அழகா...ஆபத்தா?



டாட்டூ


இன்றைய பெருநகர இளசுகள் அடிக்கடி உச்சரிக்கும் சொல்... டாட்டூ! த்ரிஷா, நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், டாப்ஸி உள்பட பல நடிகைகள் எக்குத்தப்பான இடங்களில் டாட்டூ குத்தி ரசிகர்களின் பிபியை எகிற வைக்கிறார்கள். இவர்கள் டாட்டூ குத்திக்கொண்டு நிற்கும் ஒய்யார புகைப்படங்களைப் பார்க்கும் இளம்பெண்களுக்கும் டாட்டூ ஆசை எட்டிப் பார்க்கிறது. அமீர்கான், சூர்யா, ஜெயம் ரவி போன்ற  நடிகர்கள் தங்களின் சிக்ஸ் பேக் உடலில் ஆங்காங்கே டாட்டூ குத்தி பச்சைக் கலாசாரத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கக்கூடிய ஆதிவாசி மக்கள் உடல் முழுவதும் ‘பச்சை’ குத்தி, அதையே தங்களது ஆடையாக அணிந்திருப்பதைக் காண முடிகிறது. மரபு
ரீதியாக தமிழினத்துக்கும் பச்சை குத்துதலுக்கும் பிணைப்பு உண்டு. கிராமங்களில் ஆசைக்குரியவர்களின் பெயரை பச்சை குத்தி அந்த அன்பை பிரகடனப்படுத்துவார்கள். கால ஓட்டத்தில் நவீனச் சூழலில் பச்சிலைச் சாறுகளில் பச்சை குத்தப்படுவதெல்லாம் காணாமல் போய்விட்டது. வண்ண வண்ண ரசாயன சாயங்களில் குத்தப்படும் டாட்டூதான் இப்போது ஹாட்!  ‘அழகென்றாலே ஆபத்துதானோ?’

என்கிற புதுமொழிக்கு டாட்டூ மட்டும் விதிவிலக்கா என்ன? ‘ஆபத்துதான்’ என்கிறார் சரும நல மருத்துவர் ஜி.ஆர்.ரத்தினவேல்.‘‘டாட்டூவில் நிரந்தரமானது, தற்காலிகமானது என இரு வகை உண்டு. இதில் தற்காலிக டாட்டூ அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும். இது ஸ்டிக்கர் ஒட்டி எடுப்பது போன்றது. இந்த தற்காலிக டாட்டூ சருமத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் தோல் சிவந்து போதல், கொப்புளம், அரிப்பு, தோல் கருப்பாகி விடுதல் போன்ற விளைவுகளை மட்டும் ஏற்படுத்தும். பெரிய பிரச்னைகள் ஏதுமில்லை.

நிரந்தர டாட்டூவில் அழகுக்காக போடும் டாட்டூ, வெண்குஷ்டம் போன்ற சரும நோய்களை மறைக்கப் பயன்படுத்தும் டாட்டூ என இரண்டு வகை உண்டு.சருமத்தில் வரும் நோய்களை மருத்துவர்களே டாட்டூ போட்டு மறைத்து விடுவர். மருத்துவர்கள் பயன்படுத்தும் டாட்டூவில் சுத்திகரிக்கப்பட்ட சாயமே பயன்படுத்தப்படுவதால் பக்க விளைவுகள் ஏதுமில்லை. அழகுக்கான டாட்டூவில் உள்ள சாயமானது இரும்பு அயனாக்ஸைடை உருக்கியே எடுக்கப்படுகிறது. இந்த சாயமானது சருமப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

டாட்டூ குத்தப் பயன்படுத்தப்படும் ஊசியானது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் வைரஸ், காளான், பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள், சருமத்தில் உள்ள ஆழமான திசுக்களை பாதித்து, டாட்டூவை சுற்றி ‘கிரானுலோமா’ என்னும் பிரச்னையை ஏற்படுத்தி, திசுக்களை சேர்த்து கட்டியாக்கி விடும். காலப்போக்கில் அந்தக் கட்டி புற்றுநோயாகவும் மாறலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து சிறுநீரகங்களையும் பாதிக்கும்.

மெலனின் எனும் அணுக்கள்தான் நம் சருமத்தின் நிறத்தை நிர்ணயிக்கிறது. இதில் ஃபியோமெலனின் மற்றும் யூமெலனின் என இரண்டு வகை உண்டு. ஃபியோ மெலனின் கூடுதலாக இருந்தால் நம் சருமம் வெள்ளையாகவும், யூமெலனின் கூடுதலாக இருந்தால் கருப்பு நிறமாகவும் அமைகிறது. டாட்டூ குத்துவதன் மூலம் இந்த மெலனின் நிறமிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சூரிய ஒளிக்கதிர்கள் நம் உடலில் முழுமையாக ஊடுருவ முடியாமல் வைட்டமின் டி குறைபாடு, ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

அடர்த்தியான கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் டாட்டூ குத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அடர்த்தியான சாயங்கள் தோலின் ஆழமான திசுக்களில் ஊடுருவிச் சென்று ரத்த நாளங்களில் கலந்து சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றில் தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடும்’’ என்கிற ரத்தினவேல், டாட்டூ குத்துவதில் மறைந்துள்ள மனநல பிரச்னைகளைப் பற்றியும் பேசுகிறார்.

‘‘ரோஜாப்பூ மாதிரியான டாட்டூ குத்துபவர்கள் மென்மையான மனம் உடையவர்களாக இருக்கிறார்கள். பாம்பு, பூரான், பல்லி போன்றவற்றை  குத்திக்கொள்பவர்கள் குற்ற மனம் உடையவர்களாக இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் பச்சை குத்தியிருப்பவர்களை வேலைக்கு எடுப்பதில்லை. உடலோடு சேர்த்து வாழ்வியலையும் பாதிக்கிறது நிரந்தர டாட்டூ. தான் விரும்பும் நபரின் பெயரை டாட்டூ குத்திக் கொள்வதும் அந்த நபர் வெறுக்கும் நபரானதற்கு பிற்பாடு அதை அழிக்க அவதிப்படுவதும் நாம் கேள்விப்பட்ட கதைதான்.

நிரந்தர டாட்டூவை லேசர் சிகிச்சை மூலமும் Dermabrasion சிகிச்சை மூலமும் நீக்கலாம். டாட்டூ குத்த ஆகும் செலவைக் காட்டிலும் அழிப்பதற்கு நூறு மடங்கு செலவு ஆகும். இத்தனை ஆபத்துகளை உள்ளடக்கிய நிரந்தர டாட்டூ தேவைதானா? டாட்டூ குத்த ஆவலாக இருந்தால் தற்காலிக டாட்டூவை குத்தி ஆசைக்கு அழகுப் பார்த்து அழித்துக் கொள்ளலாம். அதுதான் பாதுகாப்பானது’’ என எச்சரித்து முடிக்கிறார். ''மருத்துவர்கள் பயன்படுத்தும் டாட்டூவில் சுத்திகரிக்கப்பட்ட சாயமே பயன் படுத்தப்படுவதால் பக்க விளைவுகள் ஏதுமில்லை. அழகுக்கான டாட்டூவில் உள்ள சாயமானது சருமப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.''

டாட்டூவின் வரலாறு

பச்சை குத்தும் முறை முற்றிலும் எகிப்திய காலத்தில்தான் உருவானது. எகிப்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது மம்மிகளுடன் கிடைத்த சில நுண்ணிய ஊசி போன்ற பொருட்கள், டாட்டூ வரைவதற்கான கருவிகளே என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பெண் ஓவியங்களிலும் டாட்டூ வரையப்பட்டிருந்தன. மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில், பிரசவ வலியைக் குறைப்பதற்காகத்தான் இந்த டாட்டூ வரையும் கலாசாரத்தைப் பின்பற்றினார்களாம்.

மம்மிகளை ஆராய்ந்த போது, தொடை, அடிவயிறு, மார்பகங்களில் அதிக அளவில் டாட்டூகள் வரையப்பட்டிருப்பது தெரியவந்தது. எகிப்தில் ஆண்களும் டாட்டூ கலாசாரத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ஓவியம், சிற்பம் வடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்களின் கலை ரசனைக்கான ஓர் அடையாளமாகவும் திகழ்கிறது டாட்டூ. கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் 1000 ஆண்டுகளுக்கு முன் டாட்டூ வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாட்டூ குத்த ஆகும் செலவைக் காட்டிலும் அழிப்பதற்கு நூறு மடங்கு செலவு ஆகும்!

- விஜய் மகேந்திரன்