டியர் டாக்டர்



‘ஒரு உயிர் மேலும் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதுமே... உயிரோட மதிப்பு குடும்பத்துக்குத்தானே தெரியும்...’ - லதா குமாரஸ்வாமியின் வார்த்தைகள் உயிர் வரிகள். டேங்கர் ஃபவுண்டேஷன் நன்கு வளரட்டும்... பல உயிர்களை வாழ வைக்கட்டும். உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருந்தா 20 வருஷத்துக்கு மேல கூட டயாலிசிஸ் பண்ணிக்கிட்டே உயிர் வாழ முடியும் என்று கூறி, கிட்னி நோயாளிகளுக்கு நம்பிக்கை அளித்த ‘சேவை’ பகுதி அருமை!-
 பாரதி முருகன், மணலூர்பேட்டை., ரமேஷ்பாபு, பெங்களூரு.

மருத்துவத்தையும் எழுத்தையும் சமமாகப் பாவித்து, ‘லட்சியம் நிறைவேறும் வரை ஓயப்போவதில்லை’ என்ற உறுதிமொழியை மறுமுறையும் உறுதி செய்யும் ‘மாண்புமிகு மருத்துவர்’ அருண் கட்ரே, உண்மையிலேயே மகத்தான மருத்துவர்தான் என்று நானும் உறுதிமொழி தருகிறேன்! வணிகமயமாகி வரும் மருத்துவ உலகின் சில மர்மங்களை வெளிப்படுத்திய
‘78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்’ கட்டுரை அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.
- வெ. லட்சுமி நாராயணன், வடலூர்., பவதாரிணி, தருமபுரி.

உணவியல் நிபுணர் மீனாட்சி வழங்கியிருந்த முட்டை சாப்பிடுவது குறித்த வழிமுறை விளக்கங்கள், பயந்துகொண்டே முட்டை சாப்பிடுபவர்களது பயத்தினை விரட்டியடித்தது. முட்டையில் ஒளிந்திருக்கும் மருத்துவ மகிமைகளையும் எடுத்துரைத்திருந்தன!ஐஸ் தெரபி ஜில்லுனு ஒரு சிகிச்சை - விளக்கம் அருமை! பாட்டில் தண்ணீர் ஐஸ் தெரபி பாத வலியைப் போக்கும் முறை கை மேல் பலனளித்தது!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.

‘குழந்தைகளைப் பாதுகாக்கிறேன்’ என்ற பெயரில் அவர்களை வெளியே விடாமல் வீட்டுக்கு உள்ளேயே பூட்டி வைத்து வளர்க்காமல், திறந்த வெளியிடங்களில் ஓடியாடி விளையாடச் செய்வதும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடக் கொடுப்பதும் உயர வளர்ச்சிக்கு உதவும் என டாக்டர் சங்கர் கூறியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
- மகாதேவன், திருநெல்வேலி.

‘ஒரே நாளில் எடை கூடிவிடுவதில்லை. ஆனால், எடை குறைப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தவறு’ என்று அழகு அறுவைசிகிச்சை நிபுணர் நாராயண மூர்த்தி சொன்னது என் கண்களைத் திறந்தது. எடை குறைக்க என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டு தோற்ற எனக்குப் பாடமாகவும் அமைந்தது!
- சத்யபாமா, சென்னை-45.

‘வாய் நாறுது’ என யாரேனும் சொன்னால் ஒன்றுக்கு இருமுறை பல் துலக்கிக் கொண்டிருந்த எனக்கு, அது நீரிழிவின் அறிகுறியாக இருக்கலாம் எனப் புரிய வைத்துவிட்டீர்கள். உடனே மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டேன். நீரிழிவுக்கு முந்தைய நிலை என எச்சரித்து வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தியிருக்கிறார் டாக்டர்.
- ரத்னபாண்டியன், மதுரை.