சிங்கப் பெண்ணே நலம்தானா?
நோய் நாடி-நோய் முதல் நாடி
நீங்கள் ஏதோ ஒன்றை சொல்ல விரும்பினால், அதைப் பற்றி ஒரு ஆணிடம் கேளுங்கள். நீங்கள் ஏதோ ஒன்றை செய்ய விரும்பினால், அதைப் பற்றி ஒரு பெண்ணிடம் கேளுங்கள் - மார்கரெட் தாட்சர். இந்த வரியைப் படிக்கும் அதே நேரத்தில், மார்ச் மாதமும் என் கண் முன்னே நிற்கிறது. மார்ச் மாதம் என்றாலே தற்போது பெண்களுக்கான மாதமாக உலகளவில் கொண்டாடப்படுகிறது.  சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றுக்கு ஏற்ப இன்று பெண்களின் பங்களிப்பு இல்லாத துறையே இல்லை என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.  நம் தமிழ்நாட்டிலும், பெண்களுக்கான விருதுகள், பெண்களுக்கான சிறப்பு பரிசுகள், பெண்களுக்கான கொண்டாட்டங்கள், அனைத்து வியாபாரம் சார்ந்த இடங்களில் பெண்களுக்கான ஆஃபர்கள், வேலை சார்ந்த இடங்களில் பெண்களுக்கான ஸ்பெஷல் செமினார் என்று விதம் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதிலும் 2025ல் ஐ.நா.சபையில் பெண்களுக்கான தீமாக அனைத்து பெண்களுக்கும் அனைத்து விதமான உரிமைகள் மற்றும் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
உண்மையாகவே, ஆண் சமூகத்தில், ஆணை எதிர்த்து வேலை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் கடந்து, பலபடிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் பெண்களால் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை ஒட்டு மொத்த சமூகமும் உரக்க கூறும் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்படியாக பெண்கள் தங்களுக்கான தேவைகள், ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள், குறிக்கோள்கள் என்று வரிசை கட்டிக்கொண்டு செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்யும் பெண்கள் ஒரு விஷயத்தில் மட்டும் தங்களை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அது போல், பெண்களும் அவர்களின் உடல்நலனில் அக்கறை கொண்டிருந்தால் மட்டுமே இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக சிறந்து செயல்பட முடியும் என்பதை அழுத்தமாக கூறுவேன்.பெண்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தாமல், இருக்க மிக முக்கியமான காரணங்களை முதலில் பார்ப்போம். 1. சரிவிகித சத்தான உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
2. உணவுகளை வீணாக்கப் பயப்படுவது.
3. நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
4. உடற்பயிற்சி மீதான அலட்சியம்.
5. ஹெல்த் செக் அப்.
6.மருத்துவத்திற்குசெலவு செய்ய யோசிப்பது.
இவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்
சரிவிகித சத்தான உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது: உணவு என்பது அனைத்து விதமான உயிர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. நமக்கும், நமக்கு பிடித்தவர்களுக்கும் , பிடித்த மாதிரி சாப்பிடுவதற்காக தான் அத்தனை உழைப்பையும் நாம் ஈடுபாட்டோடு செய்கிறோம்.
மனிதர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட், புரோட்டின் என்று சாப்பிட வேண்டும். ஆண்களை விட பெண்கள் சரிவிகித உணவை உட்கொள்ளவில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது. பெண்களுக்கு 25% கார்போஹைட்ரேட், 25 % புரோட்டின், 10 % கொழுப்பு, 40 % காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டுமென்று கூறுகிறோம்.
நம் பெண்கள் மட்டுமில்லை பெண் குழந்தைகளும் பள்ளி செல்கிற அவசரத்தில் காலை சாப்பாட்டை சாப்பிடாமல் செல்வது என்று ஆரம்பித்து, வேலைக்கு செல்லும் வரை சாப்பாட்டை சரியாக சாப்பிடாமல் ரத்த சோகையால் அவதிப்படுகிறார்கள்.
சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பதால், சோர்வாக இருப்பது, வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, தூக்கம் இல்லாமல் இருப்பது என்று அவர்களின் ஒட்டு மொத்த திறனை, சாப்பிடாமல் இருப்பதால் இழந்து விடும் சூழலில் இருக்கிறார்கள்.
சரிவிகித உணவு உட்கொள்ளும் போது, தற்போது அவர்கள் வெளிப்படுத்தும் திறனில் இன்னும் சில சதவீதங்கள் அதிகமாகவும், முழுமையாகவும் செயல்பட முடியும். ஆனால், உணவின் மீதான அக்கறையின்மையினால், அவர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், மனநலனும் பாதிக்கப்படுகிறது.
இதனால் வீடுகளில், அலுவலகம் சார்ந்த இடங்களில் பெண்களை சரிவர புரிந்து கொள்ள முடியாத சூழலும் ஏற்படுகிறது. அதனால், உங்களை சரிவர புரிந்து கொண்டு மற்றவர்கள் நடந்து கொள்ள, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு சத்தான சாப்பாட்டை சாப்பிட கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உணவுகளை வீணாக்கப் பயப்படுவது:
பெரும்பாலும் நம் வீடுகளில் நாம் பார்த்திருப்போம். அம்மாவோ, மனைவியோ தன்னுடைய மகனுக்கோ அல்லது கணவனுக்கோ பிடித்ததை சமைத்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் ஆண்கள், குழந்தைகள் சாப்பிடாமல் வைத்திருப்பதை, அதாவது மிச்சமாக இருக்கும் உணவுகளை பெண்களுக்கு பசிக்கிறதோ, பசிக்கவில்லையோ பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அதை எடுத்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.
ஏனென்றால், கணவர் கஷ்டப்பட்டு அதாவது வீட்டின் தலைவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி வரும் பொருட்களை வீணாக்க கூடாது என்பதில் தங்களுடைய தீவிர அன்பை மிச்சம் மீதி சாப்பிடுவதன் மூலம் காண்பிப்பார்கள்.
அவர்களுக்கு என்று ஒரு நாள் அல்லது ஒரு நேரம் பிடித்ததை சாப்பிட மனசு வராது. இதனால் அவர்களின் உடல் எடை அதிகரிப்பது, எடை அதிகரிப்பால் ஏற்படும் பக்க விளைவுகள் என்று இன்னும் ஒரு பெரிய சூழலில் போய் சிக்கிக் கொள்வார்கள்.
உணவில் மிச்சம் செய்ய போய், மருந்து மாத்திரைகளுக்கு அதிகம் செலவழிக்கவும், உடலில் ஏற்படும் நோயின் தாக்கத்தில் ஏற்படும் வலியையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில் இருப்பார்கள்.
அதனால், வீட்டில் யார் சம்பாதித்தாலும் அதற்கு மரியாதை கொடுங்கள், தவறில்லை. வீட்டிலுள்ளவர்கள் அவர்களுக்கு என்ன தேவையோ அதை சாப்பிடுவது போல், நீங்களும் உங்களுக்குத் தேவையானதை மட்டும் சாப்பிடப் பழகுங்கள்.நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது: பெரும்பாலும் ஆண்களை விட, பெண்கள் நேரத்திற்கு உணவு சாப்பிடுவதில்லை என்று மருத்துவ ஆய்வில் கூறுகிறார்கள். அவர்கள் கவனம் முழுவதும் வீட்டை நிர்வகிப்பதிலும், அலுவலகம் சார்ந்து இயங்குவதிலும் மும்முரமாக இருப்பதால், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல், தவற விடுகிறார்கள். பெரும்பாலும், காபி, வடை, சமோசா என்று சாப்பிட்டு விட்டு, அதை சாப்பாட்டு கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும், பெண்கள் அவர்களின் உணர்வுகளை உணவின் மீது தான் காண்பிப்பது வழக்கப்படுத்தி இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, விரதமிருப்பது, கோபமோ, வருத்தமோ சாப்பிடாமல் இருப்பது, வேலை செய்து அசதியாக இருப்பதால், சாப்பிடாமல் தூங்குவது என்று அவர்களுக்கான சாப்பாடு என்பது எந்த நேரத்தில் இருக்கும் என்பது அவர்களுக்கே மறந்து போகும் அளவிற்கு தான் இருக்கிறது. சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கும் போது அல்சரும் வந்து விடுகிறது.
பெரும்பாலான பெண்கள், வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்படும் சூழல் இருக்கிறது. உடலை கவனிக்காமல் இருக்கும் எந்தவொரு உயிரும், அவர்களுக்கான கனவை நீண்ட நாட்களுக்கு அனுபவிக்க முடியாது என்பது யதார்த்தமான உண்மை. அதனால் உங்களை நீங்கள் நேசிக்க முதலில் செய்வது, சரியான உணவை, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி மீதான அலட்சியம்: காலையில் எழுந்து வாக்கிங் போகிறவர்களில் பெரும்பாலும் ஆண்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க வாக்கிங் செல்வது என்றில்லாமல், உடலை புத்துணர்ச்சியோடு வைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமாக இருக்கிறது. உடல் புத்துணர்வோடு இருக்கும் போது, மனதும் நிதானமாக இருக்கும். பெரும்பாலும் அதீத சிந்தனைகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு முதலில் பரிந்துரைப்பது உடற்பயிற்சி தான்.
உடல் பதட்டத்திலும், கோபத்திலும் இருக்கும் போது, உடற்பயிற்சி மூலம் உடலை நிதானமாக்க முடியும். மேலும், தங்களைப் பற்றிய சுயநம்பிக்கை அதிகரிப்பதில் உடலைப் ஆரோக்கியமாக பேணுவதில் நாம் உணர முடியும்.
ஒல்லியாக இருக்கிறீர்களா அல்லது குண்டாக இருக்கிறீர்களா என்பது முக்கியமில்லை. ஆரோக்கியமாக, புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா என்பது மிகவும் முக்கியம். அதற்காக, உங்களுக்கான நேரத்தை கொஞ்சம் உடற்பயிற்சியிலும் ஒதுக்க ஆரம்பியுங்கள்.
ஹெல்த் செக் அப்: மருத்துவமனைகளில் நோயாளிக்கு சுகரோ, பிரசரோ செக் செய்யும் போது, கூட வரும் ஆண்கள் தங்களுக்கும் செய்து விடுங்கள் என்று கூறுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால், பெண்கள் அப்படியில்லை. நாற்பது வயது வந்தவுடன் பெரும்பாலும் பெண்கள் ஒரு தடவை ஹெல்த் செக் அப் செய்வது மிகவும் நல்லது.
இன்றைக்கு, அதுவும் நம் தமிழ்நாட்டில் மருத்துவர்களின் உதவியும், சிகிச்சையும் உடனுக்குடன் கிடைக்கிறது. பெண்கள் என்றைக்கும் தங்களுக்கு ஏற்படும் வியாதிகளை முற்றிப் போக வைத்து, கடைசியாக தான் மருத்துவரை பார்க்க வருவார்கள்.
வியாதியைப் பற்றி அறிகுறிகள் முதலில் தெரியவில்லையா அல்லது வலி இல்லையா என்று மருத்துவர்கள் கேட்கும் போது, அதெல்லாம் இருந்தது, ஆனால், வீட்டில் தங்களைத் தவிர வீட்டிலிருப்பவர்களை பார்த்துக் கொள்ள யாருமில்லை, அதனால் எதுக்கு டாக்டரைப் பார்த்து, அவர்களுக்கு கஷ்டம் கொடுக்கணும் என்று இயல்பாக கூறுவார்கள்.
வியாதி முற்றிய பின், மொத்த குடும்பமும் அவர்களை பார்க்கும் அளவிற்கு நோயின் தீவிரம் கூடி விடும். அதனால், சிறிதாக உடலில் தொந்தரவு ஏற்பட்டவுடன், உடனே உங்கள் உடல்நலனைப் பற்றிய ஆரோக்கியத்தில் முழுவதுமாக ஈடுபடுங்கள். மருந்திற்கு செலவு செய்ய யோசிப்பது: பெண்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட வியாதிக்கு இத்தனை நாட்கள் மருந்து எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், ஒருசில நாட்கள் மட்டும் மருந்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, உடல் சரியாகி விட்டது என்று மருந்திற்கு செலவு செய்யாமல் இருப்பார்கள். அதன்பின், தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் சில மாத்திரைகளை எடுக்குமளவிற்கு மருந்துகளுக்கு செலவு செய்ய வேண்டிய சூழலில் இருப்பார்கள்.
மருத்துவர்க்கோ, மருந்துகளுக்கோ செலவு செய்வதை வீணான செயல் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் செலவு செய்வது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். இனியாவது, உங்கள் உடல்நலனுக்கு செய்யப்படும் செலவு என்பது, அத்தியாவசியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெண்களே, நீங்கள் முன்னேறுவதை, நீங்கள் கொண்டாடுவதை பார்க்க ஒட்டு மொத்த சமூகமே ஆசைப்படுகிறது. அதே நேரத்தில், நீங்கள் உங்க உடல்நலன் மீதும் ஈடுபாட்டோடு, அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் நாங்கள் கூறுவதை என்றைக்கும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
|