மருந்து மாத்திரைகளுக்கு 10 விதிமுறைகள்!
தும்மினால் கூட ஏதோ பிரச்னையாக இருக்குமோ என மருத்துவரிடம் அபிப்ராயம் கேட்கிற மக்கள் ஒரு ரகம்... உயிரைப் பறிக்கிற நோயைச் சுமந்து கொண்டு, ஒன்றுமே இல்லாதது போல அலட்சியமாக இருப்பவர்கள் இன்னொரு ரகம்.தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தவறுவது, தேவையற்ற மருந்துகளை எடுத்துக் கொள்வது... இவை இரண்டுமே ஆபத்தானதுதான். மருந்தை சரியான முறையில் சாப்பிட்டால் அது நமக்கு நண்பன். அலட்சியப்படுத்தினால் அதுவே உயிருக்கு உலை வைக்கிற விஷம்! மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் போது அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கியமான 10 விதிமுறைகளை விளக்குகிறார் பொது மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியருமான ஏ.சித்ரா.
1மருந்துகளை எந்த அளவில் எந்த முறையில் மருத்துவர் எடுத்துக்கொள்ளச் சொல்கிறாரோ, அதே அளவில், அந்த முறையில்தான் சாப்பிட வேண்டும். கூடுதலாகவோ, குறைவாகவோ சாப்பிடக்கூடாது. ஒருமுறை ஒரு நோய்க்கு கொடுத்த மாத்திரையை அதே நோய் மறுபடியும் வரும் போது, மருத்துவரை கேட்காமல் நாமாகவே வாங்கிச் சாப்பிடக்கூடாது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
2மருத்துவரின் ஆலோசனையில்லாமல் சுயமாக மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடக்கூடாது. அது மிக ஆபத்தானது. நோயாளியை இறப்பு வரை கொண்டு செல்லும். அதனால் சுய மருத்துவம் கூடாது. விளம்பரங்களில் காட்டப்படுகிற மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தலைவலிக்கு, உடல் வலிக்கு என்று வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதித்துவிடும்.
3ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிடுபவர்கள், குறித்து வைத்துக்கொண்டு, அடுத்த முறை செல்லும் போது மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாத்திரை பலனளிக்காவிட்டாலும், மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இது மாத்திரையை மாற்றி அளித்து சிகிச்சையை மேம்படுத்த உதவும்.
4மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் போது, ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் கூற வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தும் மாத்திரைகளை நிறுத்திவிட வேண்டும். ஒரு மாத்திரையை வேண்டாம் என்று மருத்துவர் நிறுத்திவிட்டால் அந்த மாத்திரைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் தூக்கிப்போட்டு விட வேண்டும். மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
5தயாரித்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள் எக்ஸ்பயரி தேதி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். காலாவதி தேதியை உறுதி செய்தே மருந்துகளை வாங்க வேண்டும். அடிக்கடி எக்ஸ்பயரி தேதியை பரிசோதித்துக் கொள்வதும் அவசியம். எக்ஸ்பயரி ஆன மாத்திரைகள் வீட்டில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். முழு அட்டையாக வாங்காத மாத்திரைகளில் எக்ஸ்பயரி தேதி இருக்காது. அட்டையில் மட்டும்தான் ஓர் ஓரத்தில் அச்சிட்டு இருப்பார்கள். அதனால் மருந்துக்கடை பில்லில், எக்ஸ்பயரி தேதியை குறித்துக் கொடுக்க சொல்ல வற்புறுத்துவது அவசியம்.
6தொலைபேசியில் மருத்துவரிடம் ஆலோசனை செய்யக்கூடாது. நோயாளியை நேராக பார்த்தால்தான் சில முக்கிய அறிகுறிகளைக் கண்டறிய முடியும். அடிக்கடி மருத்துவரை மாற்றவும் கூடாது. உங்களின் குடும்ப மருத்துவருக்கே முழுமையான தகவல்கள் தெரியும். சிறப்பு மருத்துவரிடம் புதிதாக சிகிச்சைக்கு செல்லும்போதும், குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதலின் படியே செல்ல வேண்டும்.
7வயதானவர்களும் பார்வை தெளிவாக இல்லாதவர்களும் மாத்திரைகளை டேப்லெட் பாக்ஸில் காலை, மாலை, இரவு என தனியாக பிரித்து வைத்துக் கொள்வது நல்லது.
‘சரியான நேரத்துக்கு மாத்திரை சாப்பிட்டார்களா’ என அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பதும் அவசியம். சிலர் மாத்திரையின் சுவை பிடிக்காமல் துப்பிவிடுவார்கள். எல்லா மாத்திரைகளையும் சாப்பிட மாட்டார்கள். சில நேரங்களில் மாத்திரை சாப்பிடுவதை மறந்தும் விடுவார்கள். சிலர் மாத்திரைகள் சாப்பிட்டதை மறந்து விட்டு, மறுபடியும் சாப்பிடுவார்கள். கூடிய வரை, நாமே கையில் எடுத்துக் கொடுத்து சாப்பிட வைப்பது அவசியம்.
8சில நோய்களுக்கு வாழ்நாள் முழுக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். உதாரணமாக நீரிழிவு உள்ளவர்கள். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிட்டது என அவர்களாக மாத்திரைகளை நிறுத்தக் கூடாது. அது ஆபத்தானது. நீரிழிவு, ரத்த அழுத்தம், வலிப்பு ஆகியவற்றுக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் திடீரென மாத்திரைகளை நிறுத்தக்கூடாது.
9வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரைகள், சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரைகள், தண்ணீரில் கரைத்துச் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு முறை உண்டு. அப்படித்தான் சாப்பிட வேண்டும்.நேரத்தை மாற்றி சாப்பிடக்கூடாது. அப்படிச் செய்தால் மாத்திரைகள் வேலை செய்யாமல் போய்விடும். சில மாத்திரைகளை சூரிய ஒளியில் படும்படி வைத்தால் அதன் வீரியத்தை இழந்துவிடும் என்பதால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியிருக்கும்.
குழந்தை களின் கைகளுக்கு எட்டுமாறு மருந்து, மாத்திரைகளை வைக்கக் கூடாது.10மருந்துக்கடைகளில் மாத்திரைகள், மருந்துகள் வாங்கும் போது தவறாமல் பில் வாங்க வேண்டும். நீங்கள் இந்த மருந்தைத்தான் வாங்கியிருக்கிறீர்கள் என்பதற்கான முக்கிய சான்று அது. சட்ட ரீதியிலான முக்கிய ஆவணமாகவும் பில் செயல்படும். உறையில் எம்.ஆர்.பி. விலை எவ்வளவு அச்சிடப்பட்டுள்ளது என்றும் பார்க்க வேண்டும். எம்.ஆர்.பி. விலைக்குள் எல்லா வரிகளும் அடக்கம்.
அதற்கும் அதிக விலையை கொடுத்து மாத்திரை வாங்கக் கூடாது. மாத்திரைகள் சேதம் அடையாமல் சரியான வடிவில் இருக்கின்றனவா? நிறம் மாறாமல் உள்ளனவா? இவற்றையும் சோதித்து வாங்க வேண்டும். ‘மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த கம்பெனி மாத்திரை இல்லை, வேறு கம்பெனி மாத்திரை இருக்கிறது’ என்பார்கள் மருந்துக் கடைக்காரர்கள். இந்த சூழ்நிலை வரும் போது மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மருந்துக் கடைக்காரர் சொல்கிற மாற்று மருந்தைவிட, மருத்துவர் சொல்வதை உபயோகிப்பதே பாதுகாப்பானது.
தலைவலிக்கு, உடல்வலிக்கு என்று வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல்எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதித்துவிடும்.வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரைகள், சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரைகள், தண்ணீரில் கரைத்துச் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு முறை உண்டு. அப்படித்தான் சாப்பிட வேண்டும்.
சேரக்கதிர்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்