சர்க்கரை எத்தனை சர்க்கரையோ?



உஷார் டிப்ஸ்!

உணவுப் பண்டங்களில் இனிப்பு என்பது ஓர் இயற்கையான சுவை. பொதுவாக, காய்கறிகளில் பழங்களில் இந்தச் சுவை தூக்கலாக இருப்பதை நாம் உணரலாம். தேனிலும் இனிப்புச் சுவை உண்டு. இந்த இனிப்பு என்ற சுவையை உணர்ந்த மனிதன், இதை மட்டும் தனியாக ருசிக்க வேண்டும் என்று கருதியதால் உருவான பண்டம்தான் சர்க்கரை. சர்க்கரை என்பது இனிப்பின் பருவடிவம்.

இந்த சர்க்கரை, சக்கரத்தின் மூலம் சுழற்றி, அரைத்து எடுக்கப்படும் சாறுகளின் மூலம் பெறப்படும் இனிப்பு என்பதாலேயே இதற்கு சர்க்கரை என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
சர்க்கரைக்கு பல பெயர்கள் உள்ளன. வெள்ளைச் சர்க்கரை அஸ்கா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், 170 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில், அஸ்கா எனும் ஊரில் கரும்பு சர்க்கரையை சுத்திகரிக்கும் ஆலை தொடங்கப்பட்டு முதன்முதலில் வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்பட்டதால், இது அஸ்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முன்பு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சர்க்கரையே அதிகளவு பயன்பாட்டில் இருந்து வந்ததால், அதற்கு சீனி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று நவீன வேதிய கண்டுபிடிப்புகளின் விளைவாக பலவகையான சர்க்கரைகள் உணவுப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் சர்க்கரை அதாவது Sugar என்று குறிப்பிட்டால் மட்டுமே சர்க்கரை எனக் கருதுகிறோம். சர்க்கரை நோயின் விளைவால், இதில் சர்க்கரை உள்ளது என்று குறிப்பிட்டால் விற்பனை சரியும் என்று உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டிருப்பார்கள். அந்தப் பெயர்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம். எந்தப் பெயரில் குறித்திருந்தாலும் சர்க்கரை சர்க்கரைதான். எனவே, அவற்றை கவனமாகப் பயன்படுத்துவது நல்லது.

சில பொருட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்க்கரை பொருட்களின் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்கள். அந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பதே உடலுக்கு நல்லது. அதே போல் சுகர் ஃப்ரீ எனப்படும் லீவ் லோஸில் சர்க்கரை கிடையாது என்றொரு நம்பிக்கை உள்ளது. அதுவும் தவறானது. லீவ் லோஸ் சர்க்கரையில் சர்க்கரை உடலில் கரையும் விகிதம் குறைவு. மற்றபடி அதுவும் சர்க்கரைதான். பொதுவாக, எல்லா சர்க்கரையும் ஒன்றுதான்.

அவை ரத்தத்தில் கலக்கும் விகிதத்தைப் பொருத்தே அவற்றில் வித்தியாசம் இருக்கிறது. சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் விகிதத்தை க்ளைசெமிக் என்ற குறியீட்டால் குறிப்பிடுவார்கள். குறைவான க்ளைசெமிக் குறியீடு உள்ள சர்க்கரை நல்லது என்ற பொருளில்தான் சந்தைப்படுத்தப்படுகிறது. க்ளைசெமிக் விகிதமே இல்லாத சர்க்கரை என்று எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரையில் பிரதானமாக கரும்புச் சாறு கொண்டு தயாரிக்கப்படுவது சுக்ரோஸ். பூக்கள் அல்லது பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுவது ஃப்ரக்டோஸ். இதில் லீவ்லோஸ் என்பது பூக்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை சர்க்கரை அவ்வளவுதான் வித்தியாசம். சர்க்கரையில் நல்ல சர்க்கரை கெட்ட சர்க்கரை என்றெல்லாம் எதுவும் இல்லை. சர்க்கரை என்றாலே ஆபத்துதான். இயற்கையான சர்க்கரை எல்லா இயற்கை உணவுப் பொருட்களிலும் அதன் விகிதத்தில் தன்னியல்பாக உள்ளது.

உண்மையில் நாம் அவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான சர்க்கரை சேர்ந்துவிடும். அதை விடுத்து, மனிதன் தயாரிக்கும் எல்லா சர்க்கரையும் செயற்கைதான். உடலுக்கு தீமையானதுதான். இந்த விழிப்புணர்வு இன்று மிகவும் அவசியம். சர்க்கரையில் பல வகைகள் உள்ளன.

அவற்றைப் பார்ப்போம்

வெள்ளை சர்க்கரை, பழுப்பு சர்க்கரை, நாட்டு சர்க்கரை, செயற்கை சர்க்கரை, சூப்பர்ஃபைன் சர்க்கரை (காஸ்டர் சர்க்கரை), சர்க்கரை ஆல்கஹால், மேப்பிள் சர்க்கரை என பலவகைகள் உள்ளன.

வெள்ளை சர்க்கரை

வெள்ளை சர்க்கரை என்பது கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படும் நாட்டு சர்க்கரை சில ரசாயனங்களால் சுத்திகரித்து அதன் பழுப்பு நிறத்தைப் போக்கி, தூய்மையான வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. இதில் கெமிக்கல்கள் அதிகளவு உபயோகப்படுத்துவதால், இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பழுப்பு சர்க்கரை (நாட்டு சர்க்கரை)

பழுப்பு சர்க்கரை ( பிரவுன் சுகர்) என்பது கரும்புச் சாறில் இருந்து வெல்லப்பாகு எடுத்து தயாரிக்கப்படும் சர்க்கரையாகும். வெள்ளை சர்க்கரையை அந்த நிறத்திற்கு கொண்டு வருவதற்காக ஏராளமான கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பழுப்பு சர்க்கரையில் அவை சேர்க்கப்படுவதில்லை. இதனால், இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நமக்கு முழுவதுமாக கிடைக்கின்றன.

மேலும், சுத்திகரிக்கப்படாத இயற்கையான நாட்டுச் சர்க்கரையானது, மாதவிடாய் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கவும், மலச்சிக்கலைக் குறைக்கவும், சருமத்தில் நீரேற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் கலோரிகள் குறைவானது என்பதால், நாட்டுச்சர்க்கரையை எடை குறைக்க முயல்பவர்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதுவும் சர்க்கரைதான் கவனம்.

மேப்பிள் சர்க்கரை (Maple Syrup):

மேப்பிள் சர்க்கரை என்பது மேப்பிள் மரத்தின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பு ஆகும், இந்த சர்க்கரை மேப்பிள் சிரப்பை விட அதிக நேரம் கொதிக்கவைப்பதன் மூலம் பெறப்படுகிறது. 

ஒரு தேக்கரண்டி மேப்பிள் சிரப்பில் 52 கலோரிகள், 12.1 கிராம் சர்க்கரை மற்றும் 13.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. கரும்புச் சர்க்கரையில் உள்ள அதே அளவு கார்போஹைட்ரேட்டுகள் மேப்பிள் சர்க்கரையில் உள்ளன; இருப்பினும், அளவின் அடிப்படையில் அளவிடும்போது, ​​ஒரு டீஸ்பூன் கரும்புச் சர்க்கரையில் 16 கலோரிகளும், ஒரு டீஸ்பூன் மாப்பிள் சர்க்கரையில் 11 கலோரிகளும் உள்ளன.

சர்க்கரை ஆல்கஹால் (Sugar Alcohol):

சர்க்கரை ஆல்கஹால்கள், பாலிஹைட்ரிக் ஆல்கஹால்கள், பாலிஅல்கால்கள், ஆல்டிடோல்கள் அல்லது கிளைசிட்டால்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சர்க்கரைகளிலிருந்து பெறப்பட்ட கரிம சேர்மங்கள், ஒவ்வொரு கார்பன் அணுவுடன் ஒரு ஹைட்ராக்சில் குழு (-OH) இணைக்கப்பட்டுள்ளது. இவை, சர்க்கரையை விட குறைவான கலோரிகளையும், கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டிருப்பதால், குறைந்த கலோரி உணவுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகிறது.

அதேசமயம், அதிக அளவு சர்க்கரை ஆல்கஹால்களை உட்கொள்வது வாயு, வயிற்றுப்போக்கு அல்லது பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.இந்த சர்க்கரை ஆல்கஹால்கள், சர்பிடால், சைலிட்டால், லாக்டிடால், ஐசோமால்ட், மால்டிடோல், மன்னிடோல், எரித்ரிட்டால் போன்ற பல வகைகள் கொண்டுள்ளது.

செயற்கை இனிப்புகள்

(Artificial Sweeteners):
அஸ்பார்டேம், மாங்க் பழச் சாறு, அசெசல்பேம் பொட்டாசியம் (ஏஸ்-கே) மற்றும் சைக்லேமேட், சாக்கரின், ஸ்டீவியா, சுக்ரலோஸ் போன்றவை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்புகள் ஆகும். அவை கலோரிகள் இல்லாமல் சர்க்கரையின் இனிப்பை வழங்குகின்றன. 

இந்த செயற்கை இனிப்புகள் சாதாரண சர்க்கரையை விட பல மடங்கு இனிப்பாக தயாரிக்கப்படுகின்றன, இதன் காரணமாக ஒரு ஸ்பூன் சர்க்கரையின் அதே விளைவை உருவாக்க ஒரு சிறிய அளவு செயற்கை இனிப்பு மட்டுமே தேவைப்படுகிறது. மிகக் குறைந்த அளவு இனிப்பை பயன்படுத்துவதன் விளைவாக, மிகக் குறைந்த கலோரிகள் மட்டுமே உட்கொள்ளப்படுகின்றன.

சுகர் சிரப்

சர்க்கரையை நீரில் கரைத்து வெந்நீரில் வேகவைத்துச் செய்யப்படும் ஒருவகை சர்க்கரைதான் சுகர் சிரப். இதன் க்ளைசெமிக் விகிதமும் அதிகம். எனவே இதனைப் பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.

சூப்பர்ஃபைன் சர்க்கரை

சூப்பர் ஃபைன் சர்க்கரை, காஸ்டர் சர்க்கரை, பார் சர்க்கரை, பேக்கர் சர்க்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இது கிரானுலேட்டட் வெள்ளை சர்க்கரையின் ஒரு வகையாகும். ஆனால், அதைவிட மெல்லிய துகள்களைக் கொண்ட ஒரு வகை சர்க்கரை ஆகும். இது மியூஸ், புட்டிங்ஸ் போன்ற மென்மையான இனிப்புகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

சூப்பர்ஃபைன் சர்க்கரை கிரானுலேட்டட் சர்க்கரையை விட மெல்லியதாக இருப்பதால், இது சமையல் மற்றும் பேக்கிங்கில் எளிதில் கரைந்துவிடுகிறது.

கிரிஸ்டல் சர்க்கரை

கிரிஸ்டல் சர்க்கரை என்பது, சர்க்கரை படிகங்களால் ஆன ஒரு வகை இனிப்புப் பொருள். இது ராக் சர்க்கரை என்றும் அழைக்கப்படுகிறது. கிரிஸ்டல் சர்க்கரை, சர்க்கரை மற்றும் தண்ணீரின் மிகைநிறைவுற்ற கரைசலை படிக அணுக்கருவுக்கு ஏற்ற மேற்பரப்பில் படிகமாக்குவதற்கு அனுமதிப்பதன் மூலம் உருவாகும் ஒரு வகை தின்பண்டம். இது பெரிய சர்க்கரைப் படிகங்களால் ஆகியிருப்பதனால், ராக் சர்க்கரை அல்லது கிரிஸ்டல் சர்க்கரை என அழைக்கப்படுகிறது.

இது பெரும்பாலும் தேநீரில் கரைக்கப்படுகிறது.இது தவிர, இனிப்புச் சுவைக்காக பனஞ்சர்க்கரை, பனை வெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, தென்னஞ் சர்க்கரை, தென்னங் கருப்பட்டி, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் போன்றவைகளும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பேரீச்சம் பழத்திலிருந்தும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இவை தவிர, இனிப்பு சுவைக்காக தேனும் பயன்படுத்தப்படுகிறது.

இதில், பனஞ்சர்க்கரை, பனங்கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவை பனை மரத்தின் பதநீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. தென்னஞ்சர்க்கரை, தென்னங்கருப்பட்டி என்பது, தென்னை மரத்தின் பாளையில் இருந்து நீர்வடித்து அதனை காய்ச்சி தயாரிக்கப்படுகிறது. இதில், புரதச்சத்தும், கால்சியம் சத்தும் அதிகளவில் காணப்படுகின்றன.    
                    
- ஸ்ரீதேவி குமரேசன்

இயற்கையான சர்க்கரைகள்

குளுக்கோஸ் (Glucose): இது உடலுக்குத் தேவையான ஒரு முக்கிய ஆற்றல் மூலமாகும், இது பழங்கள், தேன், மற்றும் சில காய்கறிகளில் இருந்து பெறப்படுகிறது. ப்ஃரக்டோஸ் (Fructose): இது பழங்கள், தேன், மற்றும் சில காய்கறிகளில் பெறப்படுகிறது, இது சர்க்கரைகளில் இனிமையானது. சுக்ரோஸ் (Sucrose): 

இது கரும்பு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கில் இருந்து பெறப்படுகிறது, இதுதான் நாம் பொதுவாக பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை ஆகும். லாக்டோஸ் (Lactose): இது பாலில் இருந்து பெறப்படும் சர்க்கரை ஆகும். மால்டோஸ் (Maltose): இது மாவுச்சத்துக்களில் இருந்து பெறப்படுகிறது. கேலக்டோஸ் (Galactose): இது பாலில் காணப்படும் சர்க்கரை ஆகும்.