குளிர்காலமும் முதுமையும்!



ஹெல்த்+வெல்னெஸ் கைடு!

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருமே பலவித உடல் நலக் குறைவுகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக, குளிர்காலத்தில், முதுமையடைந்தவர்களுக்கு உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவதால், அவர்களுக்கு உடல்ரீதியான பல சிக்கல்கள் ஏற்படுகிறது.  அதிலிருந்து முதியவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் நலமுடன் வாழவும் வழிவகைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்.

முதியவர்களுக்கு கோடையும் சரி... குளிர் காலமும் சரி பல தொல்லைகளைத் தரக்கூடியவையே. கோடைக்காலத்தில் குளிர்காலமே மேல் என்று நினைப்பார்கள்.  குளிர் காலத்தில் கோடையே மேல் என்று நினைப்பார்கள். இது அக்கறைக்கு இக்கறை பச்சை என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்த பருவ நிலை மாற்றத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், அதற்கேற்றாற்போல நாம் சில வாழ்க்கை வழிமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டாலே எல்லா பருவத்தையும் இனிய பருவமாக அனுபவிக்க முடியும் பொதுவாக பார்த்தால் கோடையைவிட குளிர்காலத்தில் தான் முதியவர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள்.  
இதற்கு, குளிர்ந்த வறண்ட காற்று வீசுவதால், குளிர்காலத்தில் தோல் எளிதில் வறண்டு விடும். வறண்ட சருமம் ஈரப்பதத்தை இழக்கச் செய்து தோலில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, தோல் வெடிப்புக்குக் காரணமாகிறது.

எனவே, முதியவர்கள், தோல் வறட்சியாகாமல் ஈர்ப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, ஈரப்பதத்தை தக்க வைக்கும் மென்மையான சோப்பு, ஜெல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.அடுத்தபடியாக குளிர்காலத்தில் தாகப் பிரச்னை அதிகம் இருக்கும்.   

தாகம் ஏற்படாததால், தண்ணீர் குடிப்பதை குறைத்துவிடுவார்கள்.  இதுவும், தோல் வறட்சிக்கு ஒரு காரணமாகலாம். மேலும், உடலில் தண்ணீர் குறைவதால், ரத்த அழுத்தம் குறையும், உடல் சோர்வும் ஏற்படும்.  சிறுநீர் அடிக்கடி கழித்தால் அரிப்பு அதிகரிக்கும்.  இவையெல்லாம் உடலில் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால், தாகம் எடுக்கவில்லை என்றாலும், அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

அதுவும் நன்கு காய்ச்சிய வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும். பொதுவாக முதியவர்கள் எப்போதுமே வெந்நீரைத்தான் குடிக்க வேண்டும். குளிர்காலத்தில், சற்று 
வெதுவெதுப்புடன் குடிக்க வேண்டும்.உணவு பொருத்தவரை, வெளி உணவுகளை தவிர்த்துவிட்டு, வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.  

வெளி உணவுகள், தண்ணீர் அதிகம் எடுத்துக் கொண்டால், சீதபேதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.  அதனால் முடிந்தளவு வரை வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோன்று வெளியே செல்லும்போது வெந்நீரை கையில்   எடுத்துச் செல்லவதைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், உணவு வகையில், காய்கறிகளில் வெங்காயம் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அவை இரண்டும் மற்ற காய்கறிகளைவிட குளிர்காலத்தில் அதிக நன்மை செய்யக் கூடியவை ஆகும். இவை ஆய்வுகளில்  அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பழங்களில் மாதுளை மற்றும் கொய்யாப் பழங்கள் குளிர்காலத்தில் அதிக நன்மை செய்யும்.அதுபோன்று கொட்டை வகைகள் நட்ஸ் வகைகள் போன்றவை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதுபோன்று மாலை நேரத்தில் தக்காளி சூப், வெஜ் சூப், மஷ்ரூம் சூப் என ஏதாவது ஒருவகையான சூப் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.அதுபோன்று வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது, மலச்சிக்கல் உண்டாகும். போண்டா, பஜ்ஜி, ஐஸ்க்ரீம் கேக் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

 பொதுவாகவே, முதுமைப் பருவத்தில் உணவு முறையும், தண்ணீரையும் சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மலச்சிக்கல் உருவாகும்.  அதனால், தண்ணீர் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று குளிர்காலத்தில், முதியவர்கள், ஸ்வட்டர், குளிர் தாங்கக் கூடிய  கனமான  ஆடைகளை  அணிந்து கொள்ள வேண்டும்.குளிர்காலத்தில், இன்ஃப்ளுயன்ஸா தொற்றுகள் அதிகமாக இருக்கும்.  

அதனால், முதியவர்களில் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கட்டாயமாக இன்ஃப்ளுயன்ஸா தடுப்பூசியை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதுபோன்று நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் நிமோனியா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.  தற்போது, வைரஸ் கிருமிகளின் தொற்று ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை இந்த தடுப்பூசிகளை அனைவருமே போட்டுக் கொள்ளலாம்.  இது பொதுவாக அவரவர் பகுதிகளில் இருக்கும் மருத்துவர்களிடமே போட்டுக் கொள்ளலாம்.

அடுத்தது, குளிர்காலத்தில் முதியவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை, மூட்டுவலி, ஏனென்றால், குளிர்காலத்தில் மூட்டுகள் இறுகி டைட் ஆகிவிடும். அதனால், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  வெளியில் குளிர்காற்று வீசுவதால், வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

அதுபோன்று, சிலருக்கு, உதறுவாதம், வலிப்பு நோய் போன்றவைகள் இருக்கும். அவர்கள், இந்த குளிர்காலம் முடியும் வரை பிசியோதெரபி பயிற்சிகள் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.  பயிற்சிகள் எதுவும் எடுக்காமல் இருந்தால், மீண்டும் பழைய பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கூட்ட நெரிசல்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.  வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சர்க்கரை நோயாளிகள், இந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால், ரத்த ஓட்டம் குறைவதால், ரத்த உறைதல், கால்கள் மரத்துப் போதல், கால்களில் குத்தல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.  அதனால், இவர்கள், தினசரி உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும்.  மேலும், சர்க்கரைக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 அதுபோன்று தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும்  குளிர்காலத்தில்  அதிக பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளிர் அதிகரிப்தால்  தைராய்டு மிகவும் குறைவாக சுரக்கும்.  

இதனால், அவர்களால் குளிர் தாங்க முடியாமல் போய்விடும்.  அவர்கள் ரெகுலராக எடுத்துக் கொள்ளும் மாத்திரையை  கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிரான காலநிலை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால், இதய நோய் உள்ளவர்கள் குறிப்பாக பாதிக்கப்படுவார்கள்.  

பொதுவாக, ஏதாவது ஒரு நோய்க்காக மாத்திரை எடுத்து கொள்பவர்கள் அதனை எந்த காரணத்தை முன்னிட்டும் நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால், பிரச்னைகள் குளிர்காலத்தில்  அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.வலிப்பு நோய் பிரச்னை உள்ளவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கான மருந்தை எப்போது கையிருப்பாக வைத்திருக்க வேண்டும்.  

குளிர்காலத்தில் பதட்டம் மற்றும் மனச்சோர்வு அதிகமாக இருக்கும். எனவே, குளிர் காலத்தில் முதுமையடைந்தவர்கள் செய்ய வேண்டியவை  ஈரமில்லாத  உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள உதவும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு தேவையான போதுமான அளவு திரவங்களை அருந்துங்கள்.சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.ஏதேனும் சிறியதாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஸ்ரீதேவி குமரேசன்