கூந்தல்



1. கோடையில் கூந்தல் பராமரிப்பு

கூந்தல் நிபுணர் லலிதா ஃபெர்னாண்டஸ்

ஆறடிக் கூந்தலை ஆசை ஆசையாக வளர்க்கிறவர்களுக்குக் கூட கோடை வந்துவிட்டால், ஒட்ட வெட்டி எறிந்து விடலாமா என நினைக்க வைக்கும். வெயில் என்றதுமே எல்லோரின் கவனமும் சருமம் கருத்துப் போகாமல் காப்பதில்தான் இருக்குமே தவிர, கூந்தலைப் பராமரிப்பதில் இருக்காது. ஆனால், சருமத்தைப் போலவே கூந்தலையும் பாதிக்கக்கூடியது கோடையின் கடுமை என்பது பலருக்கும் தெரிவதில்லை.

கோடைக் காலத்தில் கூந்தலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள், பராமரிப்பு முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் கூந்தல் நிபுணர் லலிதா ஃபெர்னாண்டஸ்.‘‘வெயிலில் இருந்து கிளம்புகிற சூடானது, கூந்தலுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய புரதச் சத்தைக் குறைத்து, கூந்தலின் நிறத்தை மாற்றி, பளபளப்பை மறையச் செய்து, கூந்தலை உடையவும் வைக்கும். தவிர சூரியனின் யுவி கதிர்களின் தாக்கமானது, ஃபாலிக்கிள் எனப்படுகிற கூந்தல் நுண்ணறைகளை பாதித்து, கூந்தலின் ஈரப்பதத்தை முற்றிலும் இழக்க வைக்கும்.

வெயிலில் இயல்பாகவே அதிகரிக்கிற வியர்வையின் விளைவாக மண்டைப் பகுதியில் Seborrheic Dermatitis என்கிற இன்ஃபெக்ஷன் பிரச்னை ஏற்படும். வியர்வை சுரப்பியின் தூண்டலால் சீபம் என்கிற திரவச் சுரப்பும் அதிகமாகி, அதன் விளைவால் Malassezia furfur என்கிற பூஞ்சையின் வளர்ச்சியும் பெருக்கமும் தீவிரமாகி, பொடுகுத் தொல்லை உண்டாகும். இது வேறு சில தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

எண்ணெய் பசையான சருமத்தைப் போலவே எண்ணெய் பசையான கூந்தலும் கோடையில் பிரச்னைகளை சந்திக்கும். வெயிலின் அதிகரிப்பால், எண்ணெய் சுரப்பிகள் அதிகமாகத் தூண்டப்பட்டு வியர்வை பெருகி, கூந்தலில் பிசுபிசுப்பும், அழுக்கும் சேரும்.வெயிலின் தாக்கத்திலிருந்து கூந்தலைக் காப்பாற்ற, ஒருநாள் விட்டு ஒருநாள் மைல்டான ஷாம்பு உபயோகித்து அலச வேண்டியது அடிப்படையான சிகிச்சை. கூந்தலை பலப்படுத்தும் மைல்டான பாதுகாப்பு சீரம் உபயோகிக்கலாம்.

நீச்சல் பழக்கமுள்ளவர்கள் கோடையில் கூந்தல் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். நீச்சல் குளத் தண்ணீரில் கலந்துள்ள குளோரின் கூந்தலை வெகுவாகப் பாதிக்கும். எனவே நீச்சலுக்குத் தயாராவதற்கு முன்பாக கூந்தலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வறண்டு போன ஸ்பாஞ்சானது தண்ணீர் பட்டதும் மொத்த தண்ணீரையும் இழுத்துக் கொள்வது போலத்தான் கூந்தலும். நீச்சல் குளத்தில் இறங்கியதும், முதலில் கூந்தலில் படும் தண்ணீரை கிரகித்துக் கொள்ளும்.

அந்தத் தண்ணீரில் உள்ள குளோரின் கூந்தலில் படிந்து அதை வறளச் செய்வது, நிறம் மாற்றுவது என எல்லா பாதிப்புகளுக்கும் காரணமாகும். எனவே நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பாக நல்ல தண்ணீரில் தலையை நனைத்துக் கொள்வதன் மூலம், நீச்சல் குளத்துத் தண்ணீர் கிரகிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். கூந்தலில் லீவ் ஆன் ( Leave on ) கண்டிஷனர் தடவிக் கொண்டும் நீச்சலடிக்கலாம். நீச்சலுக்கு முன்பாக கூந்தலை குதிரைவாலாகக் கட்டிக் கொள்ளலாம்.

வெளியில் தொங்கக் கூடிய பகுதி மட்டுமே தண்ணீரில் படும் என்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும்.கடைகளில் க்ளாரிஃபையிங் ஷாம்பு எனக் கிடைக்கும். இது கூந்தலில் படிந்துள்ள தேவையற்ற படிவுகளை அகற்றி சுத்தப்படுத்தக்கூடியது. கால் கப் சிடார் வினிகரில் சிறிது தண்ணீர் கலந்து கூந்தலை அலசினாலும் கூந்தல் நிறம் மாறுவதும், பொலிவிழப்பதும் தவிர்க்கப்படும்.

வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க கூந்தலை இறுக்கக் கட்டிக் கொள்வது பலரது வழக்கம். ஆனால், ஹேர் பேண்ட் அல்லது மெட்டல் கிளிப் போட்டு கூந்தலை இறுக்கமாகக் கட்டாமல், சற்றே தளர்வாக விடுவதுதான் சிறந்தது.குளோரின் கலந்த தண்ணீரில்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் சிலருக்கு இருக்கும். கூடியவரையில் அதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. கூந்தலை அலச மட்டுமாவது நல்ல தண்ணீர் பயன்படுத்துவதே சிறந்தது.

கோடையில் கூந்தல் ஆரோக்கியம் காப்பதில் உட்கொள்கிற உணவுகளுக்கும் பங்குண்டு. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, ஒருநாள் விட்டு ஒருநாள் இளநீர் குடிப்பது, தினமும் 2 முதல் 3 வேளைகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்வது, பால் பொருட்களை சேர்த்துக் கொள்வது, முளைகட்டிய பயறுகள் சாப்பிடுவது போன்றவற்றின் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

வறண்டு போனஸ்பாஞ்சானது தண்ணீர் பட்டதும் மொத்த தண்ணீரையும் இழுத்துக் கொள்வது போலத்தான் கூந்தலும். நீச்சல் குளத்தில் இறங்கியதும், முதலில் கூந்தலில் படும் தண்ணீரை கிரகித்துக் கொள்ளும். அந்தத் தண்ணீரில் உள்ள குளோரின் கூந்தலில் படிந்து அதை வறளச் செய்வது, நிறம் மாற்றுவது என எல்லா பாதிப்புகளுக்கும் காரணமாகும்.

2. கோடை பாதிப்புக்கான வீட்டு சிகிச்சை

அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

செம்பருத்தி இலை 1 கைப்பிடி, வேப்பந்தளிர் 5 - இரண்டையும் அரைத்து அப்படியே தலையில் தடவி 5 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால், வெயிலின் பாதிப்பால் மண்டைப் பகுதியில் உண்டாகிற வியர்க்குரு, அரிப்பு போன்றவை நீங்கி, கூந்தல் சுத்தமாகும். இதையே இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்பவர்கள், அரைத்த விழுதுடன் 3 டீஸ்பூன் பூந்திக்கொட்டை தூள் சேர்த்துக் கலந்து குளிக்கலாம். அது கூந்தலுக்குக் கூடுதல் பளபளப்பைத் தரும்.

*தேங்காய்ப் பால் அரை கப்,  பயத்த மாவு அரை கப், வெந்தயத் தூள் 2 டீஸ்பூன் முன்றையும் கரைசலாகக் கலக்கவும். அதை அப்படியே தலைக்கு ஷாம்பு போல உபயோகித்து அலசவும். வாரம் 2 அல்லது 3 முறை இப்படிச் செய்யலாம். தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்பாதவர்களுக்கு ஏற்ற சிகிச்சை இது. எண்ணெய் வைக்காமலேயே எண்ணெய் வைத்த மாதிரியான தோற்றத்தைத் தரும். அதிகப் பயணம் செய்கிறவர்களுக்கும், ஏ.சி. அறையிலேயே இருப்பவர்களுக்கும் கூந்தல் சீக்கிரமே வறண்டு போகும். எண்ணெய் வைத்தால் கூந்தலில் பிசுக்கும் வியர்வையும் சேர்ந்து கொள்ளும் என்பதால் அதைத் தவிர்க்க நினைப்பார்கள். அதையும் இந்த சிகிச்சை தவிர்க்கும்.

*ஒரு டீஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் துவரம் பருப்பு, 2 புங்கங்காய் மூன்றையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை அரைத்து பேக் மாதிரி போட்டு, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால் கோடையின் பாதிப்புகளில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படும்.எ ஒரு இளநீரின் வழுக்கையுடன் 3 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். க்ரீம் மாதிரியான இதைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

* ஓமம், மிளகு, வெந்தயம் மூன்றையும்தலா 1 டீஸ்பூன் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 100 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து, வாரம் ஒரு முறை தலையில் தடவி, எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற மாதிரி அலசினால், உடல் சூடு தணியும். கூந்தல் பொலிவடையும்.

அதிகப் பயணம் செய்கிறவர்களுக்கும், ஏ.சி. அறையிலேயே இருப்பவர்களுக்கும் கூந்தல் சீக்கிரமே வறண்டு போகும். எண்ணெய் வைத்தால் கூந்தலில் பிசுக்கும் வியர்வையும் சேர்ந்து கொள்ளும்.

(வளரும்!)

வி.லஷ்மி