தற்கொலையைத் தூண்டுமா டாட்டூ?



அதிர்ச்சி


டாட்டூ குத்திக் கொள்வதும், உடலைத் துளையிட்டு வளையங்கள் மாட்டிக் கொள்வதும் இன்றைய இளசுகளின் ஃபேஷன். மேலோட்டமாகப் பார்த்தால், இவை அவர்களின் முரண்பாடான தோற்றத்தைப் பிரதிபலித்தாலும், இந்தப் பழக்கங்கள் கொண்டவர்கள் மனதளவில் பலவீனமானவர்களே என்கிறது சமீபத்திய ஆய்வு.

‘தங்கள் உடலில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட டாட்டூகளை குத்திக் கொள்ளும் பெண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் அதிக முறை தற்கொலை முயற்சிகளில் இறங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் பின்புலத்தை ஆராயும்போது, கஞ்சா மற்றும் சட்டத்துக்குப் புறம்பான போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லது இவர்கள் ஏதாவதொரு சமூகவிரோத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள்’ என்ற தகவலை அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 டாட்டூ குத்திக் கொள்வதினால் மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விளக்கமளிக்கிறார் மனநல மருத்துவர் கவிதா.‘‘பண்டைய காலத்தில் அடிமைகளை அரச பரம்பரையினரிடமிருந்து வேறுபடுத்துவதற்காக பச்சை குத்தும் பழக்கத்தைப் பின்பற்றினர் எகிப்தியர். பிறகு சீனர், ஜப்பானியர் மதம் சார்ந்த சில அடையாளங்களை தங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டனர். நம் நாட்டிலும் கிராமப்புறங்களில் பெண்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்காக பச்சை குத்திக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம்.  பின்னர் நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் விதமாக தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் போன்றவற்றை பச்சை
குத்திக் கொண்டனர். இன்றோ,

கல்லூரிப் பெண்களிடையே ஃபேஷனாக மாறி உடலில் நான்கைந்து இடங்களில் டாட்டூ குத்திக் கொள்வது சகஜமாகி விட்டது. தங்களை மதிப்பு மிக்கவர்களாக நட்பு வட்டாரத்திலும், உறவினர் மத்தியிலும் உயர்த்திக் காட்டிக்கொள்ளவே இவர்கள் இப்படிச்  செய்கிறார்கள். ஆண்களின் பார்வையில், இத்தகைய பெண்கள் வரைமுறையற்றவர்களாகவும், சமூகத்துக்குக் கட்டுப்படாதவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

பறவைகள், பட்டாம்பூச்சிகள், பூக்கள் போன்ற மென்மையான உருவங்களை வரைந்து கொள்பவர்கள் பிரச்னையற்றவர்களாக இருந்தாலும், ‘நான் இப்படித்தான்’ என்ற தன் முரண்பட்ட குணத்தை பறைசாற்றும் விதமாக எலும்புக்கூடு, தேள், பாம்பு மற்றும் பேய் போன்று பயங்கர உருவங்களை வரைந்து கொள்பவர்கள் சமூக விரோதத் தன்மை உடையவர்களாகவும், போதை மருந்துகளுக்கு அடிமையாகி, பாலியல் துஷ்பிரயோகத்துக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

மன அழுத்தம், உண்ணுதல் கோளாறுகள், நடத்தைக் கோளாறுகள் போன்ற உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து விடுபட்டவர்களாக தனி ஒரு உலகில் உழல்கிறார்கள். இதுபோல அதிக எண்ணிக்கையில் தங்கள் உடலில் டாட்டூ குத்திக் கொண்டும், உடலில் பல இடங்களில் துளையிட்டு வளையங்கள் மாட்டிக் கொண்டிருப்பவர்களில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருப்பதாகவும், பலமுறை தற்கொலை முயற்சிகளில் இறங்கியவர்களாக இருப்பதையும் அறிகிறோம்” என்கிற டாக்டர் கவிதா மருத்துவ ரீதியாகவும் விளக்குகிறார்.

‘‘மருத்துவ அடிப்படையிலும் இது ஆபத்தானதுதான். ஏனெனில், டாட்டூ குத்தப் பயன்படுத்தும் ஊசியில் மையைத் தடவி ஒரு மிஷின் மூலம் மேற்புற
சருமத்தில் குத்திக்குத்தி எடுப்பதால் சருமத்தின் அடிப்பகுதியில் உள்ள திசுக்கள் சேதமடைகின்றன. சிவப்பு, பச்சை, மஞ்சள் சாயங்களை பயன்படுத்தி டாட்டூ குத்தும்போது  ஒவ்வாமையினால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு சருமத்தில் அரிப்பு, தடிப்புகளை ஏற்படுத்தும்.

அதைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படும். மேலும் சுகாதாரமற்ற வகையில் ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தும் போது ஹெபடைடிஸ், டெட்டனஸ், எச்.ஐ.வி. போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. இதன் விளைவுகள் உடனே வெளியே தெரியாவிட்டாலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூட மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

காதலர் பெயரை பச்சை குத்திக் கொள்வோர், அந்தக் காதல் தோற்றுப் போகும் நிலையில், குற்ற உணர்வுக்கு ஆளாகி, அதை மறைக்கும் வகையில் உடை அணிய நினைக்கிறார்கள். இன்னும் சிலர் அதை அழிக்க முற்படுகிறார்கள். இவ்வாறு அழிக்க நினைப்பவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் தயாராகிறார்கள். இந்த குற்ற உணர்வே அவர்களை தற்கொலை முயற்சிவரை கொண்டு போய்விடுகிறது. அதனால், நம் மனதையோ, உடலையோ பாதிக்காத நாகரிகத்தை கடைபிடிப்பதே நல்லது” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் கவிதா.

மருத்துவ அடிப்படையிலும் இது ஆபத்தானதுதான். ஏனெனில், டாட்டூ குத்தப் பயன்படுத்தும் ஊசியில் மையைத் தடவி ஒரு மிஷின் மூலம் மேற்புற சருமத்தில் குத்திக்குத்தி எடுப்பதால் சருமத்தின் அடிப்பகுதியில் உள்ள திசுக்கள் சேதமடைகின்றன.

கேப்ஸ்யூல்

தைலம் தேய்ப்பது தலைவலி, ஜலதோஷத்துக்கு நிவாரணம் தருமா?

பொது மருத்துவர் திலகவதி சுகுமார்... ``தைலம் தேய்ப்பதால் பெரிய நிவாரணம் எதுவும் கிடைக்காது. தைலம் தேய்க்கும் போது உடனடியாக தலைவலி குறைவது போல ஒரு உணர்வு இருக்கும். உண்மையில் இது உண்மையல்ல! அப்படி தோன்றுவது மனரீதியான திருப்தியே. காய்ச்சல் மூலம் வரும் தலைவலிக்கு தைலத்தால் எவ்வித பயனும் இல்லை.

சுக்கும் மல்லியும் அரைத்து பாலில் கலந்து காலை நேரங்களில் குடித்து வந்தாலே தலைவலி ஏற்படாது. அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் போது ஏற்படும் மன உளைச்சலால் தலைவலி ஏற்படும். நீண்ட நேரம் கம்ப்யூட்டர்  பார்ப்பவர்களுக்கும் தலைவலி வரும். இவர்கள் அந்த வேலையில் இருந்து ஒதுங்கி 5 முதல் 10 நிமிடம் ஓய்வெடுத்தாலே தலைவலி குறையும். அப்படியும் குறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.’’

- சேரக்கதிர்

- உஷா