கடுக்காயின் மருத்துவ குணங்கள்!
மழைக்காலம் முடிந்ததும் ஏற்படும் இலையுதிர் காலம், அதன்பிறகு வரும் முன் பனி - பின் பனி இளவேனிற்காலம் - கோடை காலம் என பருவநிலை மாற்றங்களில் பல வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை, வயிற்று உப்புசம், புளித்த ஏப்பம், மலச்சிக்கல் என மாறி மாறி வந்து விடுகின்றன.  இவை ஏற்படாமலிருக்க ஆயுர்வேதத் தீர்வை தெரிந்துகொள்வோம்.கடுக்காய்த் தோல் உங்களுக்கு நன்கு பயன்படும். பிருந்தமாதவர் எனும் முனிவர் குறிப்பிடும் சில குறிப்புகள் நல்ல பலனைத் தரக் கூடியவையாக இருக்கின்றன. வாத தோஷம் அதிகரிக்கும் மழைக் காலத்தில் இந்துப்பு சூர்ணத்துடனும், இலையுதிர்காலத்தில் அதிகரிக்கும் பித்த தோஷத்தை மட்டுப்படுத்த பழுப்புச் சர்க்கரையுடனும் கபம் வளரும் முன்பனிக் காலத்தில் சுக்குப் பொடியுடனும் கபம் உறையும் கடும் பனிக்காலத்தில் திப்பிலிப் பொடியுடனும், கபம் இளகும் இளவேனிற்காலத்தில் தேனுடனும் சாப்பிட சூட்டினால் கபம் வற்றும்.
கோடைகாலத்தில் வெல்லத்துடனும் கடுக்காய்த்தோலைச் சேர்த்துச் சாப்பிடுவது வயிற்றுக் கோளாறுகள் பலவற்றையும், ஜீரண உறுப்புகளை சார்ந்த பல உபாதைகளையும் அணுக விடாமல் பாதுகாக்கும்.
சாதாரணமாக இரண்டு கடுக்காய்களைத் தட்டி, கொட்டையை நீக்கி, தோல் சதையுடன் கூடிய பாகத்தை எடுத்து, அந்தந்த பருவகாலத்தில் குறிப்பிட்ட சரக்குகளுடன் பிரதி தினம் காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. கடுக்காய்க்குச் சமஅளவு பழுப்புச் சர்க்கரை, பாதி அளவு சுக்கு, கால் பங்கு திப்பிலி, கால் பங்கு இந்துப்பு, வெல்லம் மற்றும் தேன் சம அளவு எடுத்துக் கொள்வது நலம். இந்தக் கடுக்காய் ரசாயனத்தை எப்போதும் நிரந்தரமாய் சாப்பிடலாம். பிணியின்றி இன்பத்துடன் நீண்ட காலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பருவ காலங்கள் என்றில்லாமல், மருந்துமுறையாக கீழ்க்காணும் வகையிலும் நீங்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்.
கடுக்காய்த் தோல் - 9 கிராம் சுக்கு - 3 கிராம் திப்பிலி - 3 கிராம் இந்துப்பு - 3 கிராம்.
திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு பொருட்களையும் ஒன்றாக இடித்து துணியால் சலித்துக் கொள்ளவும். அரை கிராமிலிருந்து இரண்டு கிராம் அளவுக்குள் இந்தப் பொடியை எடுத்து கொஞ்சம் சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீருடன் சாப்பிடலாம். தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.
வெறும் வெந்நீருடனும் கலக்கிச் சாப்பிடலாம்.நீங்கள் குறிப்பிடும் பசியின்மை, வயிற்று உப்புசம், புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய்களுக்குத் தரமான மருந்து இது. வாத பித்த கபங்கள் சமனாகும். உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிற்க, கடுக்காயின் தோல் சுமார் 2 கிராம் எடுத்து சிறுசிறு கண்டங்களாக்கி சுமார் கால் அரை முதல் அரை அவுன்ஸ் அளவு நெய்யில் போட்டு நன்றாய் பொரித்து ஆறிய பிறகு கடுக்காய்த் தோலைக் கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடிக்கவும். இவ்வாறு கடுக்காயை மேற்குறிப்பிட்டது போலப் பயன்படுத்தி, பருவகால வயிற்று உபாதைகள் எதுவும் ஏற்படாத வண்ணம் நலமுடன் வாழலாம்.
- தவநிதி
|