உணவுத்துகளை அகற்ற உகந்த வழி!
உணவு சாப்பிட்டதும் பற்களின் இடையே சிக்கிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை சுத்தமாக்க பல் குத்தும் பழக்கம் பலரிடையே உண்டு. அது பற்களின் இடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதற்கு சரியான மாற்று ஃப்ளாஸிங். இதன் அவசியம் மற்றும் செய்யும் முறை குறித்து விளக்குகிறார் பல் சீரமைப்பு நிபுணர் கணேஷ்...
‘‘இரண்டு பற்களுக்கு இடையே சிக்கி எவ்வளவு பிரஷ் செய்தும் வராது சிக்கிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை அகற்றும் வழிமுறைக்கு ஃப்ளாஸிங் என்று பெயர். பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதியில் பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத்துகள்கள் சிக்கிக் கொள்கின்றன. ஃப்ளாஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத்துகள்களை அகற்றலாம்.
இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃப்ளாஸிங் கயிறுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டூத் பிரஷ் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களே ஃப்ளாஸிங் கயிறுகளையும் தயாரிக்கின்றன.
ஃப்ளாஸிங் கயிறு சிறிய டப்பாவில் நூல்கண்டு போல சுற்றப்பட்டிருக்கும். அதை மெதுவாக இழுத்து 15 முதல் 20 இஞ்ச் அளவுக்கு கத்தரித்துக் கொள்ள வேண்டும். இரு கைகளின் ஆள்காட்டி விரல்களிலும் கயிறைச் சுற்றி, அதன் நடுப்பகுதியை பற்களுக்கு இடையே விட்டு, சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்ற வேண்டும். மெதுவாகவும் பொறுமையாகவும் ஃப்ளாஸிங் செய்வது அவசியம்.
அசைவ உணவுகளான மட்டன், சிக்கன் போன்றவற்றை கடித்து சாப்பிடும் போது பெரிய துணுக்குகள் பற்களில் மாட்டிக்கொள்ளும். அதனால், அசைவ உணவுகளை கவனத்துடன் சாப்பிட வேண்டும்.
மேலைநாடுகளில் தினமும் ஃப்ளாஸிங் செய்வார்கள். அதுபோல தினமும் ஃப்ளாஸிங் செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவைப்படும் போது செய்தாலே போதும். ஆரம்ப காலத்தில் பல் குச்சிகளை பயன்படுத்தி உணவுத்துணுக்குகளை அகற்றி வந்தார்கள். பல் குச்சிகளை தொடர்ந்து பயன்படுத்தினால் ஈறுகள் இறங்கிவிடும். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையே பாக்டீரியா கிருமிகள் எளிதாக பரவிவிடும். இதனால் பல்சொத்தை ஏற்படக்கூடும்.
முடிந்த வரை உணவுத்துணுக்குகளை பற்களில் சேரவிடாமல் அடிக்கடி வாய் கொப்புளிப்பது நல்லது. நன்றாக வாய் கொப்புளித்து, தினம் இரண்டுமுறை பல் துலக்கினாலே போதும்... ஃப்ளாஸிங் தேவையிருக்காது.முன்பெல்லாம் பட்டினால் செய்யப்பட்ட ஃப்ளாஸிங் கயிறுகளை பயன்படுத்தி வந்தார்கள். சரியாக பயன்படுத்தவில்லையென்றால் ஈறுகளை கிழித்துவிடும். இப்போது மெழுகு தடவப்பட்டு நைலானில் செய்யப்பட்ட ஃப்ளாஸிங் கயிறுகள் கிடைக்கின்றன. இதை உபயோகிப்பது எளிதானதுதான். என்றாலும் பல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின்படி பயன்படுத்துவதே பாதுகாப்பானது...’’பல் குச்சிகளை தொடர்ந்து பயன்படுத்தினால் ஈறுகள் இறங்கிவிடும். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையே பாக்டீரியா கிருமிகள் எளிதாக பரவி பல் சொத்தை ஏற்படக்கூடும்...
- சேரக்கதிர்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்