அழகே உன்னை ஆராதிக்கிறேன்!



முகத்தில் உள்ள அழுக்கை அகற்ற வெள்ளரிக்காய்ச் சாற்றுடன் பால் கலந்து பஞ்சைக் கொண்டு முகத்தில் கீழிருந்து மேலாக அழுத்தித் துடையுங்கள்.  முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் பளபளவென்று இருக்கும்.
பாசிப்பயறு மாவுடன், கஸ்தூரி மஞ்சள் தூள், சிறிது பால் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்தபின் கழுவினால், பூவாய் பொலிவோடுதிகழும் முகம்.கடலை மாவையும், கோதுமை மாவையும் சம எடையில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலைக் கொண்டு விழுதாக்கி, முகம், கை, கால்களில் தடவிக் குளித்தால், அழகு கூடுவதோடு, அழுக்கிருந்தால் அதுவும் வெளியேறும்.

வெட்டி வேரைக் காய வைத்துப்  பொடித்து,  ஆலிவ்  ஆயிலும்  சேர்த்து நீருடன்  கலந்து முகத்தில்  தடவி வந்தால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள்  காணாமல்  போய்விடும்.
சோறு வடிக்கும் கஞ்சியைத் தேவையான அளவு எடுத்து, அத்துடன் தேன் சிறிது கலந்து உடல் முழுவதும் தடவி, சிறிது உலர்ந்தபின் குளித்தால்,  மேனி அழகு  மேன்மைப்படும்.

பன்னீரை உடல் முழுதும் தடவிக் கொண்டால், உடலிலுள்ள வறண்ட நிலை மாறும். நல்ல மணத்தோடு உடலின் சருமம் ஈர்ப்பதத்துடன் நன்கு விளங்கும்.திராட்சைச் சாற்றையோ, தர்பூசணிச் சாற்றையோ முகத்தில் தடவி, காலையில்  கழுவினால், முகம் மென்மையாகும்.

சிறிது புதினா இலையையும் மல்லிகைப் பூக்களையும்   சுத்தம் செய்து, நல்ல நீரில்  ஊற வைத்து, காலையில்   இரவு ஊற வைத்த இரண்டையும்  மைபோல் அம்மியில்  வைத்து அரைத்து,  அவ்விழுதை முகத்தில்  பூசி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால், வெயில்  காலத்தில்  முகம்  குளிர்ச்சியாக  இருக்கும்.

சிறிதளவு இளநீரோடு, தேவையான அளவில், சந்தனம் சேர்த்து குழம்பாக்கி, இருபது நிமிடம் முகத்தில்   பூசி இருந்து, பின் கழுவினால் பளபளப்பாக இருக்கும்.

உருளைக்கிழங்கு சாறு இரண்டு தேக்கரண்டி, 1 தேக்கரண்டி கடலை மாவையும் கலந்து முகத்தில் தடவி, அது உலர்ந்தபின் கழுவிப் பாருங்கள், முகப் பொலிவோடு இருக்கும்.
 குளிப்பதற்கு முன் பாலேட்டை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடம் கடலை மாவைத் தேய்த்து வந்தால், முகம் பட்டு போல் பளபளப்பாக இருக்கும்.கேரட்டை துருவி சாறு எடுத்து அத்துடன் சிறிது பால் கலந்து முகத்தில் நன்றாகத் தடவி, உலர்ந்தபின் நல்ல நீரில் முகம் கழுவினால், முகம் அழகாகும்.

ஆரஞ்சுப் பழத்தோல் காயவைத்த பவுடர், எலுமிச்சைச்சாறு, கடலை மாவு, வேப்பிலைப் பவுடர் ஆகியவற்றை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.  இந்தப் பூச்சு காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக்  கழுவித் துடைக்க வேண்டும்.  நெற்றியிலிருந்து கீழ்ப்பக்கமாக கைகளால் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினசரி செய்து வர முகம் பளிச்சாகும்.தக்காளிப் பழத்தை சூப் செய்து தினமும் சாப்பிட்டு வர, சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெற்று திகழும்.

வேப்பிலைகளில் கொழுந்து இலைகளை எடுத்து, அரைத்து, பரு உள்ள இடத்தில் பூசி வர, பருக்கள் மறைந்து, முகம்   பொலிவாகும்.உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால், அவை மறையும். சிலருக்கு நகைகள் அணிவதால், கழுத்தில் கரு வளையம் ஏற்படும்.

அதைப்போக்க, கோதுமை மாவில் வெண்ணெயைக் கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி,  சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்து வர, விரைவில் கருமை அகலும்.மூக்குக் கடலை மாவுடன் சிறிது பால் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு விட்டு முகத்தில் பூசிக் குளிக்க, முகம் சிகப்பழகு  பெறும்.

கேரட், உருளைக்கிழங்கு இவ்விரண்டையும் நன்கு அரைத்து முகத்தில் பற்றுபோல போட்டு, சிறிது நேரம் கழித்து நல்ல குளிர்ந்த நீரில் அலம்பினால், கண்களில் கரு வளையங்கள் மறைந்து கண்கள் அழகு பெறும்.

சில பெண்களுக்கு கழுத்தில் ஏற்படும் கருமையைப் போக்க, கழுத்தை பசும்பாலில் நன்றாகக் கழுவிக் கொண்டு, பின் புதினா, எலுமிச்சம் பழச் சாற்றைத் தடவி வர, நாளடைவில் கருமை மறைந்து அழகு சேரும். இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர்   இவ்விரண்டையும் கலந்து இரவில் முகத்தில்  தேய்த்துவிட்டுப் பிறகு நன்றாகக் கழுவ, முகம் பளபளவென்று ஜொலிக்கும்.   

-தவநிதி