16 வயதினிலே!
செவ்விது செவ்விது பெண்மை!
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா அது என்னமோ என்னமோ ஹோய்!

தலைப்பைப் படித்தவுடன், இந்த பாடலை மனசுக்குள் பாட ஆரம்பித்த வாசகர்கள் மன்னிக்கவும். இது காதல் கதை அல்ல. இது ஒரு தொடர் கட்டுரை. பெண்களின் உடல்நலம், மனநலம் மற்றும் சமூகநலம் குறித்து எழுதப்படும் கட்டுரை. பிறப்பில் இருந்து ஆரம்பித்து, இப்பொழுது பதினாறு முதல் இருபது வயது வரை உள்ள பெண்களின் உடல் நலம் குறித்த கட்டுரை தான் இது. பேரிளம்பருவத்தில் இருந்து முழுமையாக வளர்ச்சி அடைந்த ஒரு பெண்ணாக மாறும் பருவம் இது. இதில் உடல் ரீதியாக நிறைய மாற்றங்களை காண முடியும். குறிப்பாக பெண்களின் உடல் வளர்ச்சி இந்த பருவத்தில் முழுமை அடைகிறது. 16 வயதுக்குப் பிறகு, பெண்களின் உடல் வளர்ச்சி மெல்ல மெல்ல நிலையாகி, சில முக்கியமான மாற்றங்கள் நிகழும். இதில் முக்கியமானது எபிபைசியல் ஃப்யூஷன் (Epiphyseal Fusion) ஆகும்.
ஒவ்வொரு எலும்பின் வளர்ச்சி தகட்டுகளும் (growth plates) இணைய ஆரம்பிக்கிறது. பெண்களுக்குப் பொதுவாக 16-18 வயதிற்குள் இந்த ஃப்யூஷன் நடக்கிறது, அதன்பிறகு உயர வளர்ச்சி பெரும்பாலும் முடிவடைகிறது. எஸ்ட்ரஜன் (Estrogen) எனும் ஹார்மோன் அதிகரிப்பதன் விளைவாக எலும்புகளின் வளர்ச்சி தகடுகள் சீக்கிரமாக மூடப்படுகின்றன.
சிலருக்கு 20 வயதுவரை சில குறுகிய அளவில் வளர்ச்சி தொடரலாம், ஆனால் பெரும்பாலானவர்களுக்கு 16-18 வயதுக்குள் உயரம் நிலையாகிவிடும்.எலும்புகளின் இறுதி வலிமை இதே வயதிற்குள் உருவாகுவதால், தோள்பட்டை, இடுப்பு மற்றும் எலும்புக்கூடுகள் மேலும் வலுப்பெறும். சிறப்பு ஊட்டச்சத்து தேவைகள்: இதை உடல் சீராக செய்ய, சில ஊட்டசத்துகள் தேவைப்படுகிறது எலும்பு மற்றும் மொத்த உடல் ஆரோக்கியத்திற்கேற்ப, சில முக்கிய ஊட்டசத்துக்கள் அவசியமாகும்.
கால்சியம் (Calcium): எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. தினசரி 1000-1200 mg கால்சியம் தேவை. பால், தயிர், பன்னீர், கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை ஆகியவற்றில் கிடைக்கும்.
விட்டமின் D (Vitamin D): கால்சியத்தை உடல் உறிஞ்ச உதவும். வெயிலில் 15-30 நிமிடம் நேரம் செலவிடுதல், முட்டை, மீன், கால்சியம் கலந்த பால் போன்ற உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம்.
விட்டமின் K, மெக்னீசியம் (Magnesium) மற்றும் பாஸ்பரஸ் (Phosphorus): எலும்பு வளர்ச்சியை உறுதி செய்யும். பச்சை கீரைகள், பருப்பு வகைகள், திராட்சை, பூசணி, பீன்ஸ் போன்ற உணவுகளில் உள்ளது.
புரோட்டீன் (Protein): தசைகள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படும். தினசரி உடல் எடையை பொறுத்து 40-50g புரதம் தேவை. பருப்பு, முட்டை, மீன், கோழி, தயிர், பீன்ஸ் போன்ற உணவுகளில் அதிகம்.
இரும்புச்சத்து (Iron): பெண்களுக்கு மாதவிடாய் காரணமாக இரும்புசத்து குறைவதற்கான அபாயம் உள்ளது. தினசரி 15-18 mg இரும்பு தேவை. கொத்தமல்லி, முருங்கைக்கீரை, கறுப்பு உளுந்து, ஈரல், காய்ந்த பழங்கள் (தேந்திரு, உலர்ந்த திராட்சை) ஆகியவற்றில் உள்ளது.
ஃபோலிக் ஆசிட் (Folic Acid): செர்க்குலேஷன் மற்றும் செல்லியூலார் வளர்ச்சிக்குத் தேவையானது. கர்ப்பத்திற்குப் பிறகு குழந்தையின் மண்டை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து என்பதால், இப்பருவத்திலேயே போதுமான அளவு எடுத்துக் கொள்ளுதல் நல்லது. கொத்தமல்லி, முருங்கைக்கீரை, அவகோடோ, பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்ற உணவுகளில் உள்ளது.
உணவு முறைகள்: தினசரி மூன்று நேர உணவும், இரண்டு இடைவேளை சிற்றுண்டியும் இருக்க வேண்டும். அதிகம் ரசாயனம் உள்ள ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகம் காபி, டீ, கார்போனேட்டட் டிரிங்க்ஸ் எடுத்துக்கொள்ளக் கூடாது, ஏனெனில் அவை கால்சியம் உறிஞ்சுவதை தடுக்கும்.
அதிகப்படியான ஊட்டச்சத்து குறைவான டயட்டுகளை (crash diet) தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை வளர்ச்சியை பாதிக்கும். தினசரி குறைந்தது 8-10 டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.
HPV தடுப்பூசி (HPV Vaccine)
எச்.பி.வி (Human Papillomavirus) என்பது சிறுநீரகம், வாய், கழுத்து மற்றும் சர்விக்ஸ் (கருப்பையின் வாய்ப்பகுதி) புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ். இந்த வைரஸால் சர்வைக்கல் புற்றுநோய் (Cervical Cancer) ஏற்படும் முக்கிய காரணிகளில் ஒன்று. HPV தடுப்பூசி 9-26 வயதுக்குள் பெண்களுக்கு எடுத்துக் கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் கிடைக்கும் HPV தடுப்பூசிகள் - Cervarix, Gardasil, Gardasil-9.
இது 90% வரை சர்வைக்கல் புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்டது. திருமணத்திற்கு முன்பே இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்வது சிறந்தது, ஏனெனில் பாலியல் தொடர்பு ஏற்படும் முன்பே பாதுகாப்பு கிடைக்கும்.
இளமைக்கால திருமணத்தால் ஏற்படும் உடலியல் பிரச்னைகள்
இள வயதில் திருமணம் (18 வயதிற்கு முன்பு) பெண்களின் உடல் மற்றும் மன நலத்துக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சர்விக்கல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும், ஏனெனில் குறைந்த வயதில் பாலியல் உறவு ஏற்படும் போது HPV வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். கர்ப்பப்பை மற்றும் மூட்டு வளர்ச்சி முழுமையாக நிறைவடையாத நிலையில் கர்ப்பம் ஏற்படலாம், இது குறைவான ஹீமோகுளோபின், கால்சியம் குறைவு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மகப்பேறு சிக்கல்கள் அதிகம் - குறைந்த வயதில் குழந்தை பெறும் போது உடல் தகுதி போதுமானதாக இருக்காது, இது குறைந்த உடல் எடை குழந்தைகள் (Low Birth Weight), பிரசவத்தின் போது அதிக சிக்கல்கள், ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகளை உருவாக்கும்.
மாதவிடாய் கோளாறுகள் அதிகமாக இருக்கும், காரணம் ஹார்மோன் சமநிலையின்மை.உடலாலும் மனதாலும் அளவில்லாத அழுத்தமாகும், காரணம் அளவில்லாத குடும்பப் பொறுப்புகள், கல்வியில் குறைவு, பொருளாதார சிக்கல்கள். பாலியல் தொடர்பான நோய்
விழிப்புணர்வு (Sexually Transmitted Infections - STIs)
பாலியல் உணர்ச்சி அதிகமாக இருப்பதால், கல்யாணம் ஆகிறதோ இல்லையோ, பாலியல் தொடர்பான நோய் விழிப்புணர்வு மிக அவசியம் ஆகிறது. இதைப் பற்றி பேசினால் பெண்கள் கெட்டுபோய் விடுவார்கள் என்ற கட்டுகதையெல்லாம் நம்பாமல், இதைப் பற்றிய விழிப்புணர்ச்சி கொடுப்பது மிக மிக அவசியம்.STI-கள் என்பது பாலியல் தொடர்பில் பரவும் தொற்று நோய்கள்.
முக்கியமானவை: HPV, HIV/AIDS, Syphilis, Gonorrhea, Chlamydia, Herpes, Trichomoniasis.
அறிகுறிகள்: அசாதாரண செர்விகல் டிஸ்சார்ஜ் (வெள்ளைப் படுதல் அதிகரித்தல், துர்நாற்றம்) சிறுநீரின் போது எரிச்சல், வலி. இடுப்பு, வயிற்றுப் பகுதியில் வலி, சருமத்தில் புண்கள், குமட்டல், உடல் அசதி, அதிக காய்ச்சல்.தவிர்க்க வேண்டியவை: பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொள்ளக்கூடாது (Condom பயன்படுத்த வேண்டும்). ஒருவர் அதிகமான பாலியல் உறவு கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.
மாதவிடாய் காலத்தில் பாலியல் உறவைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் ரத்தப்போக்கு மூலம் தொற்று பரவும்.மருத்துவ ஆலோசனை மற்றும் சோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும்.
STI-களின் முக்கிய விளைவுகள்
பெண்களில் கருப்பையால் கர்ப்பம் வராமல் போவது. சர்விக்கல் புற்றுநோய் (Cervical Cancer) ஏற்படும் வாய்ப்பு. கர்ப்பத்தில் இருந்தால் குழந்தைக்கு தொற்று பரவும் வாய்ப்பு. உடல்நலம் முழுவதும் பாதிக்கப்பட வாய்ப்பு, குறிப்பாக HIV/AIDS க்கு வழிவகுக்கும் அபாயம்.
உடல் உறவினால் வரக்கூடிய நோய்களை பற்றி பார்த்து விட்டோம், முக்கியமான ஒன்றை விட்டு விடக் கூடாது அல்லவா ?
திருமணத்திற்கு முன்பாகவே
கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு. இதைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். கர்ப்பம் தடுக்கும் முறைகளை கையாள வேண்டும். condom, ஓரல் காண்ட்ராஸ்ப்டிவ் பில்ஸ் போன்றவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தெரியாத நபர்களுடன் பாலியல் உறவு கொள்வதனால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான விளைவுகளைப் பற்றியும் வலியுறுத்த வேண்டும். அப்படி கர்ப்பம் தரித்து விட்டால் அதை தைரியமாக பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டும்.
கர்ப்பம் கலைக்கவோ அல்லது தொடரவோ அவர்கள் ஆதரவு தேவை. கர்ப்பம் கலைக்க வேண்டும் என்று முடிவுஎடுத்துவிட்டால், சட்ட ரீதியாக Medical Termination Of Pregnancy Act பெண்களின் உடல்நலம் மற்றும் தனது உடல் மீதான சுய அதிகாரத்தை உறுதி செய்ய உதவும். இதைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் ஏற்படுத்த வேண்டும்.
16 முதல் 20 வயது வரை, பெண்களின் உடல் வளர்ச்சி ஒரு முக்கியமான கட்டத்திற்குள் செல்கிறது. இந்த காலத்தில் எலும்பு வளர்ச்சி (Epiphyseal Fusion) முடிவடைகிறது, ஹார்மோன்கள் நிலைப்படுத்தப்படுகின்றன, மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக ஆகிறது. உடலின் முழுமையான வளர்ச்சி மற்றும் சுகபோகமான எதிர்கால ஆரோக்கியத்திற்காக சரியான ஊட்டச்சத்து உணவு, உடற்பயிற்சி, மற்றும் மருத்துவ பராமரிப்பு அவசியம்.
தீவிரமான கல்வி, மனநலம், உடல்நலம் அனைத்தும் ஒருங்கிணைந்தபோது, இளம் பெண்கள் தங்களை உறுதியான மனதுடன், ஆரோக்கியமான உடலுடன், மற்றும் உணர்ச்சியளவில் சீராக வளர்த்துக்கொள்ள முடியும். இந்த வயதில் உடல் வளர்ச்சியை முழுமையாக அனுபவிக்க பராமரிப்பு, விழிப்புணர்வு, மற்றும் சரியான வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானவை. இளமையின் ஒளியுடன், ஆரோக்கியமான எதிர்காலம் நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும்!
மனநல மருத்துவர் மா.உஷா நந்தினி
|