பைல்ஸுக்கு பை... பை!



எங்கு பார்த்தாலும் போஸ்டர் ஒட்டி மருந்துக்கான விளம்பரம் அளிக்கும் அளவுக்கு அனைத்து தரப்பினரையும் வயது வேறுபாடு இல்லாமல் தாக்கும் நோய் ‘பைல்ஸ்’. அதாவது, மூலம். மூல நோயைக் குணப்படுத்த தேவையான உணவு முறைகள், மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் குறித்துப் பேசுகிறார் இரைப்பை குடலியல் மருத்துவர் தீபக் சுப்பிரமணியன்.

ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வீக்கம் அடைந்து, வெளியே நீட்டிக்கொண்டு காணப்படுவது, மூலம் (Piles) என அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் மலம் வெளியேறும் இடத்தில் மூலம் கட்டிப் போன்று காணப்படும்.   மூலநோய் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவு ஒவ்வாமையும், உணவுப்பொருட்களில் நார்ச்சத்து குறைவாக இருத்தலும் முக்கிய காரணங்கள்.

 மலம் வெளியேறும் இடத்தில் கடிக்கும் மற்றும் எரியும் தன்மை, வலி அழற்சி, வீக்கத்துடன் மலம் கழிக்கும் நேரங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல் இவை மூலத்தின் அறிகுறிகள். மூலநோய் அதனுடைய தாக்கத்தின் அடிப்படையில் கிரேடு-ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகை கிரேடுகளில், முதல் இரண்டு கிரேடு வகைகள் உள்மூலம் என்றும், மூன்றாம் மற்றும் நான்காம் கிரேடு வகைகளுக்கு வெளிமூலம் என்றும் அழைக்கப்படுகின்றன.

பெரும்பாலும் இந்த நோயை மருத்துவர்கள் தருகிற மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதனாலேயே குணப்படுத்தி விடலாம். சில நேரங்களில் இந்த நோயின் தன்மைக்கேற்ப, ஓப்பன் சர்ஜரி, ஸ்டேப்ளர் சர்ஜரி என இரண்டுவித அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓப்பன் சர்ஜரியில் வலி, ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். ஸ்டேப்ளர் சர்ஜரி நவீன அறுவை சிகிச்சை முறையாகும். இதில் வலியும் ரத்தப்போக்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆபரேஷனை ஒரு சிலருக்குத்தான் செய்ய முடியும்.

மூலநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களுடைய உணவுப்பழக்கத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அன்றாட உணவில் காரத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தினமும் பதினான்கு டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூலநோய் தீவிரமாகி, ரத்தக்கட்டி உடைந்து, அதிக அளவில் ரத்தப்போக்கு உண்டாகும். இதன் காரணமாக மூளை, இதயம் போன்ற மற்ற உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். 

விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்