டி.வி. + நொறுக்குத்தீனி = ?



செய்திகள் வாசிப்பது டாக்டர்!

டி.வி.யில் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ சண்டைப் படங்களை பார்ப்பவர்களின் வீட்டில், அந்தச் சத்தத்தையும் மீறி ‘கருக் முருக்’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சிப்ஸ், முறுக்கு, காராசேவு, பாப்கார்ன் என்று படம் பார்ப்பவர்கள் உள்ளே தள்ளிக்கொண்டே இருப்பார்கள்.

 அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சி இதழ், இந்தப் பழக்கம்தான் ஒபிசிட்டி எனப்படும் பருமன் நோய்க்கு மூல காரணம் என்கிறது. அதுவும் சண்டைப் படங்களையும் ‘அடுத்து என்ன நடக்கும்’ எனத் தெரியாமல் மூளைக்கு வேலை வைக்கும் த்ரில்லர் படங்களையும் பார்க்கும் போது அதிகமாக தீனி சாப்பிடுகிறார்களாம்.

தொடர்ந்து பல மணி நேரங்கள் இவ்வாறு ஒரே இடத்தில் உட்கார்ந்து படம் பார்ப்பதால் உடலில் உள்ள கலோரிகள் கரையாமல் அப்படியே இருக்கும். உடலுக்கு அவசியமான கலோரிகளைத் தாண்டி, 65 சதவிகித அநாவசிய கலோரிகள் டி.வி. பார்க்கும் போது தீனிகள் சாப்பிடுவதால்தான் சேர்கிறதாம். பெண்களை விட ஆண்களே டி.வி. பார்க்கும் போது அதிகம் சாப்பிடுகிறார்கள். இதனால் பருமன் அதிகமாகி இதயம், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றனவாம்.

ஆகவே...

*மூன்று மணி நேரத்துக்கு மேல் டி.வி. முன்னால் உட்காரக் கூடாது.
*டி.வி. முன்னே உட்காரும் போது தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
*உடற்பயிற்சிக்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
*உடனடி உணவுகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது.

சர்க்கரையை அளவிட கூகுள் லென்ஸ் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, பிரபல மருந்து நிறுவனமான ‘நோவார்டிஸ்’ முதல்நிலை நீரிழிவு பிரச்னையைக் கண்டறிவதற்கு புதுவித ஸ்மார்ட் கான்டாக்ட்  லென்ஸ்களை கண்டுபிடித்துள்ளது. இதை அணிந்து கொண்டால் சர்க்கரை நோய் உள்ளதா என்பதை கண்ணீர் மூலம் கண்டறியலாம்.

லென்ஸ் உள்ளே ஒரு வயர்லெஸ் சிப் பொருத்தப் பட்டிருக்கும். இது நோயாளிகளின் மொபைல் போனுக்கு சர்க்கரையின் அளவை குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும். ரத்தப் பரிசோதனை செய்ய தேவையே இல்லை. இந்த லென்ஸ் விற்பனைக்கு வந்தால் உலகெங்கிலும் இருக்கும் முதல்நிலை நீரிழிவுக்காரர்கள் பயனடைவார்கள் என கூகுள் அறிவித்துள்ளது.