உணவுமுறைக் கோளாறுகளும் விளைவுகளும்... (Eating disorders)



அகமெனும் அட்சயப் பாத்திரம்

கடந்த மார்ச் 4 ஆம் தேதி உலக உடல் பருமன் (World Obesity day ) நாளாக கொண்டாடப்பட்டது. உடல் ஆரோக்கியம் சார்ந்த விவாதங்களில் உடல் பருமனும், உணவுப் பற்றாக்குறையும் என இரு விளிம்புநிலைத் தன்மைகளைக் காண்கிறோம். அதாவது ஒரு பக்கம் அதிக கலோரியுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு உடல் பருமனாகி, எடையை எப்படிக் குறைப்பது என்று தவித்துக் கொண்டிருப்பவர்கள். இன்னொரு பக்கம் அன்றாடத் தேவையான 1800 கலோரி உணவு கூட கிடைக்காமல் பசியால் வாடிக் கொண்டிருக்கும் மனிதர்கள்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஏமன்,   மலி, சூடான் போன்ற தென் அமெரிக்கா மற்றும்  மேற்காசிய நாடுகள் பசியின் கொடூரப் பிடியில் சிக்கி உலக அளவில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன. மியான்மர், இலங்கை,பாகிஸ்தான் போன்ற  கிழக்காசிய நாடுகளும் பசியால் வாடும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 
2019 ஆம் ஆண்டு 117 நாடுகளில் நடந்த ஆய்வின்படி பசிக்கொடுமையில் இந்தியா 12-வது இடமும், இலங்கை 66-வது இடமும் பெற்றுள்ளன. உலகில் 11 பேரில் ஒருவர் சரிவிகித உணவு இல்லாமல் வாழ்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது. இந்தப் புள்ளி விவரங்களை,வரலாற்றுத் தரவுகளை சிறுவயதிலிருந்தே படித்து வருகிறோம்.

 ஆனாலும், நம் வீடுகளிலும், உணவகங்களிலும், திருமண விழாக்களிலும், இதர கேளிக்கைக் கொண்டாட்டங்களிலும் உணவுப் பொருட்களை வீணாக்குவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.  சமூக, கலாச்சார காரணிகள், வளர்ப்பு சூழல் மற்றும் நாட்டின் பொருளாதாரக் காரணிகளோடு தனிப்பட்ட மன உடல் நலம் சார்ந்தும் ஒவ்வொருவரின் உணவு முறையும் மாறுபடுகிறது. இவ்வாறு நாளுக்குநாள் உணவு மேலாண்மையில் பொறுப்பின்றி அலட்சியம் காட்டும்போக்கு சமூக சீர்கேடு என்று உணரவேண்டும். 

அமெரிக்கன் சைக்கியாடிக் அசோசியேஷன் தொகுப்பு 4 இல் ஒன்று System disorders  பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ள உணவுமுறைக் கோளாறு இன்றைய நவீன உலகில் அவசியம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

உணவு இல்லாமல் வாடிய பழங்காலத்து தேடல் ஜீன்களின் தொடர்ச்சியாக அதிக உணவு உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றே ஆழ்மனது நம்புகிறது. இது மருத்துவ ரீதியாக உண்மை இல்லை என்று அறிய வேண்டும். உணவுமுறைக் கோளாறுகளில் அதிக உணவு எடுத்துக் கொள்வது அல்லது துரித உணவுகளை மட்டுமே கொள்வது BULLIMIA NEROSA எனப்படுகிறது. 

தானியங்கள், காய்கறிகள் பழங்களைத் தவிர்த்து விட்டு தனக்குப் பிடித்த உணவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் பழக்கம் ஆகிவிடும். மேலும் வாந்தி வருகின்ற அளவிற்கு உமிழ்நீர் சுரப்பிகளை அதிக விரிவடைய செய்து விடும் ஆபத்தான பர்சிங் கிரோனிக் புலிமியா எனும் உணவுக் கோளாறும் பரவலாக பேசப்படுகிறது. இதனால் விரைவில் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு பல்வேறு உபாதைகள் ஏற்படும்.

 இதற்கு நேர் எதிராக ANOROXIA NEROVOSA என்ற ஒரு கோளாறு உண்டு. இந்த பாதிப்பு கொண்ட இளம் பெண்கள் பலர் கவலை காரணமாக பசியின்மையோடு இருக்கிறார்கள். உடல் எடை குறைந்து இருப்பது அழகு என்று மிகக் குறைந்த உணவு எடுத்துக் கொள்கிறார்கள் அல்லது பட்டினி கிடக்கிறார்கள். சமச்சீர் உணவின்றி  உடல் சோர்வு மற்றும்  மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்று அறிகிறோம்.ஆனாலும் நடைமுறையில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இப்படியான இளம் பெண்கள் நம் வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Pica eating என்றொரு உணவுக்கோளாறு உண்டு. சாம்பல்,  பெயின்ட், பென்சில் போன்ற உண்ணக்கூடாத பொருட்களை உண்பதே இதன் தன்மை. இது கால்சியம், இரும்புச் சத்து குறைபாடு, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும். அதேபோல் மெனோபாஸ் எனப்படும் 40 வயதையொட்டிய பருவத்தில் பெண்கள் பலரும் ஹார்மோன் சுரப்பிகளின் தொய்வு, மனப்பதட்டம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அதிக உப்பு எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

மேலும், binge eating, burge eating போன்ற உணவுமுறைக் கோளாறுகளும் ஆராயப்பட்டு உலக அளவில் கவனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இக்கோளாறு உள்ளவர்கள் கொறிப்பது போல் மிகக் குறைந்த அளவு எடுத்துக் கொள்கிறார்கள்.பொதுவாக அதிக உணவு எடுத்துக் கொள்ளும் உணவுக் கோளாறில் ஆண்களின் விகிதம் அதிகமாகவும்,  குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளும் விகிதத்தில் பெண்களின் சதவீதம் அதிகமாகவும் இருப்பதை பட்டியல்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர்களுக்கு முறையான தெரபி வழங்க வேண்டியது அவசியமென உணர வேண்டும்.

 அழகாக இருப்பது முக்கியமா ஆரோக்கியமாக இருப்பது முக்கியமா என்றால் ஆரோக்கியமாக இருப்பது இரண்டாம் பட்சமாக இன்று பலரிடத்தில் மாறிவிட்டது. ஒல்லியாக இருப்பதே அழகு என்ற கட்டமைப்பு 90 களுக்குப் பிறகு உருவாகியுள்ளது.  இந்தியப் பெண்கள் சிலர் தொடர்ந்து உலக அழகி போட்டிகளில் வென்றது பெண்களின் அழகு ஆரோக்யம் சார்ந்த அளவு கோல்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்ற கருத்து உலகம் முழுவதும் பேசப்படும் சர்ச்சைக்குரியதாக இன்றும் உள்ளது.

1950 களில் மிகப் பிரபலமாக இருந்த வெளிநாட்டு திரைப்பட நடிகை மர்லின் மன்றோ படங்களை பார்த்தால் அன்றைய காலகட்டத்தில் மிகவும் குண்டாக இருந்த பல பெண்களை விடவும் ஒல்லியான ஒரு பிம்பத்தைக் கொண்டாட வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.

அவரின் தோற்றம் பெண்களின் அழகுக்கு மாதிரியாக இன்றளவும் எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது என்றால் மிகையில்லை. .பெண்ணியம், சமத்துவம், பெண்கள் அறிவால் இயங்குவது என்று பேசினாலும் இன்றளவும் எதிர்ப்பாலினத்தைக் கவரும் வகையில் உடலைக் கட்டமைப்பது என்ற நோக்கத்தோடுதான் பலரும் இயங்குகிறார்கள். 

எப்படியாவது ‘size zero ‘ ஆகிவிட வேண்டுமென்று திரைப்பட நடிகைகளோடு சாதாரணமான பெண்களும் முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இவர்களின் வெகுசிலர் உண்மையான உடல் சார்ந்த விழிப்புணர்வோடு சரியான எடையைப் பேணும் எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

 வறுமையில் அதிகம் வாடிய நாடுகளில் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில்  கொழு கொழு  என்று இருப்பதே பெண்களின் அழகு முன்மாதிரியாக வைத்திருக்கிறார்கள் என்று புள்ளியல் சொல்கிறது. அதேபோல் பொருளாதார முன்னேற்றமடைந்த,  வளர்ச்சி பெற்ற நாடுகளில் மிக ஒல்லியாக இருப்பதே அழகின் அளவுகோலாக இன்று பார்க்கப்படுகிறது. இதில் மனநலம் சார்ந்த சில எதிர்பார்ப்புகளும், உடல் சார்ந்த எதிர்பால் ஈர்ப்புக் காரணிகளும் பெரும் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நம் திரைப்படங்களிலும் 1950 வரையிலான காலகட்டத்தில் பெண்கள் பருமனாகவும் கணிப்பொறியின் ஆதிக்கம் தோன்றிய 90, 2000 காலகட்டத்தில் திரை நாயகிகள் ஒல்லியாக காட்டப்படுவதையும் பார்க்கிறோம். இது சமூகத்தின் மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.நடிகைகள் பலரும் உடல் இளைப்புக்காக சிகிச்சைகள் எடுத்து நோயால் பாதிக்கப்பட்டதையும் அறிகிறோம். 

அழகுக்காக பல்வேறு தோல் சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் மரணம் உலகத்திற்கு அழகு சார்ந்த அதீத ஆர்வத்தைக் கேள்வி கேட்கும் வகையில் விழிப்புணர்வை கொடுத்ததையும் இங்கே நினைவு கூர வேண்டும். எனவே, ஆணோ பெண்ணோ மனச்சோர்வு, பதட்டம், அழகு, ஆரோக்யம் என ஏதோவொரு காரணத்தைக் கூறி அதிக உணவை எடுத்துக்கொள்வது அல்லது குறைவாக எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் பலரும் Obesity எனும் அதிக உடல் எடை பாதிப்பை  எதிர்கொள்கிறார்கள். இவர்கள் சமூகத்தால் கேலிக்கு ஆளாகிறார்கள் என்பது மிகவும் வேதனையானவொன்று. தீர்வை நோக்கி நகராமல் சக மனிதர்களை மனம் வருந்தும்படி பேசுவது body shaming எனும் உணர்வு தாக்குதல் என்று புரிந்து கொள்ள வேண்டும். குண்டானவர்களைப் போல் மிக ஒல்லியாக இருப்பவர்களும் கேலி செய்யப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

திரைத்துறை, மாடலிங் துறையில் மட்டுமே இருந்த உடல் அழகு எதிர்பார்ப்பு இன்று எல்லா துறையிலும் வந்து விட்டது என்றால் மிகையில்லை. First impression என்ற பெயரில் அறிவு மற்றும் திறமை சார்ந்த தகுதிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வெளித்தோற்ற அழகின் தகுதியே முன்னிலைப்படுத்துவது பல இடங்களில் நேர்கிறது. இதுவும் மறைமுகமான உணர்வு தாக்குதல்தான் (Emotional abuse ) என்று உளவியல் எச்சரிக்கிறது.

ஆக இன்று இருக்கிறது. இது தவறு என்று அறிந்தும்கூட பலரும்  தொப்பையாக இருக்கிறாய், சொட்டையாக இருக்கிறாய், கருப்பாக இருக்கிறாய்  என்றெல்லாம் மிக எளிதாக வக்கிரக்கேலி (Sarcastic teasing) செய்கிறார்கள் என்பது ஆலோசனை உளவியலுக்கு ஒரு சவாலாக உள்ளது. இத்தகைய body shaming நடத்தைகள் இன்று நகைச்சுவை,  எதார்த்தம் என்று இயல்பாக்கப்பட்டு (Normalizing ) வருவது மன நலத்திற்கு தீமை செய்வது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 மீண்டும் மீண்டும் ஒருவரை குண்டு அல்லது ஒல்லி என்று கேலி செய்வது மனதளவில் மீண்டு எழுந்திருக்கவே முடியாது எனும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சிலர் தங்களிடம்  இருக்கும் குறைகளை மறைக்க , தாழ்வு மனப்பான்மையை சமாளிக்க அடுத்தவர்களை body shaming செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் என்று மன நலப் பயிற்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். 

அதாவது நீங்கள் எதையும் சொல்லிவிடும்முன் அவர்கள் முந்தி உங்களின் தோற்றத்தை ஏதோவொரு வகையில் பொய்யாகத் தாழ்த்தி (false projection) செய்து விடுகிறார்கள். இது அவர்களுக்கு ஈகோவை கூட்டி ஒரு பெருமித உணர்வைக் கொடுக்கும் என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்டால் நீ எதார்த்தமாக (Sportive)  இல்லை என்று வேறு சொல்வார்கள். இது முற்றிலும் தவறான மனப்போக்கு என்று உணர்வது அவசியம்.

 குண்டு, ஒல்லி, குள்ளம், உயரம்,கருப்பு, சிவப்பு என்று ஏதேனும் ஒரு உடல் தோற்ற காரணியால் உலகம் முழுவதும் சிறிய Body shaming ஆக தொடங்கி இனப்பாகுபாடு (Racissm) எனும் பெரும் சமூக சீர்கேடு உருவெடுத்துள்ளது. 

இது அந்தரங்க உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்களும், உளவியலாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.தொப்பை, வழுக்கை, சிறிய மார்பகங்கள் போன்ற கமெண்ட்டுகள் நகைச்சுவை அல்ல உறவின் நெருக்கத்தைக் குறைக்கும் சீண்டல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 தன்னுடைய எல்லை எது என்று தெரிந்து கொள்ளாமல் இன்னொருவரை கட்டுப்படுத்துவதற்காகவோ, தாழ்த்துவதற்காகவோ உடல் கேலியை தொடர்ந்து சிலர் செய்கிறார்கள். வேறு ஏதோ ஒரு விஷயத்தில் உங்கள் மீது கொண்டுள்ள பொறாமையை வெளிப்படுத்துவதாகவும் அது இருக்கலாம். மேலும் ஒருவர் தான் சிறுவயதில் பெற்ற உடல் சார்ந்த கமெண்ட்களை வளர்ந்த பின் மற்றவருக்கு கொடுக்கிறார் என்று உளவியல் சொல்கிறது.

 இது அவர்களின் மனப்பக்குவம் இன்மையைக் காட்டுகிறது என்று அதையே சவாலாக எடுத்துக் கொள்வது ஆரோக்யமான போக்கு ஆகும். அவர்களுக்கான செயல் வழியில் பதிலடி என்று மட்டும் இல்லாமல் தன்னுடைய உடல் நலனுக்காக உணவு மேலாண்மையில் கட்டுப்பாடுகளை, சரியான வழி முறைகளைக் கொண்டு வர வேண்டும்.அடுத்த கட்டுரையில் உடல் பருமனுக்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்