கயாடு லோஹர் ஃபிட்னெஸ் !
அசாம் மாநிலம் திஸ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். 2021ல் கன்னடத்தில் வெளியான ‘முகில் பீட்டே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். பிறகு 2022ல் தெலுங்கில் வெளியான ‘அல்லுரி’ என்ற படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  தற்போது இவர், சமீபத்தில் வெளியான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான சில நாட்களிலேயே கயாடு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருக்கிறார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
கயாடு லோஹரின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம். ஒர்க்கவுட்ஸ்: நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்ததால் ஃபிட்னெஸ் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவேன்.
அதுபோன்று மாடலிங் துறையில் நுழைந்ததுமே ஜிம்மிங் போக ஆம்பித்துவிட்டேன். அந்தவகையில் நான் அதிகாலையே எழுந்துவிடுவேன். முதலில் தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது யோகா செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரைமணி நேரம்.
பின்னர், அரை மணி நேரம் நடைப்பயிற்சி. அதன்பிறகு தான் ஜிம் பயிற்சிகள் தொடங்குவேன். வாரத்தின் ஏழு நாட்களும் உடற்பயிற்சிகளை செய்வேன். ஒருவேளை ஜிம் போக முடியவில்லையென்றால் வீட்டிலேயே பயிற்சிகளை மேற்கொள்வேன்.
எனது தினசரி பயிற்சிகள் என்றால், ஸ்டெமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்- அப், புல் - அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். அதுபோன்று நடனப் பயிற்சிகளுக்கும் தினசரி ஒருமணி நேரமாவது ஒதுக்குவேன். இது தவிர ஓய்வு நேரங்களில் டிரக்கிங், டிராவலிங் மிகவும் பிடித்தமானவை.
டயட்: ஃபிட்னெஸின் முக்கிய அம்சமே சரியான டயட் முறைதான். நமது உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தால்தான் உடல் ஸ்ட்ராங்காகவும் பிட்டாகவும் இருக்கும். அந்தவகையில் நான் தினசரி கடைபிடிக்கும் உணவு பழக்கம் என்னவென்றால், காலை எழுந்ததும் 2 டம்ளர் வெதுவெதுப்பான நீரை அருந்திவிடுவேன்.
அதன்பின்னர், ஜிம் பயிற்சிகளை எல்லாம் முடித்துவிட்டு காலை உணவு எடுத்துக் கொள்வேன். அதில், குறைந்த கொழுப்பு உள்ள பால் ஒரு டம்ளர் கட்டாயமாக இருக்கும். பின்னர், சிறிது நேரம் கழித்து ஒரு வெஜ் சாண்ட்விச் மற்றும் ஏதேனும் ஒரு பழ ஜூஸ் எடுத்துக் கொள்வேன். இவைதான் காலை உணவு.
அடுத்தபடியாக, மதிய உணவில் பச்சை காய்கறிகள், சாலட், அரிசி சாதம், ரொட்டி மற்றும் தயிர் எடுத்துக் கொள்வேன். பின்னர், 3 -4 மணி அளவில் மாலை நேர ஸ்நாக்ஸாக, நட்ஸ் அல்லது ட்ரை ஃப்ரூட்ஸ் அதனுடன் காபி அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு எடுத்துக் கொள்வேன்.
பின்னர், இரவு உணவாக காய்கறிகளில் செய்த சப்ஜி மற்றும் சப்பாத்தி இருக்கும். அல்லது பச்சை காய்கறிகளாலான சாலட் எடுத்துக் கொள்வேன். இது தவிர, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் கொஞ்சமாக எடுத்துக் கொள்வேன். பின்னர், கடைசியாக ஒரு டம்ளர் பால் அல்லது ஏதேனும் டெஸர்ட் எடுத்துக் கொள்வேன். இவைதான் நான் தினசரி கடைபிடிக்கும் உணவு பழக்கமாகும்.
பியூட்டி: அடிப்படையில் நான் ஒரு மாடல் என்பதால், அழகு சார்ந்த பொருட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதேசமயம், கெமிக்கல் நிறைந்த பொருட்களை நான் அவ்வளவாக உபயோகப்படுத்த மாட்டேன். முடிந்தளவு இயற்கையான பொருட்களையே உபயோகப்படுத்துவேன்.
அதுபோன்று, எனது சரும பராமரிப்புக்கு 2 முக்கிய விஷயங்களைப் பின்பற்றுகிறேன். அதாவது, சருமத்துக்குத் தேவையான நீரேற்றத்தைக் (Cleanse and Hydrate) கொடுக்க நிறைய தண்ணீர் அருந்துவேன் மற்றும் ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு தொடர்ந்து வேலை தருகிறேன். மற்றபடி அழகு ரகசியம் என்றால், தினசரி காலை எழுந்தவுடன் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்த பிறகு, ரோஸ் வாட்டரை முகத்தில் அப்ளை செய்து கொள்வேன். இந்த வழக்கம் காலையில் எனது முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இதுவே எனது சருமத்தை பொலிவாக வைக்கவும் உதவுகிறது என நினைக்கிறேன்.
அதுபோன்று, தினசரி க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் (சிடிஎம்) வழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். மேலும், சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன்.
அவசியமற்ற போது மேக்கப் செய்து கொள்வதில்லை. ஏனெனில் அது சரும துளைகளை அடைத்துவிடும் என்பதால். இது நாளடைவில் சருமத்தின் பொலிவை கெடுத்து விடும். எனவே, சூட்டிங்கின்போது மட்டுமே மேக்கப் செய்தவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|