நம்பிக்கை
வாத்தியாரின் பிரம்புக்கு அடுத்து குழந்தைகள் பயப்படுவது ஊசிக்குத்தான். ஊசியைக் கண்டால் தெறித்து ஓடுபவர்கள் இருக்கும் அதே நேரம், டாக்டரிடம் வலிய ஊசி போடச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
ஊசி போட்டால்தான் நோய் குணமாகும் என்கிற அளவு கடந்த நம்பிக்கை அவர்களுக்கு... ஊசி என்பது கட்டாயமா? அல்லது தேவையைப் பொறுத்ததா? தேவை இல்லாமல் ஊசி போடுவதால் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும்? பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஆத்மார்த்தனிடம் பேசினோம்...
‘‘நோயாளிகள் கேட்கிறதுக்காக எல்லாம் டாக்டர்கள் ஊசி போடுறது இல்லை. ஊசி தேவையா, இல்லையானு சம்பந்தப்பட்ட டாக்டர்தான் முடிவு பண்ணணும். சிலர் சின்ன பிரச்னையா இருந்தாலும் டாக்டர்கிட்ட வருவாங்க.
லேசா காய்ச்சல், தலைவலினா அவங்களுக்கு மாத்திரைகள் கொடுத்தா போதும். ஒருத் தருக்கு ஐந்து நாட்கள் விடாமல் காய்ச்சல் இருக்குன்னா அவரது நோய்க்கூறை கண்டுபிடிச்சு சரியான இன்ஜெக்ஷன் போட்டா தான் சரியாகும். சிலருக்கு சில இன்ஜெக்ஷன் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அவங்களுக்கு ‘டெஸ்ட் டோஸ்’ போட்டு சரிபார்த்த பின்னாடிதான் இன்ஜெக்ஷன் போடணும். சிரிஞ்சு களை தொடக்கூடாது. டிஸ்போசபிள் ஊசிகளை ஒரு தடவைக்கு மேல் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
ஒருவருக்கு யூஸ் பண்ண சிரிஞ்சை இன்னொருத்தருக்கு போட்டா ‘ஹெபடைடிஸ் பி’, ‘ஹெபடைடிஸ் சி’, ‘ஹெச்.ஐ.வி.’ போன்றவை வரக்கூடிய ஆபத்துகள் இருப்பதால் சுத்தமான சிரிஞ்சுகளை பயன்படுத்துவது ரொம்ப முக்கியம்’’ - எளிமையாக விளக்குகிறார் டாக்டர் ஆத்மார்த்தன்.
நரம்பு எங்கிருக்கிறதென்றே தெரியாமல் தோராயமாக ஊசி குத்தும் மருத்துவம் படிக்காதவர்கள், முறையாக போடத் தெரியாதவர்கள் எல்லாம் ஊசி போடுகிறார்களே? ஊசி போடுவது அவ்வளவு எளிதானதா? இது சரியா?
இதனால் வரும் விளைவுகள்? ‘‘யாருக்கு, எப்படி இன்ஜெக்ஷன் போடணும்னு நிறைய முறைகள் இருக்கு. ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தொடையிலுள்ள ‘வாஸ்டஸ் லேட்டரலிஸ்’ என்னும் தசையில்தான் ஊசி போடவேண்டும்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கையில் ‘டெல்டாயிடு’ தசையில் போடலாம். கையில் சதைப்பற்று இல்லாத குழந்தைகளுக்கு இடுப்பில் உள்ள ‘குலுடஸ் மேக்ஸிமஸ்’ தசையில் போடுவது நல்லது.
பெரியவர்களுக்கு கையில் ‘டெல்டாயிடு’ தசையில் போடலாம். முறையாக ஊசி போட பயிற்சி எடுக்காதவர்கள் சில நேரம் சரியான இடம் தெரியாமல் நரம்பில் குத்தி விடுவார்கள். ஊசியை கையில் தவறாகப் போடுவதால் ‘ஆக்ஸிலரி’ நரம்பு பாதிப்படைகிறது. இதனால் கையைத் தூக்க முடியாமல் போகும். இடுப்பில் உள்ள தசையில் சரியான இடம் தெரியாமல் போடுவதால் ‘ஷயாடிக்’ நரம்பு பாதிப்படைந்து நடக்க முடியாமல் போகும்.
முறையான மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொள்வதுதான் நல்லது. எதற்கு, எந்த அளவு டோஸ் கொடுக்க வேண்டும் எனத் தெரியாமல், இன்ஜெக்ஷனில் ஓவர்டோஸ் கொடுத் தால் சில நேரங்களில் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகலாம். இன்ஜெக்ஷன் போடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும். மிகவும் சுத்தமான சிரிஞ்ச் பயன்படுத்தி, சதைப்பற்று உள்ள சரியான இடத்தில் ஊசியைச் செலுத்தினால் நோயாளிக்கு வலியும் தெரியாது... நோயும் தீரும்...’’
ஊசி போட்ட பின் அவசியம் தேய்த்து விட வேண்டுமா?
‘‘வாக்சின்ஸ் எனப்படும் தடுப்பூசிகள் போடப்பட்டாலும் மற்ற ஊசிகள் போடப்பட்டாலும் தேய்த்து விட வேண்டிய அவசியம் இல்லை. இன்ஜெக்ஷன் போடப்பட்ட இடத்தை 10 நொடிகள் அழுத்திப் பிடித்தால் போதும்...’’
சிறிய உடல்நலக் கோளாறுகளுக்கு கூட சில மருத்துவர்கள் ஊசி போடுவது சரியா?
‘‘நோயின் தீவிரத்தன்மையை பொறுத்தே ‘மாத்திரையா? ஊசியா?’ என்பது தீர்மானிக்கப்படும். மாத்திரையால் எளிதாகச் சரியாகும் சிறிய பிரச்னைகளுக்கு, முறையான மருத்துவர்கள் ஊசி போடுவதில்லை.
மருத்துவ உதவியாளர்களாக இருந்து ஊசி போடக் கற்றுக்கொண்டு சிலர் மருத்துவர்கள் இல்லாத கிராமங்களுக்கு செல்வார்கள். அவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டி எந்த நோய் என்றாலும் உடனடியாக ஊசி போடுவார்கள். எதற்கு எத்தனை டோஸ் கொடுக்க வேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
நோயாளிக்கு வலி அதிகமாக இருந்தால் டைகுளோபினாக் போன்ற ‘ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி’ மருந்துகள் வலியை குறைக்க உதவும். ஆனால், இந்த இன்ஜெக்ஷனை அடிக்கடி எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் பாதிப்படையும். முறையான மருத்துவரை ஆலோசித்த பிறகே எந்த மருந்தையும் இன்ஜெக்ஷனாக எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு போன்ற தீவிரமான உபாதைகளுக்கு ஊசி போட்டால் தான் நிற்கும் என்றால் உடனடியாக இன்ஜெக் ஷன் கொடுத்து அவர்களை சமநிலைக்கு கொண்டுவருவோம். ஐ.வி. ஃப்ளூயிட்ஸ் ஏற்றி அவர்களின் உடல் பலத்தையும் கூட்டலாம்...’’
நரம்பு வழியே ஊசி போடும் போது ரத்தநாளங்களைத் தேர்வு செய்வது கஷ்டமானதா?
‘‘பெரியவர்களுக்கு வெயின் எனப்படும் ரத்தநாளங்களில் செலுத்துவது எளிதானதுதான். குழந்தைகளுக்கு இந்த வெயினை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும். சில இடங்களில் வெயின் இருக்கும் என்று ஊசியை குத்துவார்கள். ஆனால், அங்கே கிடைக்காது. வேறு இடத்தில் தேட வேண்டி இருக்கும். இதற்குள் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள். கண்ணுக்கு நன்றாகத் தெரியும் பேசிலார் வெயின், செபாலிக் வெயின் போன்ற வெயின்களில் இன்ஜெக்ஷனை செலுத்துவது நல்லது...’’