பிசியோதெரபி வகைகள்!
வலியை வெல்வோம்!
பிசியோதெரபி என்றால், ‘கரன்டுல என்னமோ கொடுப்பாங்க, ஷாக் ட்ரீட்மெண்ட் மாதிரி’ என்ற தவறான எண்ணம் பொதுவில் உண்டு. ஆகவே, இந்த இதழில் பிசியோதெரபியில் மின்சாரம் அல்லது மின்னாற்றலை பயன்படுத்தி எவ்வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. மின் உபகரணங்களின் பெயர்கள், மேலும் அவை எவ்வகையான நோய்கூறுகளுக்குப் பயன்படுகின்றன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
 எலக்ட்ரோதெரபி (Electrotherapy) / மின்னாற்றல் சிகிச்சை
குறைந்த மற்றும் நடுத்தர அதிர்வெண் (low and medium frequency current) கொண்ட மின்னோட்டங்களின் மூலம்தசைகள் மற்றும் நரம்புகளைத் தூண்டி, வலி சமிக்ஞைகளைத் தடுத்து என்டார்ஃபின் ஹார்மோன் சுரப்பை ஊக்குவிப்பதன் மூலம் தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்கப் பயன்படும் ஒரு சிகிச்சை முறை.மின்னாற்றல் சிகிச்சையானது பல்வேறு ஆற்றல் வடிவங்களைக் கொண்டுள்ளது.
 *மின்காந்த ஆற்றல் (Electromagnetic energy) *வெப்ப ஆற்றல் (Themal energy) *மின் ஆற்றல் (Electrical energy) *ஒலி ஆற்றல் (Sound energy) *இயந்திர ஆற்றல் (Mechanical energy).
மேற்கண்ட ஆற்றல்களின் இயற்பியல் விதிகளின் அடிப்படையிலேயே பிசியோதெரபி மின் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாற்றல்களின் அடிப்படையில் அமைந்துள்ள மின் உபகரணங்கள்:
1.மின்காந்த ஆற்றல் சிகிச்சை உபகரணங்கள் (Electromagnetic energy modalities)
*ஷார்ட்வேவ் டயதெர்மி (SWD) *மைக்ரோவேவ் டயதெர்மி(MWD) *இன்ஃப்ராரெட் லேம்ப் (Infrared lamps) *அல்ட்ரா வயலட் தெரபி (Ultraviolet therapy) *லோ-பவர் லேசர் (Low power Laser).
2.வெப்ப ஆற்றல் சிகிச்சை உபகரணங்கள் (Thermal energy modalities)
*தெர்மோ தெரபி (Thermotherapy) *கிரையோதெரபி(Cryotherapy).
3.மின் ஆற்றல் உபகரணங்கள் (Electrical energy modalities)
*எலக்ட்ரிகல் ஸ்டிமுலேட்டிங் கரன்ட் (Electrical stimulating currents) *பயோஃபீட்பேக் (Biofeedback) *ஐயனோடோஃபோரோசிஸ் (Iontophoresis)
4.ஒலி ஆற்றல் உபகரணங்கள் (Sound energy modalities)
*அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) *ஷாக்வேவ் தெரபி (Extracorporal shockwave therapy).
5.இயந்திர ஆற்றல் உபகரணங்கள் (Mechanical energy modalities)
*டிராக்சன் (Traction) *மசாஜ் (Massage) *கம்ப்ரசன் (Intermittent compression).
வலி நிவாரணச் சிகிச்சை முறைக்கு பயன்படும் மின்னாற்றலின் அதிர்வெண் (frequency) அளவுகள்.
*குறைந்த அதிர்வெண் (Low frequency) 1-1000 Hz
உபகரணங்கள்: TENS, Galvanic, Faradic current.
*நடுத்தர அதிர்வெண் (medium frequency)
1000-10000 Hz
உபகரணங்கள்: IFT (Interferantial Therapy) Russian current.
*உயர் அதிர்வெண் (High frequency)
10000 Hz க்கும் மேல் …
உபகரணங்கள்: SWD, MWD,Infrared,Ultrasound.
வலி நிவாரணத்திற்கு 0-100Hz ம், வீக்கத்தைக் குறைக்க 0-10Hz ம் அதிர்வெண் கொண்ட மின்னாற்றல் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. நேர விரயம், இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மேற்கூறப்பட்ட அனைத்து உபகரணங்களையும் அனைத்து மருத்துவமனைகளிலும் பயன்படுத்த இயலாது ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.
TENS (Transcutaneous Electrical Nerve Stimulation)
மிகச்சிறிய அளவிலான இந்த உபகரணத்தில் உள்ள மின் முனைகள் (electrodes) கார்பன் ஃபைபர் அல்லது ரப்பரினால் உருவாக்கப்பட்டிருக்கும்.இதை தோலின் மீது ஜெல் தடவப்பட்டோ அல்லது ஒட்டும் தன்மை கொண்ட மின்முனைகளாகவோ நேரடியாகப் பயன்படுத்தலாம். மிகக் குறைந்த மின்சாரமானது மின் முனைகள் வழியாக தோலுக்கு அடியில் உள்ள நரம்புகளைத் தூண்டி விடுவதன் மூலம் தசைகளை செயல்படுத்தி வலியை குறைக்கிறது.
*அறுவைசிகிச்சைக்கு பின் ஏற்படும் வலி. *பிரசவ வலி *மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுத் தசை பிடிப்பு வலி *காயங்கள் மற்றும் எலும்பு முறிவின் போது உண்டாகும் வலி *முதுகு வலி *மூட்டு வலி *நரம்பு செயலிழப்பு- தசை மறுவாழ்வு சிகிச்சை போன்றவற்றுக்கு உடனடி வலி நிவாரணச் சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.
Interferantial Therapy (IFT)
TENSயைப் போலவே இதிலும் நான்கு ரப்பர் மின்முனைகள் உண்டு. இருவகையான நடுத்தர அதிர்வெண் கொண்ட மின்சாரம் செலுத்தப்படும் போது அவை குறைந்த அதிர்வெண் கொண்ட மின் அலைகளாகச் செயல்பட்டு வலி நிவாரணியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் தசைகளை தூண்டி, வலியை உண்டாக்கும் நாக்சிசெப்டார் நரம்பு முடிச்சுகளைத் தூண்டும் ரசாயனங்களை வெளியேற்றுகிறது.
* தசைப்பிடிப்பு * தோள்பட்டை வலி * முதுகுவலி * ஆர்த்ரைட்டிஸ் * வீக்கம் * விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் போன்றவற்றிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
மேற்கூறிய இரண்டு சிகிச்சை முறைகளையும் தவிர்க்க வேண்டியவர்கள்
* பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் * கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள். * கர்ப்பிணிகளுக்கு சிசு உள்ள வயிற்றின் மேற்பகுதியிலும் பின் இடுப்புப் பகுதியிலும் நேரடியாக மின்முனைகள் வைப்பதை தவிர்க்கலாம் * ரத்தப்போக்கு (hemorrhage) * தோல் வியாதிகள் * ஆழ்சிரை ரத்த உறைவு (Deep vein thrombosis). * வலிப்பு நோய்.
அல்ட்ரா சவுண்ட் தெரபி
0.5-5 m Hz மற்றும் 1-3 mHz அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள் தான் சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள் அதிகளவில் உட்கிரகிக்கப்படும் 4-6cm ஆழம் வரை உடலில் ஊடுருவிச் செல்லும், ஒலி அலைகள் திசுக்களால் உட்கொள்ளப்பட்டு வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது ஆனால் இவ்வெப்பத்தை பெரும்பாலும் உணர முடியாது.
திசுக்களில் உள்ள புரதம் இவ்வலைகளை அதிகமாக உட்கிரகித்துக் கொள்ளும். இவ்வலைகள் காயம்பட்ட இடத்தில் செல்களின் செயல்பாட்டை அதிகரித்து இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கழிவுகளை அகற்றி (elimination of waste product) வீக்கத்தை குறைக்கும் (reduce the inflammation). *ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் *விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் *மூட்டு விறைப்பு (Joint stiffness) *அடிபட்டால் உடல் திசுக்களில் ஏற்படும் ரத்தக்கசிவு ( heamatoma) *தசை , தசை நார் இறுக்கம் (Contractures) *வீக்கம் (inflammation)
போன்ற நோய் கூறுகளுக்கு அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை தரப்படும்.
தவிர்க்க வேண்டிய பாகங்கள்
*கேன்சர் கட்டி *கர்ப்பிணிகள்(சிசு உள்ள வயிற்றின் பகுதி) *முதுகுத்தண்டுவடம் மற்றும் மூளைக்காயங்கள் *கண்களுக்கு அருகில் *ஆழ்சிரை ரத்த உறைதல் (Deep vein Thrombosis). *தொற்றுநோய் (infection). *இரத்த உறையாமை நோய் (haemophilia). *வலிப்பு நோய்.
அகச்சிவப்பு விளக்கு (Infrared lamps)
இயற்கையில் சூரிய ஒளி, நிலக்கரித் தீ (Coal fire), வாயுத் தீ (Gas fire), மின்சாரம் ஆகியவை வெப்பத்தை உமிழ்கின்றன. அகச்சிவப்பு விளக்கானது மின்காந்த ஆற்றலைக் கொண்டது. இதன் அலைநீளமானது 750nm-40000nm ஆகும்.அகச்சிவப்புக் கதிர்கள் திசுக்களை ஊடுருவி வெப்ப ஆற்றலை உண்டாக்குகிறது இவ்வெப்பமானது இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை தளர்வுபடுத்தும், வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டி அதிக வியர்வையை வெளியேற்றுவதின் மூலம் கழிவுகளை அகற்றுகிறது.
மேலும் நரம்புகளைத்தூண்டி வலியையும் தசை விறைப்பையும் குறைக்கிறது. வயதானவர்கள், இருதயநோய், தலைசுற்றல், தோல் நோய், கட்டிகள், உள்ளவர்கள் இச்சிகிச்சையைத் தவிர்த்து விடலாம். ஷார்ட் வேவ் டயத்தெர்மி (SWD)
மின்காந்த அலைகளை உடல் திசுக்கள் வெப்ப ஆற்றலாக மாற்றும் 27.12 MHz அதிக அதிர்வெண் கொண்ட சிகிச்சை முறை. வலியையும், மூட்டு விறைப்பு, தசை இறுக்கம், போன்றவற்றை குறைக்கும். மாதவிடாய் காலத்தில் இச்சிகிச்சையை தவிர்க்கலாம், மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளில் உள்ள காரணிகள் இருந்தாலும் தவிர்க்கப்பட வேண்டும்.
Electrical Muscle Stimulation (EMS)
பாதிக்கப்பட்ட நரம்பு, தசை செயலிழப்பை மின் ஆற்றலினால் மீட்டெடுக்க உதவும் மறுவாழ்வு சிகிச்சை முறை. தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் இழந்த உடலியக்கத்தையும் மீட்டெடுக்கவும் இச்சிகிச்சை முறை பயன்படுகிறது. இன்னும் சில மின் உபகரணங்களும் பயன்படுத்தப்படுகிறது, அவற்றை பற்றி சிகிச்சைக்கு முன்பு உங்களது இயன்முறை மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்ட உபகரணங்கள் பொதுவாக அடிப்படைப் பயன்பாட்டில் உள்ளன.
பின் குறிப்பு: உபகரணங்களின் பெயர்களை முழுவதும் தமிழ்ப்படுத்தி எழுதினால் குழப்பம் ஏற்படும் என்பதால் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழில் எழுதி உள்ளேன்.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
|