மழையும் பிழையும்!



வருமுன் காப்போம்

மழையைப் பற்றிய எல்லா இனிமையான நினைவுகளையும் கலைத்துப் போட்டுவிட்டது இந்த வட கிழக்குப் பருவ மழை. பொருள், உயிர் என பல்வேறு இழப்புகளைக் கடந்து பலரும் நிற்கும் இந்த நேரத்தில், அடுத்தகட்ட சவாலாக மழையால் உண்டாகும் நோய்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

 ஆனால், இந்த முறை ஜெயிக்கப் போவது நாமாக இருக்க வேண்டும் என்றால்,  அதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது
அவசியம் என்பதை உணர்த்துகிறார் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான னிவாசன்.

தண்ணீர் குடிக்கும்போது...இது அடிக்கடி நாம் சொல்வதுதான். பெரும்பாலான நோய்கள் தண்ணீரின் மூலமே வருவதால் தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருந்தாலே 95 சதவிகித நோய்களை வராமல் தடுத்துவிட முடியும். சாக்கடையுடன் தண்ணீர் கலப்பது, எலி போன்ற உயிரினங்கள் செத்துக் கிடப்பது, தெருவில் கிடக்கும் குப்பைகள் போன்ற காரணங்களால் தண்ணீர் மாசு அடையும். அதன் காரணமாக ஃபுட் பாய்ஸன், வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் ஏ போன்ற நோய்கள் வரலாம். அதனால் கேன் வாட்டராக இருந்தாலும், என்ன தண்ணீராக இருந்தாலும் காய்ச்சிக் குடிப்பதே பாதுகாப்பானது.

குறிப்பாக, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு பிரஷர் குக்கரில் தண்ணீரைக் காய்ச்சி, 15 விசில் வந்தபிறகு எடுத்துப் பயன்படுத்தலாம். மருத்துவமனைகளில் Autoclave என்ற முறையில் 130 டிகிரியில் நுண்கிருமிகளை நீக்குவார்கள். பிரஷர் குக்கரில் காய்ச்சும் இந்தத் தண்ணீரில்  ஆட்டோக்ளேவ் முறைக்கு இணையாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகள் நீங்கிவிடும்.

தண்ணீரில் நடப்பதால்...தெருக்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் எலியின் சிறுநீர் கலந்திருக்க வாய்ப்பு அதிகம். இந்தத் தண்ணீரில் நடப்பதால் ப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்ற பிரச்னை வரலாம். இது எலியால் ஏற்படும் பிளேக் போன்றது என்றாலும் எளிதில் குணப்படுத்தக் கூடியதுதான். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்றவை லெப்டோஸ்பைரோசிஸின் அறிகுறியாக இருக்கும்.

பலர் மீட்புப்பணி காரணமாகவும் தண்ணீரிலேயே புழங்கியிருக்கிறார்கள். இவர்கள் Doxycycline 200mg மாத்திரையை வாரம் ஒன்று என 6 வாரத்துக்கு சாப்பிட வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்றவர்களும் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. 14 வயதுக்குக் கீழ் இருக்கிற குழந்தைகளுக்கு பற்களில் மஞ்சள் நிறம் உருவாகும் என்பதால் இந்த மாத்திரையைக் கொடுக்கக் கூடாது. தண்ணீர் தொட்டியில்...வீடுகளில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தேவைக்கேற்ப பிளீச்சிங் பவுடர் அல்லது குளோரின் கலந்து கொள்வது நம்மைப் பாதுகாக்கும். இதன் மூலம் பல நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 
வீட்டுக்குள் தண்ணீர் வந்திருந்தால்...

இந்த மழையில் பல வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. இப்போது தண்ணீர் வடிந்த பிறகு, அப்படியே மீண்டும் அந்த வீட்டைப் புழங்கக் கூடாது. தரையை இரண்டு முறை தண்ணீரால் நன்கு கழுவிவிட்ட பிறகு, பினாயில் போன்ற நுண்கிருமிகள் நீக்கியினைக் கொண்டு ஒரு முறை கழுவிவிட வேண்டும். 
உணவுகள்...

அவ்வப்போது சூடாக சமைத்து சாப்பிடுவது நல்லது. காலையில் சமைத்ததை மதியம் சாப்பிடுவதால் பிரச்னை இல்லை. ஆனால், இரவில் சமைத்ததைக் காலையில் சாப்பிடக் கூடாது. ஓட்டல்களில் இன்னும் ஒரு மாதத்துக்காவது சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் இட்லி, இடியாப்பம் போன்ற வேக வைத்த, சூடான உணவுகளை சாப்பிட்டுக் கொள்ளலாம். சாட் உணவுகள், ஜூஸ் போன்றவை நல்லதல்ல. ஜூஸில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகள் மூலம் நிறைய நோய்க் கிருமிகள் பரவுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வீட்டில் யாருக்கேனும் ஃபுட் பாய்ஸன் ஏற்பட்டிருந்தால் மற்றவருக்கும் பரவக்கூடும் என்பதாலும் சூடான உணவுகள் சாப்பிடுவதே சிறந்தது.கொசுத் தொல்லை...சாக்கடைத் தண்ணீரிலோ, சாக்கடை கலந்த தண்ணீரிலோ கொசுக்கள் வளராது. தேங்கியிருக்கும் சுத்தமான தண்ணீரில்தான் வளரும். இந்தக் கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் வரலாம் என்பது பலரும் அறிந்ததுதான். அதனால், வீட்டைச் சுற்றி மழைத் தண்ணீர் தேங்கியிருந்தால் அந்தத் தண்ணீரை அகற்றிவிட வேண்டும்.

முடியாத பட்சத்தில், அந்தத் தண்ணீரில் கடலை எண்ணெயைக் கொஞ்சம் மிதக்கும் அளவு விட்டால் கொசு உருவாகாது. கொசு தண்ணீரின் அடியில்தான் உருவாகும். எண்ணெய் தண்ணீரில் மேல் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும்போது கொசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் கொசு வளராது என்பதே இதன் ரகசியம். முடிந்தால் டீசலை கூட தண்ணீரின் மேல் தெளிக்கலாம். வீட்டைச் சுற்றி சாயங்கால வேளைகளில் கொசு மருந்து அடிப்பதும் அவசியம். தேங்கியிருக்கும் தண்ணீரில் பிளீச்சிங் பவுடரும் போடலாம். 24 மணி நேரத்துக்குத்தான் அது வீரியமாக இருக்கும். அடுத்த நாள் மறுபடியும் பிளீச்சிங் பவுடர் போட வேண்டும்.

மலேரியாவை உருவாக்கும் கொசுக்களான Anopheles mosquitoes இரவில் கடிக்கும். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் Aedes Aegypti mosquitoes காலை நேரங்களில் கடிக்கும். வீட்டின் டாய்லெட்டிலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு இருக்கும். காயம் ஏற்பட்டால்...மழைக் காலங்களில் காயம் ஏற்பட்டால் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகளால் எளிதில் தொற்று உண்டாகவும், சீழ் வைக்கவும் வாய்ப்பு அதிகம். அதனால் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. குறிப்பாக, நீரிழிவு நோய் இருக்கிறவர்கள், குழந்தைகள் காலில் அடிபட்டால் உடனடியாக கவனிப்பது நல்லது. பெரிய காயமாக இருந்தால் கட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும்.

தற்காத்துக் கொள்ள...

  மஞ்சள் காமாலை வராமல் தடுக்கவும், மழையால் அரிதாக ஏற்படுகிற ஜப்பானிய காய்ச்சலுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தண்ணீர் இருக்கும் இடங்களில் வெளியில் சென்றுவிட்டு வந்தால் கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இதனால் சேற்றுப் புண் உள்ளிட்ட சரும நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் இல்லையென்பதால் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது.

குழந்தைகளைப் பாதுகாக்க...

குழந்தைகள் வெளியிடங்களில் விளையாடும்போது செருப்பு இல்லாமல் விளையாடக் கூடாது. ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் விளையாடுவதால் கொசு கடித்து காய்ச்சல் வர வாய்ப்புண்டு. அதனால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கக் கூடாது. காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா, பன்றிக்காய்ச்சல் வந்திருக்க வாய்ப்பு உண்டு. உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

கையை வைத்துப் பார்த்தால் கொதிப்பதிலேயே இந்த அளவை உணர முடியும். குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டால் ORS தண்ணீரை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கலாம். தலைவலி, வாந்தி, உடல் வலி, வலிப்பு, வயிற்றுப்போக்கு, கண்கள் மஞ்சளாக இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
இன்னும் கொஞ்சம் கவனம்...

வெறும் கால்களில் நடக்கக் கூடாது. குளிப்பதற்கு கார்பரேஷன் வாட்டர் பாதுகாப்பானதுதான். முடிந்தால் கொஞ்சம் வெதுவெதுப்பாக சுட வைத்துக் குளித்துக் கொள்ளலாம். தண்ணீரில் ஏதேனும் கலந்த மாதிரி நிறம் மாறி இருந்தால் தண்ணீரை வடிகட்டிக் குளிப்பது நல்லது. இதன்மூலம் அரிப்பு போன்ற சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தவிர்த்துவிடலாம். ஏற்கனவே இருந்தாலும் அதிகமாகாது. மழைக்காலம் இன்னும் முடியவில்லை என்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு கவனமாக இருப்பது அவசியம்!

மருத்துவமனைகளில் Autoclave என்ற முறையில் 130 டிகிரியில் நுண்கிருமிகளை நீக்குவார்கள். பிரஷர் குக்கரில் காய்ச்சும் இந்தத் தண்ணீரில் கிட்டத்தட்ட  ஆட்டோக்ளேவ் முறைக்கு இணையாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் போன்ற  நுண்கிருமிகள் நீங்கிவிடும்.

- ஞானதேசிகன்