டிஸ்லெக்ஸியா
ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் சக மாணவர்களாலும் ‘மக்கு’ என்ற இழிச்சொல்லுக்கு ஆளாக்கப்படுகிறான் ஒரு சிறுவன். ‘அவன் சரியாகப் படிப்பதில்லை... தப்புத் தப்பாக எழுதுகிறான்’ என்பதே இந்த அவமானத்துக்குக் காரணம். உண்மையில், மற்ற மாணவர்களைக் காட்டிலும் எல்லாவற்றிலும் அவனது பார்வை மாறுபட்டதாகவே இருக்கிறது.
ஓவியம் வரைவதில் அவன் கைதேர்ந்த திறமைசாலி. மதிப்பெண்களை வைத்தே ஒருவனை மதிப்பிடும் இச்சமூகமோ அவனை ஒதுக்குகிறது. அவனையும் அவன் ஓவியத் திறமையையும் கண்டுணர்ந்து அவனுக்குள்ளான பிரச்னையை புரிந்து கொண்டு அவனை ஆதரவாக அரவணைத்து வழிநடத்திச் செல்கிறார் ஓர் ஆசிரியர்.
அவனுக்குள் இருக்கும் கலைத்திறனை பள்ளி முழுவதற்கும் பறைசாற்றுகிறார். அப்போது எழும் பலத்த கைதட்டல்கள் அவனுக்கே அவன் மீதான நம்பிக்கை விதையை ஆழமாகப் பதிக்கின்றன. அந்த நம்பிக்கை அவனது வாழ்வின் மாற்றத்துக்கான திறவுகோலாக இருக்கிறது. - இது அமீர்கான் இயக்கத்தில் இந்தியில் வெளிவந்த ‘தாரே ஜமீன்பர்’ படத்தின் கதை. அதில் அந்தச் சிறுவனுக்கு இருக்கும் பிரச்னை ‘டிஸ்லெக்ஸியா’ எனும் கற்றல் திறன் குறைபாடு.
“டிஸ்லெக்ஸியாங்கிறது ஒரு நோயல்ல... எல்லாருக்கும் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும், அது மாதிரிதான் இதுவும். இந்தப் பிரச்னையிருக்கிறவங்களால சரியா படிக்க, எழுத முடியாமல் இருக்கலாம். ஆனா, அவங்க முட்டாள்கள் கிடையாது. அவங்ககற்பனை வளம் நிறைஞ்சவங்களா இருப்பாங்க. அவங்க பிரச்னையை புரிஞ்சுகிட்டு அவங்களை நல்ல படியா வழி நடத்தினா ரொம்ப பெரிய உச்சத்தை தொடுவாங்க’’ என்கிறார் ‘மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேச’னின் ஒருங்கிணைப்பாளர் ஹரிணி மோகன்.
1991ம் ஆண்டிலிருந்து பள்ளிகள்தோறும் டிஸ்க்லெக்ஸியா குறைபாடு குறித்தும், இக்குறைபாடுள்ள மாணவர்களை பெற்றோரும் ஆசிரியர்களும் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அமைப்பு இது.‘‘பெற்றோரிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துறோம். டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ள மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்கணும்னு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துறோம்.
இக்குறைபாடு தீவிரமா இருக்கிற மாணவர்களுக்காக 1995ல, ‘அனன்யா கல்வி மைய’த்தை தொடங்கினோம். இங்க படிக்கிற மாணவர்களை ழிணீtவீஷீஸீணீறீ Institute Of Open Schooling மூலமா தேர்வு எழுத வைக்கிறோம். ஓராண்டு இந்த கல்வி நிலையத்தில் படிக்க வெச்சு போதிய பயிற்சிகளை கொடுத்த பிறகு பொதுவான பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புறோம்’’ என்று அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஹரிணி, டிஸ்லெக்ஸியாவை பற்றி தொடகிறார்.
‘‘உலக அளவில் 10-15 சதவிகித பள்ளி மாணவர்களுக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு இருக்கு. அவங்களும் எல்லா குழந்தைகள் மாதிரிதான் பேசுவாங்க... பழகுவாங்க. கற்றலில் மட்டும்தான் அவங்களுக்குப் பிரச்னையே. நாம ஒரு எழுத்தை எழுத்தா பார்ப்போம். அதை அவங்க உருவமாகப் பார்ப்பாங்க. ஒரு டிஸ்லெக்ஸியா ஸ்டூடன்ட் ‘உ’ங்கிற எழுத்தை அருவாமனையாத்தான் பார்க்குறான். அந்த உருவகத்தோடதான் படிக்கிறான். இவனுக்கு உருவகத்துடனான பாடத்தை புகட்டும்போது சரியாபுரிஞ்சுக்குவான்.
இந்தக் குறைபாட்டுக்கு மருந்து மாத்திரையெல்லாம் கிடையாது. வாழற காலம் முழுக்க இந்தப் பிரச்னை இருந்துட்டேதான் இருக்கும். பள்ளிக் காலத்திலயே இதைக் கண்டறிஞ்சு முறையான வழிகாட்டுதலோட, அவங்களுக்கு ஏத்த வகையில் கற்பிக்கிறதுதான் அவங்க எதிர்காலத்துக்கு நாம செய்யுற கைமாறு.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், வின்ஸ்டன்ட் சர்ச்சில்னு பல மேதாவிகளுக்குக் கூட இந்தப் பிரச்னை இருந்திருக்கு. பொதுவா இந்தக் குறைபாடுள்ளவங்களுக்கு கற்பனை வளம் ரொம்ப அதிகமா இருக்கும். ஓவியம், இசை போன்ற துறைகள்ல பெரிய அளவில சாதிக்க முடியும். பலர் சாதிச்சும் காட்டியிருக்காங்க.
ஆசிரியர்கள் இந்தக் குழந்தைகளுக்குப் பாடம் புரியலைன்னு அடிக்கக் கூடாது. ஏன் புரியலை, எப்படி சொன்னா புரியும்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நடத்தணும். சமூகத்திலும் பெரிய மாற்றம் வேணும். இந்தக் குழந்தைகளை உதாசீனப்படுத்தாம, இவங்களாலயும் ஜெயிக்க முடியும்கிற ஊக்கம் கொடுக்கணும். இப்படியான மாற்றத்தைதான் நாங்க எதிர்நோக்குறோம்” என்றவரிடம் இக்குறைபாடுள்ள குழந்தைகளின் கல்விக்கு அரசு எவ்விதத்தில் உதவுகிறது எனக் கேட்டோம்.
‘‘தேர்வின்போது வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் கொடுக்கிறாங்க. கணக்குத் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி இருக்கு. இவங்களுக்கு மொழிதான் முக்கியப் பிரச்னைங்கிறதால இரண்டாம் மொழியை எழுதாம விடக் கூட அனுமதின்னு சில சலுகைகள் இருக்கு’’ என்றார். ‘அனன்யா கல்வி மைய’த்துக்கு சென்றோம். அதன் சூழலே வேறு விதமாக இருந்தது. பாடத்தை படித்துக் காட்டி, அது குறித்து பாவனைகள் மூலமும் விளக்கிஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர்.
‘‘வழக்கமா எல்லா பள்ளிகளிலும் பாடத்தை காட்சி வழியாகப் புரிய வைத்தல், செவி வழியாகப் புரிய வைத்தல்னு இரண்டு முறையை கையாளுவாங்க. நாங்க இந்த இரண்டு முறையோட சேர்த்து தொடுதல் உணர்வு மூலமும் பாவனைகளாலும் புரிய வைக்கிற முறையில் பயிற்றுவிக்கிறோம். ஒரு பாடத்தை வாய் வழியாவும் சொல்லி, அது குறித்த விளக்கப்படங்களையும் காட்டி, பாவனைகளாலும் செய்து காட்டும்போது அவங்க மனசுக்குள்ள அது ஆழமா பதிஞ்சிடும். இந்தக் குழந்தைகளுக்கு சொன்னா புரியாது.
புரியுற மாதிரி சொல்லணும். நடத்தின பாடத்தை மனதுக்குள் பதிய வைக்கவும் தேவையான நேரத்தில் நினைவுபடுத்தவும் பயிற்சிகள் கொடுக்கிறோம். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு மாதிரி. அதனால எல்லாருக்கும் பொதுவா பாடம் நடத்த முடியாது. அதனாலதான் எங்க கல்வி மையத்துல நான்கு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்ங்கிற கணக்கில் வகுப்பெடுக்கிறோம். இந்தக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுறதுதான் ஆசிரியரோட கடமை’’ என்று விளக்குகிறார் ஆசிரியர் ராதா பாஸ்கர்.
‘‘நான் முன்ன படிச்ச ஸ்கூல்ல எனக்கு மேத்ஸ் வரவே இல்லை. இங்க வந்தபிறகுதான் என்னாலயும் மேத்ஸ் போட முடியும்னே தோணுது’’ என்று பெருமை பொங்கப் பேசுகிறார் 9ம் வகுப்பு படிக்கும் யோகிதா. ‘‘என் பொண்ணுக்கு படிப்பு சுத்தமா வரலை. தப்பு தப்பா எழுதுறான்னு முன்ன இவ படிச்ச பள்ளி நிர்வாகம் எங்களைக் கூப்பிட்டு சொன்னாங்க. எங்கப் பொண்ணு மேல நாங்க கோபப்படலை. இவளுக்கு வராத படிப்பை படிச்சுத்தான் ஆகணும்னு திணிக்காம, அவளுக்கு ஏன் படிப்பு வரலைன்னு யோசிச்சோம்.
அப்ப தான் இவளுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது தெரிஞ்சது. அப்புறம் இந்த கல்வி மையத்துல கொண்டு வந்து சேர்த்தோம். இப்ப ஓரளவுக்கு அவ படிப்புல முன்னேற்றம் தெரியுது. குழந்தைகளோட பிரச்னைகளை புரிஞ்சுக்க பெத்தவங்க முன் வரணும். ஒரு குழந்தை படிக்கலைன்னா அதை அடிச்சு பணிய வைக்குறதை விட, ஏன் படிப்பு வரலை... என்ன பிரச்னைனு யோசிச்சு அதைத் தீர்க்கணும். ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருக்குதுன்னு சொன்னா கோபப்படாம ஏத்துக்கணும். அபோதான் உரிய நிவாரணத்தை அளிக்க முடியும்’’ என்கிறார் யோகிதாவின் தாய் ப்ரியா வெங்கட சுப்ரமணியம்.
டிஸ்லெக்ஸியா மரபணுக்கள் மூலம் வரக்கூடிய பிரச்னையா? மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம். ‘‘டிஸ்லெக்ஸியாங்கிறது கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல். இதற்கு Difficulty with Words and Language என்று பொருள்.மனித மூளையில் சராசரியாக8600 கோடி நியூரான்கள் இருக்கும். ஒவ்வொரு நியூரானுக்கும் இடையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருக்கும். இந்த இணைப்புகளில் ஏற்படக்கூடிய கோளாறுதான் இக்குறைபாட்டுக்கு காரணம்.
இதற்கு சுற்றுப்புற சூழ்நிலைகளின் தாக்கம் காரணமல்ல. இணைப்புகளில் கோளாறு ஏற்படுவதற்கு ஜீன்கள்தான் காரணம். அதற்காக ஒரே பெற்றோரின் 2 குழந்தைகளுக்குமே டிஸ்லெக்ஸியா வர வேண்டும் என்று அவசியம் இல்லை. எல்லா ஜீன்களாலும் இக்குறைபாடு வருவதில்லை. கருப்பையில் கரு உருவாகும்போது ஏற்படும் தாக்கங்கள் கூட இதற்கு காரணமாக அமையும்.
கற்றல் என்பது படித்தல், புரிந்துகொள்ளல், பதிய வைத்தல், அதை வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்தல் செயல்பாடுதான். இக்குறைபாடுள்ளவர்களுக்கு, இதில் ஏதாவது ஒன்றில் பிரச்னை இருக்கும். கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் பறந்து வருவது போலக்கூடத் தோன்றும்.
அது அவர்களின் இயல்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் குழந்தையும் வேண்டுமென்றே படிக்காமல் இருக் காது. அதற்கு ஏதாவது பிரச்னை இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கு பக்க பலமாக இருப்பது தான் இக்குறைபாட்டை நீக்க ஒரே வழி’’ என்கிறார் டாக்டர் ஜெயந்தினி.
‘‘உலக அளவில் 10-15 சதவிகித பள்ளி மாணவர்களுக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளது.’’
டிஸ்லெக்ஸியா தந்த வேலை!டிஸ்லெக்ஸியா பிரச்னையால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு வேலை கொடுத்துள்ளது பிரிட்டனின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (ஜிசிஹெச்க்யூ). படிக்கவும் எழுதவும் சிரமப்படுகிற அல்லது வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள இக்குழந்தைகளுக்கே உரிய சிறப்புத் தன்மையே வேலை கொடுக்கக் காரணம். இவர்களுக்கு ரகசிய தகவல்களை பரிமாறும் அபரிமிதமான திறன் இருப்பதாகக் கூறுகிறது இந்த அமைப்பு. இதற்காக ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று, டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து வேலை அளிக்கிறது.
கி.ச.திலீபன்
படங்கள்: ஆர்.கோபால், தமிழ்வாணன்