நகங்களைப் பராமரிக்க எளிய வழிகள்!
நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசிக் கொள்வது பல இளம் பெண்களுக்கு விருப்பமான ஒன்று. அவ்வளவு ஆசையாக வளர்க்கும் நகங்கள் சிலருக்கு அவ்வப்போது உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள்.  அதற்கு ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிப்பதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம். நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள். பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.
அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.
அதுபோன்று நகங்களை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.
ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.
நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் ‘நகச்சுற்று’ போன்ற பிரச்னைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும்.
இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
- தவநிதி
|