டியர் டாக்டர்



யார் யாருக்கு என்ன பேஸ்ட் வாங்க வேண்டுமென எனது குடும்ப (குங்குமம்) டாக்டர் சொன்னது பெரிய பலனாக இருந்தது. எனது பேரன், பேத்திகளை தூங்க வைக்க வேண்டு மெனில் காதை குடைய வேண்டும்... அப்போதுதான் தூங்குவார்கள்... இது எத்தனை தப்பு என ‘டாக்டர்’ சொன்ன பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

உணவு சாப்பிட்டபின், பழம் தின்னுருக்கேன், தூங்கியிருக்கேன், நடந்திருக்கேன், குளித்திருக்கேன்... ‘டாக்டர்’ சொன்ன பிறகுதான் இது தவறு என புரிந்துகொண்டேன். நன்றி டாக்டர்!- எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம்.

‘உங்க டூத்பேஸ்ட்டில் விஷமிருக்கா?’ என்று விழிப்புணர்வூட்டி, காலை கண் விழித்ததுமே ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள உஷார்படுத்தி விட்டீர்கள்! மனநலப் பிரச்னைகளை அரிச்சுவடி பாடம்போல கற்றுத் தருகிறது மருத்துவ தொடர். முடி உதிர்தல் இன்றைய தலையாய பிரச்னையானதால், அமேசான் காடுகளில் கண்டெடுத்த மூலிகைகளை வாங்கி,
பண விரயம் பண்ணாமல் சுயமாகவே கூந்தலை பராமரிக்க தொடர் உதவுகிறது.
- அ.யாழினி பர்வதம், கே.கே. நகர் கிழக்கு, சென்னை-78.

டாக்டரின் கிறுக்கல் கையெழுத்து - பல டாக்டர்கள் படிக்க வேண்டிய ஒன்று. எப்போவோ படித்த ஜோக் நினைவுக்கு வந்தது. ஒரு பெரியவர் யாரோ எழுதிக்கொடுத்த விலாசச் சீட்டை எடுத்துக்கொண்டு ஓர் ஊருக்கு சென்றார்.

அங்குள்ள கடைக்காரரிடம் காண்பித்து, ‘இந்தச் சீட்டில் என்ன எழுதியிருக்கிறது என்று படித்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டார். கடைக்காரரும், ‘கையெழுத்து டாக்டர் கிறுக்கின மாதிரி உள்ளது. அதோ... அந்த ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் இருப்பார். அவரிடம் கொடுங்கள்...  படித்துச் சொல்லுவார்’ என்றார். கம்பவுண்டரிடம் காண்பித்ததும், ‘பாட்டில் கொண்டு
வந்திருக்கிறீர்களா?’ என்றாராம்!    - எஸ்.சுப்ரமணியம், சேலம்.

குங்குமம் டாக்டர் ‘முதல் இதழ்’ முதல் பத்திரப்படுத்தி விட்டோம். புதிய விஷயங்களும் தகவல்களும் முதலுதவிப் பெட்டி போலவே உதவுகிறது. ‘பெண்கள் பரிசோதனைக்கு முன்’ கட்டுரை அனைவரும் அறிந்துகொள்ளச் செய்யும் செய்தி.
- வசந்தா மாரிமுத்து, சென்னை-64.

‘பாம்பே ஷீ குரூப்’ தலைப்பும் புதுசு... குரூப் விஷயமும் புதுசு. அட்டாக் தரும் ‘ஹா(ர்)ட்’ டாப்பிக்கே இந்த இதழின் முதுகெலும்பு. மருத்துவர் கு.கணேசனுக்கு நன்றி.
- சுகந்தி நாராயண், சென்னை-39.

டாக்டர் இதழ் மிகச் சிறப்பான வரப்பிரசாதம். பதினைந்தே ரூபாயில் மருத்துவ உலகத்தை தமிழில் எடுத்துப் பிரசுரித்த குங்குமம் குடும்பத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
- என். சிவசங்கரன், சென்னை-53.