என்றாலோ உடனடியாக மருத்துவரிடம் காட்டுவதுதான் நல்லது.

- விஜய் மகேந்திரன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்