ட்ரெண்டி ரெசிப்பிகள் 3



தேங்காய்ப்பால் புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது -  சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - அரைமூடி
புதினா - 1 கிண்ணம்
வெங்காயம் - 1
 பட்டை, லவங்கம் - 2 துண்டுகள்.

செய்முறை:  பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் ஊற விடவும். தேங்காயை துருவி  மிக்ஸி ஜாரில்  அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பின்னர், குக்கரில் எண்ணெய்விட்டு, பட்டை லவங்கம் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
அதனுடன் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். அடுத்து பாஸ்மதி அரிசியை களைந்து அதனுடன் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர், எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலை ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் விதத்தில் சேர்த்து கிளறி மூடிவிட்டு.  2 விசில் விட்டு இறக்கவும்.  தேங்காய்ப் பால் புலாவ் தயார்.

பயன்கள்:  தேங்காய்ப்பாலில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  இதில், வைட்டமின் சி, இரும்புச்சத்து,  காஃபிக், லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் போன்றவை  நிறைந்துள்ளன. தேங்காய்ப்பால்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

செரிமானத்திற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடை இழப்பை ஆதரிக்கிறது. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கூந்தலுக்கு ஆரோக்கியம் மற்றும் பளபளப்பைத் தருகிறது. பொடுகைக் குறைக்கிறது. உடலின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது.

ஸ்வீட் கார்ன் புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 1 கப்
ஸ்வீட் கார்ன் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
மிளகாய்தூள் -  அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் -  கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு
பட்டை வகைகள் - சிறிதளவு
எண்ணெய், நெய் - தேவைக்கேற்ப
புதினா -  அரை கப்
தயிர் -  அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி.

செய்முறை:  குக்கரில், எண்ணெய் மற்றும் நெய் விட்டு, சூடானதும், பட்டை வகைகளை தாளிக்கவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியவுடன், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும், மசாலா தூள்கள் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். அதன்பின்னர், ஸ்வீட் கார்ன் சேர்த்து லேசாக வதக்கவும்.

பயன்கள்: ஸ்வீட் கார்ன், அதிக சத்தான தானியமாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. ஸ்வீட் கார்னை உணவில்  அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

கேப்சிகம் ஃப்ரைட் ரைஸ்

தேவையானவை

கேப்சிகம் - 3
உருளைக்கிழங்கு -2
பாஸ்மதி - அரை கிலோ
எண்ணெய் - தேவைக்கேற்ப
கிராம்பு - 2
இலவங்கப்பட்டை - 1துண்டு
ஏலக்காய் -2
நெய் - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 1
தக்காளி - 1
புதினா - சிறிதளவு
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

 மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
 கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - பாதியளவு
கொத்துமல்லி - சிறிதளவு நறுக்கியது.

செய்முறை:  பாஸ்மதி அரிசியை அரை வேக்காட்டில் சாதமாக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். பின்னர், அகலமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அதில்   கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.  

அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய கேப்சிகம், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதனுடன் தனியாத்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, வடித்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து கிளறி இறக்கவும்.  கேப்சிகம் ஃப்ரைட் ரைஸ் தயார்.

பயன்கள்:  கேப்சிகத்தில், வைட்டமின்கள், கரோட்டினாய்டுகள், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.  இதனால், பார்வை, ஆரோக்கியம் மேம்படுத்துகிறது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள லைகோபீன் என்ற பைட்டோநியூட்ரியன்  இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

- ஸ்ரீதேவி குமரேசன்