கர்ப்பத்தடை மருந்துகள்



‘இயற்கையாக கருத்தரிக்கவில்லை, குழந்தையே இல்லை' என சிறப்பு மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கும் கூட்டம் ஒருபுறம். தேவையில்லாத கர்ப்பத்தை கலைக்க, ‘இந்த கரு வேண்டாம், இந்த பிரசவம் இப்போது வேண்டாம், குழந்தை இப்போது வேண்டாம், இனி எப்போதுமே குழந்தை வேண்டாம்’ என மருத்துவரையும் மருத்துவ மனையையும் நோக்கி படையெடுக்கும் கூட்டம் ஒருபுறம். இந்தியாவிலே 1970களில் பிரபலமான கருத்தடை வழிமுறைகள் அரசு வற்புறுத்தலின் மூலம் தொடங்கப்பட்டு, விளம்பரங்களினால், மன மாற்றத்தால் மக்கள் புரிதலின் மூலம் இன்று திருமணமான தம்பதியினர் ஓரிரு குழந்தைகள் போதும் எனச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

கருத்தடை முறைகள்

1.தடுப்பு முறைகள் (Barrier Methods)
2.ஹார்மோன் மருந்துகள் (Hormonal Birth Control)
3.கர்ப்பப்பைக்குள் கருவிகள் மூலம் தடுக்கும் முறைகள் (Intrauterine Devices (IUDS)
4.கருத்தடை ஆபரேஷன்கள்.

இந்தக் கருத்தடை முறைகள் செயல்படாமல் கருத்தரிப்பது 1 சதவிகிதம் (Failure Rate). அறுவை சிகிச்சை நீங்கலாக, பெரும்பாலும் மற்ற கருத்தடை முறைகளை நிறுத்திய ஒரு வருடத்துக்குள் இயற்கையாகவே கருத்தரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.சாதாரணமாக உபயோகப்படுத்தும் காண்டம்கள், விந்து கொல்லி மாத்திரைகள் மற்றும் விந்துவை வெளியேற்றி விடும் முறை என விந்துவை கருவோடு சேரவிடாமல் தடுக்கும் ஆண், பெண் கருத்தடை முறைகள் உள்ளன. இது தவிர ஹார்மோன் கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், மேலே ஒட்டும் மருந்துகள் எனப் பலவிதமாக இருக்கின்றன. தாய்ப்பால் கொடுப்பது கூட மிகச்சிறந்த கருத்தடை வழிமுறையே.

ஹார்மோன் கருத்தடை மாத்திரைகள், ஊசி மருந்தாக, சருமத்துக்குக் கீழே மருந்துகளாக, சருமத்துக்கு மேல் ஒட்டும் மருந்துப்பட்டைகளாக, கருப்பைக்குள் வைக்கும் கருவிகளாக இருக்கின்றன. மருந்துகள் (Estrogen, Progesterone) இவை இரண்டையும் சேர்த்தும் அல்லது தனியாக (Progesterone) மட்டும் உள்ள (Minipill) மட்டும் உள்ள மருந்துகளாக கிடைக்கின்றன. இவை இரண்டுமே கருமுட்டை உருவாக்குவதைத் தடுக்கும். அதன் மூலம் கருத்தரித்தலைத் தடுக்கும். மருந்துகளை தினசரி ஒழுங்காக எடுத்தால் மட்டுமே வேலை செய்யும். கருப்பையின் உட்சுவர் வீங்குவதால் கருமுட்டை கருப்பையில் ஆழ்ந்து பதிந்து வளர்ச்சி உருவாவதைத் தடுக்கும்.

மிகக் குறைவான வர்களுக்கு (1000ல் 10 பேருக்கு) இந்த மருந்துகள் ரத்தக் குழாய்களில் ரத்தம் கட்டியாகி உறைய வழிவகுக்கும். அதே நேரத்தில் இத்தகைய கருத்தடை ஹார்மோன் மாத்திரைகள் சினைப் பையில், கர்ப்பப்பையில் புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கின்றன. இந்த மருந்துகள் மாதவிடாய் நேர ரத்தப் போக்கை குறைப்பதால், அடிவயிற்று வலியைக் குறைப்பதும் தெரிந்த விஷயம். குறைந்த அளவிலான ஈஸ்ட்ரோஜன் டோஸ் (Estrogen), பிறப்புறுப்பு வளைய (Vaginal ring) கருத்தடை முறையில் மார்பக வலி, குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற ஈஸ்ட்ரோஜன் மருந்து களாக, மாத்திரைகளாக எடுப்பதில் உள்ள பக்கவிளைவுகளைக் குறைக்கும்.

புரோஜஸ் டிரோன் (Progesterone) முறையில் உள்ள ஹார்மோன் மருந்துகளை பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்க முடியும். புரோஜஸ்டிரோன் ஊசிகளை 2 அல்லது 3 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே வருடத்துக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளும் ஊசிகளும் உள்ளன. ஊசியாக போடும்போது 3 மாதத்துக்கு மாதவிடாய் வராது. அதற்குப் பிறகு விட்டு விட்டு மாதவிடாய் வர வாய்ப்பு உண்டு. சில மாதங்கள் வராமலே போகலாம்.

அடுத்த கருத்தடை முறை, நாம் அனைவரும் அறிந்த ஆண் - பெண்களுக்கான காண்டம்களே. இது தவிர, விந்துகளை கொல்லும் மாத்திரை மருந்துகளும் உள்ளன. கருப்பைக்குள் வைக்கும் காப்பர்-டி என்பது 3 வருடங்களிலிருந்து 5 வருடங்கள் வரை உபயோகிக்கும் கருத்தடை முறை. காப்பர்- டி முறையில் கருப்பை வாயில் விந்து நுழையாது தடுக்கும் வகையில் உலோகம் (தாமிரம்) மூலம் நிரந்தரத் தடை ஏற்படுத்துவதால் கருத்தடை ஏற்படுகிறது.

மாதவிடாய் தள்ளிப்போகத் தரும் மருந்துகளை அடிக்கடி எடுப்பதனால், அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வரலாம்.வேண்டாம்!

வேறு எங்கும் தேவைப்படாத ஒரு தேவைக்காக, இந்தியப் பெண்கள் நாடுவது மாதவிடாய் தள்ளிப் போடும் மருந்துகளை (Norethisterone, Progesterone). இதிலே மருந்துக்கடை சுய மருத்துவம் வேறு. கோயிலுக்குச் செல்ல வேண்டும், வீட்டிலேயே விசேஷம் என்று பல்வேறு காரணங்கள்... பெண்களை வீட்டிலேயே ஒதுக்கி வைக்கும் மத நம்பிக்கையும் ஒரு காரணம். மாதவிடாய் தள்ளிப்போகச் செய்யும் மருந்துகளின் பெயர்களைத் தெரிந்து கொண்டு, அதையே அவ்வப்போது உபயோகிக்கிறார்கள்.

இதனாலும், அடிக்கடி ஹார்மோன் மருந்துகளை எடுப்பதாலும் மெனோபாஸ் போதோ, 40 வயதுக்கு மேலோ, அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பப்பையையே எடுக்க வேண்டி வரலாம். இதற்குத் தரப்படும் மருந்துகளும் ஹார்மோன் கருத்தடை மருந்துகளே.

டாக்டர் மு.அருணாச்சலம்