வாழவைக்கும் வாழை இலைக்கு ஜே!



இயற்கை இனிமை

வெப்ப மண்டல நாடுகளில் வாழ்பவர்களுக்கு இயற்கை கொடுத்த கொடை என்று நாம் வாழையைச் சொல்லலாம். வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள்.

வீட்டு விழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும் மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.

விழாக்களில் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு மட்டுமல்ல... சூழலியலுக்கும் நல்லது என்கிறார் சித்த மருத்துவர் மருதமலை ஆர்.சுப்ரமணியம்.

‘‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது.

அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருளாக இருக்கிறது.நமது முன்னோர் உணவு பரிமாறு வதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல... வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் செல்  சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும்.

அதோடு மன அழுத்தம், புற்றுநோய்  மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள டிஎன்.ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து  பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

சூடான சாப்பாட்டை வாழைஇலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol
சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான்.

மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது. அழுகி விடாது. வாழை இலை வெளியிடும் ஆக்சிஜன் அந்தப் பொருட்களுக்கும் கிடைப்பதால் அவை ஃப்ெரஷ்ஷாக இருக்கும்.

வாழை இலையின் குளிர்ச்சி உணவை சீக்கிரம் ஆற வைத்து விடும். இயற்கை மருத்துவத்தில் வாழை இலையை  சூரியக் குளியலுக்கு பயன்படுத்துகிறோம்.
சுவாசிப்பதற்கான துவாரம் விட்டு உடல் முழுவதும் வாழை இலையை வைத்துக் கட்டி வெயிலில் படுக்க வைத்து விடுவோம். வெயில் இலை வழியாக உள்ளே  வந்து வியர்வையை உண்டாக்கும். இதனை சூரிய ஒளி இலைக்குளியல் என்போம். இதனால் சரும நோய்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும், செரிமான சக்தி அதிகரிக்கும். மேலும் வியர்வைத் துவாரங்கள் திறந்து  கொள்வதால் நுரையீரலின் மூச்சு விடும் சக்தி அதிகரிக்கிறது. இதனால் மிகுந்த  புத்துணர்ச்சி
ஏற்படும். வைட்டமின் டி சத்து பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சூரிய ஒளி இலைக்குளியல் ஆகச்சிறந்த  மருத்துவம்.

தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், சீக்கிரம் காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது. வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால்
தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து. சரும அரிப்பு, பூச்சிக்கடி ஆகியவற்றுக்கும் வாழை இலை மருந்தாகப் பயன்படுகிறது. கல்லீரல்தான் நமது உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக செயல்படுகிறது. வாழை இலை கல்லீரலுக்கு உகந்தது. கல்லீரலைத் தாக்கக்கூடிய நோய் மஞ்சள் காமாலை. வாழை இலையை அரைத்து அதை மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.

வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமே நின்று விடவில்லை. சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. ஆகவே, வாழை இலையில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான உணவகங்களில் பாலிதீன் தாளில்தான் உணவு பரிமாறுகிறார்கள். சூடான உணவை அதில் பரிமாறும்போது அதன் நச்சு உணவில் கலந்து கேடு விளைவிப்பதோடு, அது மக்காமல் சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்தும்.

யானைக்கு சில மருந்துகள் கொடுக்கும்போது வாழை இலையில் வைத்துதான் கொடுப்பார்கள். சில வகை உணவுப் பொருட்களை நீராவியில் வேக வைக்க வாழை இலையில் சுருட்டிதான் வேக வைப்பார்கள். இப்படியாக நமது உணவுப் பழக்கத்தில் வாழை இலை மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. திருவிழா மற்றும் வீட்டு விசேஷங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்பதால்தான், வாழைக்கம்பங்களை நட்டு வைக்கிறோம்.

இப்படி பார்க்கும்போது நமது பண்பாட்டில் வாழைக்கு முக்கியமான இடம் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு  நுட்பமாக  ஆராய்ந்து இதனை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதையும் உணர முடியும்’’ என்கிறார் சுப்ரமணியம்.

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

கேப்ஸ்யூல்

மாரடைப்பு  தவிர்க்க...

தூங்கச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வருவதைத் தவிர்க்கலாம் என்பது உண்மையா?

இதய நோய் சிறப்பு மருத்துவர் செங்கோட்டு வேலு...மாரடைப்புக்கும்  தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பே இல்லை. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு  நோய் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வரும். மாரடைப்பு வருவதைத்  தவிர்ப்பதற்கான முன்னெடுப்புகள் நம்மிடத்தில்தான் இருக்கின்றன. மது, சிகரெட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். குப்பை உணவுகளைத் தவிர்த்து  காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 8-10 மணி நேரம்  தூங்க வேண்டியது அவசியம். நமது வாழ்வியலை முறைப்படுத்தி வாழ்ந்தோம் என்றால்  மாரடைப்பைத் தவிர்த்து விடலாம்.

- கிருஷ்ணவேணி

- கி.ச.திலீபன்
மாடல்: அர்ச்சனா ஹரிஷ்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்