முதுமையில் ஏற்படும் முடக்குவலி



வலியை வெல்வோம்

அதிகாலை நேரம் நண்பர்கள் மூவரும் நடைபயிற்சிக்காக பீச்சிற்கு  வந்து சேர்ந்தனர். நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து இறங்கிய 58 வயது லட்சுமி அம்மாவுக்கு விமானத்தில் நான்கு மணி நேரம் காலை மடக்கி உட்கார்ந்திருந்ததால், இப்போது நடக்க ஆரம்பித்ததும் இடது கால் மட்டும் வீங்கி, சூடாகி, தொட்டதும் வலித்தது. 50 மீட்டர் நடந்ததும் அப்படியே  நின்றார்.“என்னால இனிமே நடக்க முடியல… 
கால் பலூன் மாதிரி ஆயிடுச்சு…”அப்பவும் என் பொண்ணு காலில் போட்டுக்க ஸ்டாக்கிங்ஸ் கொடுத்தாள். நான்தான் அது காலை இறுக்கி பிடிக்கும்னு அங்கயே விட்டுட்டு வந்துட்டேன்.  ஃப்ளைட்ட விட்டு இறங்கி வரதுக்குள்ளயே காலு புசுபுசுன்னு வீங்கிருச்சு…சுகர், பிபி எதுவும் இல்லை ஆனாலும் கால்வலி  படுத்தி எடுக்குது.

எனக்கு வந்ததலாயோ  என்னவோ என்னை கூப்பிட வந்த பாவத்துக்கு அவருக்கும் ஒட்டிகிச்சு. எனக்காக அங்கேயே அரைமணி நேரம் நின்னுட்டே காத்துட்டு இருந்தவர். வந்து என் சூட்கேஸை வாங்கி 200 மீட்டர்கூட நடந்திருக்க மாட்டார் அவருக்கும் கால் வலி வந்திருச்சு.“40 வருஷமா நின்னுட்டே வேலை பார்த்தேன். 
அப்போக்கூட எதுவும் வந்தது இல்லை. 62 வயசாயிருச்சுல  அதான் இப்போ அரை மணி நேரம்கூட நிற்க முடியறது இல்லை. காலெல்லாம் அப்படியே கனமா ஆகிடுது. “என  மனைவி கூறியதை ஆமோதித்தார் ராமன்.

இது என்ன,  போன மாசம் பக்கத்தில்  இருக்கிற கோவிலுக்கு தினமும் போற மாதிரி போயிட்டு இருந்தேன் ஒரு  300 மீட்டர் கூட தாண்டல அதுக்குள்ள காலெல்லாம் ஒரே எரிச்சல் , வலி சரின்னு அப்படியே கொஞ்சம் நின்னுட்டேன், வலி சரியாச்சு அப்புறம் திரும்ப நடந்தேன்.

வீட்டுக்கு போனால் வலி இல்லைன்னு அப்படியே விட்டுட்டேன் போன வாரம் 100 மீட்டர் தான் நடந்து இருப்பேன். அதே வலி எரிச்சல், திரும்பவும் வந்தது, நேத்து வீட்டிலிருந்து ஒரு 80 மீட்டர் கூட நடக்கல  கால் எரிச்சல் நடக்க முடியல மூச்சு வாங்குதுன்னு அப்படியே சுவற்றுல சாஞ்சு நின்னுட்டேன்.நாம் ரிட்டையர்ட் ஆன மாதிரி நம்ம காலும் ஓய்வு கேட்குதுன்னு இருந்தேன்   என் பையன்தான்  விடாப்பிடியாக டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனான்.

அங்கே போய் எல்லா டெஸ்ட்டும் செய்தாங்க. அப்புறம்  டாப்ளர் ஸ்டடின்னு ஒன்று செய்தாங்க. அதுலதான் எனக்கு இருக்கிற பிரச்சினை  தெரிஞ்சது,நீங்களும் அங்கேயே போயி பாருங்களேன் எனப் பரிந்துரைத்தார் 65 வயது ரிட்டையர் பேங்க் மேனேஜர்  கோபால்சாமி.

வாக்கிங் தொடங்கியதுமே மேற்கொண்டு நடக்க முடியாமல் லட்சுமி அம்மாவிற்கு கால் வலித்ததால் உடனே வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமாகினர்.
சில சமயங்களில்   ‘கால் வலி’ தானே  வயசானா வரத்தானே செய்யும். இதுல என்ன பெரிய அதிசயம் என்று தோன்றும். காலில் வரும் வலி என்பது வெறும் “வயதான காலத்தின் அடையாளம்” அல்ல. சில சமயங்களில் அது  ஏதோ ஒரு சமிக்ஞையை நமக்கு தருகிறது.  

கற்பனை செய்து பாருங்கள்:
நீங்கள் நடக்க நடக்க இடது காலில் திடீரென ஒரு கனமான பாரம் கட்டப்பட்டது போல உணர்கிறீர்கள்.சற்று நின்றால் வலி கொஞ்சம் குறைகிறது; மீண்டும் நடக்க ஆரம்பித்ததும் கத்தி குத்துவது போல வேதனை திரும்ப வருகிறது.சிலருக்கு இரவில் தூங்கும் போது கால் தசையில் பிடிப்பு வந்து தூக்கத்தைப் பறிக்கிறது.

வேலை முடிந்து வீடு திரும்பும் போது கால்கள் இரும்பாய் மாறி, “இனிமேல் நடக்க முடியாது” என்று அலறுகின்றன.இவை எதுவும் நீங்கள் நினைப்பது போல சாதாரண சோர்வு அல்ல. முதலில் காலின் ரத்த ஓட்டத்தை பற்றி  தெரிந்து கொள்வோம். இதயம் ஒரு பம்ப் போல வேலை செய்து ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை தமனிகள்(arteries )வழியாக கால்களுக்கு அனுப்புகிறது. 

அங்கு தசைகளுக்கு ஆக்சிஜனை வழங்கிய பின் அசுத்த  ரத்தத்தை  சிரைகள்(veins)  வழியாக மீண்டும் இதயத்திற்குத் திரும்புகிறது. இந்த சிரைகளில்  சிறு கதவுகள் போன்ற அமைப்பு இருக்கும் இதை வால்வுகள் என்போம் . இந்த வால்வுகள் தான் ரத்தத்தை ஒரே திசையில் மட்டுமே செல்ல உதவி , கீழே திரும்பி வராமல் தடுக்கும். 

நடக்கும் போது கால் தசைகள் சுருங்கி விரிவடைவதால் ரத்தச் சிரைகளை  அழுத்தி ரத்தத்தை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே தள்ளும். இதுதான் “muscle pump” என்று சொல்லப்படும் இயற்கையான வழிமுறை.இதில் முக்கிய பங்கு வகிப்பது அதாவது இரண்டாவது இதயம் என்று சொல்லக் கூடிய நமது ‘calf muscle’ தான்.

நீண்ட நேரம் இந்தச் செயல்பாடு நடை பெறாமல் இருந்தால் மேலே சென்று சுத்திகரிக்கப்பட வேண்டிய ரத்தம் காலிலேயே தேங்கும்.சில நேரங்களில் அடைப்பை உருவாக்கும்.ஒரு வேளை அந்த ரத்த வால்வுகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மேல் நோக்கி செல்லும் ரத்தம் தடைபட்டு சிறு சிறு ரத்த நாளங்களில் ரத்தம் தேங்கி நின்று அந்த குழாய்களில் வீக்கம் ஏற்படும். ஏற்கெனவே ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து இருந்தாலும் ரத்த ஓட்டம் தடைபடும்.

மேலே குறிப்பிட்ட மூன்று விதமான செயல்களில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டால்  காலில் வலி உண்டாகிறது.  ஆனால் அறிகுறிகள் ஒன்றுக்கொன்று  மாறுபடுகின்றன நடக்கும் போது பிடிப்பு வருவது, ஒரு கால் திடீரென வீங்குவது, நரம்புகள் திருகி நீலமாக வெளியே தெரிவது இந்த மூன்றும் வெவ்வேறு காரணங்களால் வரும் பிரச்சினைகள். 

இவற்றை முறையே, 

1.கிளாடிகேஷன்(intermittent  claudication)

2.டீப் வெயின் த்ராம்போஸிஸ் (DVT), 3.வெரிகோஸ் வெயின் (varicose vein) என்று அழைக்கிறோம்.

இனி இந்த மூன்று கால் பிரச்சினைகளைப் பற்றி தனித்தனியே அறிந்து கொள்ளலாம்.

1.க்ளாடிகேஷன் (intermittent claudication):

காலுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் தமனிகள் (arteries) புகைப்பழக்கம், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால்  போன்றவற்றால் குறுகி விடும். நடக்கும் போது தசைக்கு போதிய ரத்தமும் ஆக்ஸிஜனும் கிடைக்காமல் கடுமையான பிடிப்பு, எரிச்சல், மற்றும் வலி வரும்.100-300 மீட்டர் நடந்ததும் நிற்க வேண்டியிருக்கும். சற்று ஓய்வெடுத்தால் வலி குறைந்து மீண்டும் நடக்க முடியும். இதனாலேயே இதை “window shopper’s disease” என்று கூறுவர்.

ஐரோப்பியன் இதய கூட்டுறவுச்சங்கம் மற்றும் அமெரிக்க இதயக் கூட்டமைப்பின் (European Society of Cardiology 2017 & American Heart Association) கூற்றின்படி,  இதற்கு முதல் சிகிச்சை - நடைப் பயிற்சி மட்டுமே. மருந்து, ஸ்டென்ட் எல்லாம் அதற்குப் பிறகுதான்.இன்னும் சில ஆய்வுகள் வாரம் 3-5 நாள், மருத்துவர்/பிசியோதெரபிஸ்ட் முன்னிலையில் வலி வரும் வரை நடந்து, ஓய்வெடுத்து, மறுபடி நடந்தால் ,  6 மாதத்தில் நடக்கும் தூரம் 2-3 மடங்கு அதிகரிக்கும் என்று கூறுகின்றன.

உதாரணம்: முன்பு 150 மீட்டர்தான் நடக்க முடிந்தால் , 6 மாதத்தில் 400-500 மீட்டர் எளிதாக நடக்க முடியும்க்ளாடிகேஷன் மற்றும் சாதாரண தசைப்பிடிப்பும் ஒரே மாதிரி தோன்றலாம் ஆனால் வித்தியாசம் உள்ளது. சாதாரண தசைப்பிடிப்பு எந்நேரமும் வரும், குறிப்பாக இரவில் படுத்திருக்கும் போதும் கூட வலி இருக்கும்  காலை நீட்டினாலோ மசாஜ் செய்தாலோ கொஞ்ச நேரத்தில் குறைந்துவிடும்.

ஆனால் க்ளாடிகேஷன் நடக்கும் போது மட்டுமே வரும். ஒவ்வொரு முறையும் ஏறத்தாழ ஒரே தூரத்தில் (உதாரணமாக 150-200 மீட்டர்) வலி தொடங்கும். நின்றதும் 1-3 நிமிடத்தில் வலி பெரும்பாலும் முழுதாக போய்விடும். நீட்டினாலோ மசாஜ் செய்தாலோ உடனே குறையாது  ஓய்விற்காக நிற்பது மட்டுமே தீர்வு. மீண்டும் நடக்க ஆரம்பித்தால் அதே தூரத்தில் திரும்பவும் வலி வரும்.

2. ஆழ் சிரை ரத்த உறைவு (Deep Vein Thrombosis):

DVT என்பது உடலின்  ஆழமான இரத்தக்குழாயில் உள்ள பிரச்சினை. காலின் ஆழ்சிரையில் ரத்தம் உறைந்து அடைத்துக் கொள்ளும். நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், விமானப் பயணம், அறுவை சிகிச்சைக்குப் பின், கர்ப்பம், சில மாத்திரைகளை  தொடர்ந்து உபயோகிப்பது  போன்றவை இதற்குக் காரணமாகலாம். 

ஒரு கால் மட்டும் திடீரென வீங்கும், சிவந்து சூடாக இருக்கும், கால்ஃப் தசையை (calf muscle ) தொட்டால் வலிக்கும். இது சிறிது ஆபத்தானது. 30-50% நோயாளிகளுக்கு Post-Thrombotic Syndrome (PTS) வரும் அபாயம் உள்ளது. அதாவது அந்த உறைந்த ரத்தம் தனியே பிய்த்துக் கொண்டு நுரையீரலுக்குச் சென்றால் pulmonary embolism வரும் ஆபத்து உள்ளது.

உடனடி சிகிச்சை

ரத்தத்தை உறைய விடாமல் தடுக்கும் ஊசி/மாத்திரை (ஆன்டிகோகுலண்ட்) அதற்கு அடுத்ததாக தான் கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் (30-40 mmHg அழுத்தம் ) போன்றவை பரிந்துரைக்கப்படும் ஸ்டாக்கிங்ஸ் அணிந்தால் நீண்டகால வலி, வீக்கம், புண் (Post-Thrombotic Syndrome) 50-60% குறைகிறது.  

எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி நடைபயிற்சியை  தொடங்கலாம் அல்லது முதலில் படுத்துக்கொண்டே ரத்த ஓட்டத்திற்கான கால் பயிற்சியை செய்து விட்டு நடக்கத் தொடங்கலாம்.

3.வெரிகோஸ் வெயின் (Varicose vein):

வெரிகோஸ் வெயின் என்பது இரத்த சிரைகளின்  (veins) வால்வுகள் பழுதடைவதால் வருவது. ரத்தம் கீழே தேங்கி நரம்பு விரிந்து திருகி நீல நிறத்தில் தோலுக்கு அடியில் தெரியும். நீண்ட நேரம் நிற்பவர்கள், உடல் எடை அதிகமுள்ளவர்கள், கர்ப்பிணிகள், மரபு காரணமாகவும் வரலாம். காலில் கனம், அரிப்பு, இரவில் பிடிப்பு, போன்ற அறிகுறிகள் இருக்கும். 

முதல் சிகிச்சை எப்போதும் கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் அல்லது பேண்டேஜ்  (20-30 mmHg அழுத்தத்துடன்) அணிவது  அத்துடன் கால் தசை பயிற்சி  (Ankle pump excercise). சாதாரண வெரிகோஸ் வெயினுக்கு 80-90% பேருக்கு கம்ப்ரசன் ஸ்டாக்கிங்ஸ் அல்லது பேண்டேஜ்  கால் தசை பயிற்சி போதும். 

புண் அல்லது  இரத்த நுண் குழாய்கள் பெரிதாக வீங்கி இருந்தால் மட்டுமே லேசர்/அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். நாம் அறிந்து கொண்டதின்படி மேலே கூறிய மூன்று நபர்களுக்கு வலி ஒன்றுதான். ஆனால், காரணம் மூன்று விதம்!.லட்சுமி அம்மாவுக்கு நீண்ட நேர பயணத்தால் ஆழ் சிரையில் இரத்த உறைவு (DVT) . ராமன் ஐயாவுக்கு  நாற்பது வருடம் நின்றதால் பழுதான வால்வு 

(Varicose Veins)  

கோபால்சாமி ஐயாவிற்கு நடக்கும் போது மட்டும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Claudication).வயதானவர்களுக்கு மட்டுமே வருமா ?! என்றால் நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கும். ஆனால் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இரத்தம் உறையும் தன்மை , இரத்தக்குழாய்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

இயன்முறை மருத்துவர்
ந.கிருஷ்ணவேணி