இனி பிறந்த குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்கலாம்!
புதுக்கோட்டை மருத்துவரின் புதிய கண்டுபிடிப்பு
பிரசவ அறுவை சிகிச்சையின் (சிசேரியன்) போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்கும் புதிய முறையை கண்டுபிடித்திருக்கிறார் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் எம்.பெரியசாமி. மருத்துவ உலகின் குறிப்பிடத்தக்க சாதனை இது!
வாழ்த்துகளோடு டாக்டர் பெரியசாமியை சந்தித்து, இது பற்றி விளக்கக் கோரினோம்...‘‘உலகம் முழுவதிலும் 1996ல் 20.7 சதவிகிதமாக இருந்த சிசேரியன், 2014ல் 40 முதல் 50 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. பொதுவாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை என்பது சில நேரங்களில் திட்டமிட்டும், சில நேரங்களில் அவசர சிகிச்சையாகவும் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப்படுகிறது.
இதனால் குழந்தைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் செல்லாமல் வீணாவது தெரிய வந்தது. இவ்வாறு ரத்தம் வீணாவதைத் தடுத்து, பாதுகாத்து மீண்டும் அந்த குழந்தைக்கு அப்போதே அந்த ரத்தத்தை அனுமதிப்பது குறித்தும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. ஓராண்டு காலமாக பல்வேறு மருத்துமனைகளில்200 தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
குழந்தை பிறந்த சில நொடிகளுக்குள் தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட 100 பேரிடமும், தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்ற பிறகு தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட 100 பேரிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முறையினால் குழந்தைக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? அம்மாவுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? இதுபோன்ற விஷயங்களும் ஆராயப் பட்டன. இப்போது இந்த ஆய்வு வெற்றிகரமான முடிவுகளை கொடுத்திருக்கிறது.
பிரசவ அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்கும் இந்த புதிய முறைக்கு ®CC (Delayed cord clamping) என்று பெயர். ஸ்டெம்செல் தெரபிக்காக குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியிலிருந்து80 முதல் 120 மி.லி. வரை ரத்தம் சேகரிக்கப் படுகிறது. குழந்தைக்குப் போக வேண்டிய ரத்தம் சேகரிக்கப்படுவதைப் பார்த்த பிறகு, குழந்தைக்கே அந்த ரத்தத்தை அனுமதிப்பது குறித்த எண்ணம் ஏற்பட்டது.
சுகப்பிரசவத்தில் தொப்புள்கொடி வெட்டி எடுக்க 2 நிமிடங்கள் வரை அதாவது, அதன் நாடித்துடிப்பு (Until umbilical cord arterial pulsation) அடங்கும் வரை காத்திருப்பார்கள். இதுவே சில இடங்களில் வழக்கத்தில் இருக்கும் முறை. பிரசவ அறுவை சிகிச்சையில் இந்த முறை கடைப் பிடிக்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சையின் போது குழந்தையை எடுத்த அடுத்த 5 நொடிகளுக்குள் தொப்புள்கொடி துண்டிக்கப்படுகிறது. இதனால் 80 மி.லி. அளவுக்கு குழந்தைக்கு போக வேண்டிய ரத்தம் வீணாகிறது.
ஆரோக்கியமாக பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ முதல் 3.5 கிலோ என்கிற அளவில் இருக்கும். ஒரு கிலோவுக்கு 80 மி.லி. என்பதை ரத்தத்தின் அளவாகக் கணக் கிடுகிறோம். அதனால் 80 மி.லி. வரை ரத்தம் வீணாவது என்பது ஒரு கிலோ எடைக்கான ரத்தத்தின் இழப்பு எனலாம். சுகப்பிரசவத்தில் தொப்புள் கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்ற பிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடுகிறது...
கர்ப்பப்பையும் தானாகவே சுருங்கி விடுகிறது. அறுவை சிகிச்சையின் போது குழந்தையை எடுத்த அடுத்த 5 நொடிகளிலே தொப்புள்கொடி துண்டிக்கப்படுவதால் கர்ப்பப்பை சுருங்குவது மற்றும் நஞ்சுக்கொடி பிரிவதில் தாமதம் ஏற்பட்டு, நீண்ட நேர ரத்தப்போக்கு ஏற்படுகிறது. தாய்க்கு அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்படும் நேரத்தில் அதற்குத் தேவையான அவசர சிகிச்சையையும் மருந்துகளையும் அளிக்க வேண்டியுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் சில நொடிகளுக்குள் தொப்புள்கொடியை துண்டிக்காமல், ஓரிரு நிமிடங்கள் வைத்திருந்து, தொப்புள் கொடியிலுள்ள ரத்தம் முழுவதும் மீண்டும் குழந்தைக்குச் சென்ற பிறகு, அதைத் துண்டிக்கும் முறையைத்தான் டிசிசி என்கிறோம்.பொதுவாக குழந்தை பிறந்த ஒரு நிமிடத்துக்குள் APGAR Scoring for Newborns பார்ப்பார்கள். குழந்தை நன்றாக இருக்கிறதா? குழந்தையின் ஹெல்த் கண்டிஷன் ஓ.கே.வா? இது போன்ற விஷயங்களைக் கவனிக்கும் முறை இது. A Appearance (colour),P Pulse(heart rate), G Grimace (reflexes),A Activity(muscle tone), R Respiration... அதாவது, குழந்தையின் நிறம், இதயத்துடிப்பு, அழுகை, கை, கால் அசைவு, சுவாசம் ஆகியவை சீராக இருக்கின்றனவா என்று அறிதல்.
நிறம் இளஞ்சிவப்பாக இருந்தால் 2 புள்ளிகள், இதயத்துடிப்பு 100க்குமேல் இருந் தால் 2 புள்ளிகள், சுவாசம் ஒரு நிமிடத்துக்கு 30 தடவை என்று இருந்தால் 2 புள்ளிகள், கை, கால்கள் அசைவு நல்லபடியாக இருந்தால் 2 புள்ளிகள், சுண்டிவிட்டதும் குழந்தை அழுதால் 2 புள்ளிகள் என ஒவ்வொன்றுக்கும் இரண்டிரண் டாக மொத்தம் 10 புள்ளிகள் வழங்கப்படும். 10 புள்ளிகள் இருந்தால் பிரச்னை இல்லை. அதற்குக் கீழே இருந்தால், அந்தக் குழந்தைக்கு உடனடி சிகிச்சை தேவை என தீர்மானிப்பார்கள்.
டிசிசி முறையினால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு. டிசிசியில் 89 சதவிகிதம் குழந்தைகள் பத்துக்கு பத்து புள்ளிகள் பெறுகின்றன. உடனடியாக தொப்புள்கொடி துண்டிக்கப்படும் ஐசிசியில் (Immediate cord clamping)65 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே பத்துக்கு பத்து புள்ளிகள் பெறுகின்றன என்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
இந்த முறையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பிறகு தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் (80 மில்லிக்கும் மேலே), சுமார் ஒரு நிமிடத்தில் குழந்தைக்குச் சென்றுவிடும். இதனால் குழந்தையின் ரத்தம் வீணாவதில்லை. எடை, ஹீமோகுளோபின் மற்றும் குழந்தையின் ஆற்றலும் அதிகரிக்கிறது. தாய்க்கு ஏற்படும் ரத்த இழப்பும் குறைகிறது. இந்த ஆய்வின்படி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பிறகு தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தையைச் சென்றடைந்த பிறகு துண்டிப்பதனால், தாய் மற்றும் சேயின் ஆரோக்கியம் அதிகரிப்பதும் உறுதி.
கைக்குழந்தைக்கு உடலில் ரத்தம் இல்லாத சூழ்நிலையில் ஒருவேளை ரத்தம் ஏற்ற வேண்டி வந்தால் பெரியவர்களின் ரத்தத்தைதான் கொடுக்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு இன்னொரு குழந்தை ரத்தம் கொடுப்பது அரிது என்னும் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். டிசிசியில் (தொப்புள்கொடி ரத்தம் ஏற்றுதல் முறை) குழந்தைக்குத் தேவையான அதனுடைய ரத்தமே கிடைத்துவிடுவதால் இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதில்லை.
குழந்தையின் கிறிநிகிஸி ப்ளசண்டாவிலிருந்து வரும் ரத்தம் குழந்தைக்கு மீண்டும் செலுத்தப் பட்ட நேரம், கர்ப்பப்பையிலிருந்து நஞ்சுக்கொடி வெளிவந்த நேரம், கர்ப்பப்பை சுருங்க எடுத்துக் கொண்ட நேரம், ஏற்பட்ட ரத்த இழப்பின் அளவு, அதிகப்படியாக கொடுக்கப்பட்ட மருந்துகள் ஆகிய யாவும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டன’’ என்று புதிய நம்பிக்கையை விதைத்துள்ள டாக்டர் பெரியசாமி, இந்த ஆய்வறிக்கையை சுகாதாரத்துறை இணை இயக்குநர் எஸ்.சையதுமொய்தீன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்து அரசுக்கு அனுப்பியுள்ளார்.அறுவை சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் செல்லாமல் வீணாகிறது...
டிடிசி முறையில் குழந்தையின் ரத்தம் வீணாவதில்லை. எடை, ஹீமோகுளோபின் மற்றும் குழந்தையின் ஆற்றலும் அதிகரிக்கிறது. தாய்க்கு ஏற்படும் ரத்த இழப்பும் குறைகிறது...
ஸ்ரீதேவி மோகன் படங்கள்: எஸ்.பாண்டியன்
|